308. நாணின மடப்பிடி!
பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களை பாடல் 31-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால் ஒருசிற்றூர் மன்னனுக்கும் பெருவேந்தனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், சிற்றூர் மன்னன் மிகவும் வீரத்தோடு போர் புரிந்ததைப் புலவர் கோவூர் கிழார், சிற்றூர் வீரனின் மனைவியின் கூற்றாக இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே 5
வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
சாந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்திநம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக் 10
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே.
அருஞ்சொற்பொருள்: 1. வார்த்தல் = ஊற்றுதல்; புரி = முறுக்கு. 2. பச்சை = தோல்; மிஞிறு = வண்டு; குரல் = ஓசை; சீறீயாழ் = சிறிய யாழ். 3. நயவரு = விரும்பத்தக்க. 4. எஃகம் = வேல், வாள் முதலிய படைக் கருவிகள். 7. சாந்து = சந்தனம்; தார் = மாலை; அகலம் = மார்பு. 8. விறல் = வலிமை. 9. ஓச்சுதல் = எறிதல்; துரத்தல் = எய்தல்; காலை = பொழுது. 10. புன்தலை = சிறிய தலை; மடம் = இளமை; பிடி = பெண்யானை. 11. குஞ்சரம் = யானை.
கொண்டுகூட்டு: பாண, எஃகம் முகத்தது; வேல் கழிந்தன்று; ஏந்தி ஓச்சினன் துரந்த காலை, குஞ்சரமெல்லாம் பிடி நாணப் புறக் கொடுத்தன எனக் கூட்டுக.
உரை: பொன்னால் செய்த கம்பிகளைப்போல் முறுக்கமைந்த நரம்புகளையும் மின்னலைப் போன்ற தோலையும், வண்டிசை போன்ற இசையையுமுடைய சிறிய யாழை இசைத்து, கேட்பவர்களின் நெஞ்சில் விருப்பத்தை எழுப்பும் புலமை நிறைந்த பாணனே! சிற்றூர் மன்னனின் சிறிய இலைகளையுடைய வேல், பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நெற்றியில் பாய்ந்து தங்கியது. பெருவேந்தன் சினத்துடன் எறிந்த வேல் என் கணவனுடைய சந்தனம் பூசிய, மாலைகள் அணிந்த மார்பை ஊடுருவியது. மார்பிலே பதிந்த ஒளியுடன் கூடிய விளங்கும் வேலைப் பிடுங்கிக் கையில் ஏந்தி மிக்க வலிமையுடைய நம் தலைவன் எறிந்தான். அதைக் கண்ட சிறிய தலையையுடைய இளம் பெண்யானைகள் நாணுமாறு பகைவனாகிய பெருவேந்தனின் களிறுகளெல்லாம் புறங்கொடுத்து ஓடின.
No comments:
Post a Comment