Sunday, April 1, 2012

313. வேண்டினும் கடவன்!

313. வேண்டினும் கடவன்!

பாடியவர்: மாங்குடி கிழார். இவர் மாங்குடி மருதன் என்றும் அழைக்கப்பட்டார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 24 –இல் காண்க.
பாடலின் பின்னணி: தானைத்தலைவன் ஒருவன் மிகுந்த செல்வம் இல்லாதவனாக இருந்தாலும் தன்னை நாடி வந்தோர்க்கெல்லாம் களிறுகளையும் தேர்களையும் வழங்கினான். அவனைப் பற்றி வீரர்கள் சிலர் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்ட புலவர் மாங்குடி கிழார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
கைப்பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவன் மாக்கள்
களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவன்;
உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட 5

கழிமுரி குன்றத்து அற்றே
எள்ளமைவு இன்றவன் உள்ளிய பொருளே.


அருஞ்சொற்பொருள்:
1. அத்தம் = வழி; நண்ணுதல் = நெருங்குதல்; கெழு = பொருந்திய; விறல் = வலிமை. 2. நச்சி = விரும்பி. 4. கடவன் = கடப்பாடுடையவன். 5. ஒய்தல் = இழுத்தல், செலுத்துதல்; சாகாடு = வண்டி; உமணர் = உப்பு வணிகர். 6. முரிதல் = சூழ்தல்; கழிமுரி = கழிநீர் மோதும். 7. எள்ளுதல் = இகழ்தல்; எள்ளமைவு = இகழும் தன்மை.

கொண்டுகூட்டு: பெருவிறல், இலன் எனினும் கடவன், உள்ளிய பொருள் குன்றத்தற்றாய் எள்ளமைவு இன்றெனக் கூட்டுக.

உரை: எங்கள் தலைவன் பல வழிகள் உள்ள நாட்டையுடைய பெரிய வலிமை மிக்கவன். அவன் கையில் பொருள் யாதொன்றும் இல்லை. ஆனால், பொருளை விரும்பி அவனைக் காணச் சென்ற இரவலர், யனைகளையும் தேர்களையும் விரும்பிக் கேட்டாலும் அவன் தரும் கடப்பாடுடையவன். உப்பை வண்டிகளில் சுமந்து செல்லும் உப்பு வணிகர்களின் செல்வம் உப்பளங்களில் குன்று போல் குவிந்திருக்கும் உப்புதான். அது உப்பங்கழியிலுள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. குன்றுபோல் குவிந்திருந்தாலும், உப்பு வணிகர்கள் அதை வண்டிகளில் சுமந்து செல்லச் செல்ல அது குறையும் தன்மை உடையது; கழி நீரால் கரைக்கவும் படலாம். உப்பளங்கள் கடலால் சூழப்பட்டிருப்பதால் உமணர்கள் மீண்டும் உப்பை விளைவிக்க முடியும். இத்தானைத் தலைவனின் செல்வமும் அத்தகையதுதான். செல்வமிருந்தால் இரவலர்க்கு அளிப்பதால் அவன் செல்வம் குறையும் தன்மையது. செல்வம் குறைந்தால், பகைவருடன் போரிட்டு மீண்டும் பொருள் சேகரித்து, அவன் இரவலர்க்கு அளிப்பவன். ஆகவே, உமணர்களின் செல்வமாகிய குன்றுபோல் குவிந்து கிடக்கும் உப்பும் இத்தானைத் தலைவனின் செல்வமும் ஒரே தன்மையதுதான். அதனால், அவனுடைய செல்வம் இகழ்ச்சிக்கு உரியது அல்ல.



No comments: