311. சால்பு உடையோனே!
பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களை பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: பலர்க்கும் பலவகையிலும் உதவியாக இருந்த வீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். அவன் போர் புரியும் ஆற்றலைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த ஒளவையார் இப்பாடலில் அவனைப் புகழ்கிறார்.
திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.
துறை: பாண்பாட்டு. போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தல்.
களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
பலர்குறை செய்த மலர்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச் 5
சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே.
அருஞ்சொற்பொருள்: 1. களர் = களர்நிலம்; கூவல் = கிணறு, கேணி. 2. புலைத்தி = வண்ணாத்தி; கழீஇய = வெளுத்த; தூ = தூய்மை; அறுவை = ஆடை. 3. மறுகு = தெரு; மாசுண = மாசு+உண = அழுக்குப் பற்ற. 4. குறை = இன்றியமையாப் பொருள்; தார் = மாலை. 5. மாது, ஓ – அசைச் சொற்கள்; செரு = போர். 7. தோல் = கேடகம்; சால்பு = நிறைவு.
கொண்டுகூட்டு: அறுவை மாசுண இருந்து, பலர் குறைசெய்த அண்ணற்குச் செரு வந்து ஒருவரும் இல்லை; சால்புடையோனாயினன் எனக் கூட்டுக.
உரை: களர்நிலத்தில் உள்ள கிணற்றைத் தோண்டி, நாள்தோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய ஆடை பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருவில் எழும் அழுக்குப் படிய இருந்து, பலர்க்கும் இன்றியமையாத செயல்களைச் செய்து உதவிய, மலர்மாலை அணிந்த தலைவனுக்குத் துணையாகப் போர்க்களத்தில் ஒருவரும் இல்லை. அவன் தன்னுடைய சிறப்பு மிகுந்த கண்கள் சிவந்து புகையெழ நோக்கி, ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைக்கருவிகளைத் தடுக்கும் வலிமை நிறைந்தவனாக உள்ளான்.
சிறப்புக் குறிப்பு: போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தலைப் பற்றிக் கூறும் பாடல்கள் பாண்பாட்டு என்னும் துறையில் அடங்கும். இப்பாடலில் கூறப்படும் வீரன் இறந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்கு உரியது.
No comments:
Post a Comment