Friday, April 27, 2012

323. உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை!

323. உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை!

பாடியவர்: தெரியவில்லை.

பாடலின் பின்னணி: ஒரு தலைவனின் ஊர் நலத்தையும் அவனுடைய போர்புரியும் ஆற்றலையும் இப்பாடலில் புலவர் புகழ்ந்து பாடுகிறார். இப்பாடலில் ஒருவரி சிதைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


புலிப்பாற் பட்ட வாமான் குழவிக்குச்
சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
கா .. .. .. .. .. .. .. .. .. பரிசிலர்க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
வெள்வேல் ஆவம் ஆயின் ஒள்வாள் 5


கறையடி யானைக்கு அல்லது
உறைகழிபு அறியா வேலோன் ஊரே.

அருஞ்சொற்பொருள்: பால் = இடம்; படுதல் = இறத்தல், அழிதல், துன்புறுதல்; வாவுதல் = தாவுதல்; வாமான் = தாவும் மான்; குழவி = மான் கன்று. 2. சினம் கழி = சினம் இல்லாத; மூதா = முது+ஆ = முதிய பசு; மடுத்தல் = உண்ணுதல். 4. உள்ளியது = கருதியது; சுரத்தல் = மிகக் கொடுத்தல்; ஓம்பா ஈகை = தனக்கென சேமிக்காது பிறர்க்கு வழங்கும் கொடைத்தன்மை. 5. வெள்வேல் = ஒளிபொருந்திய வேல்; ஆவம் = போர்; ஒள்வாள் = ஒளிபொருந்திய வாள்; கறை = உரல்.

கொண்டு கூட்டு: வாமான் குழவிக்கு, மூதா ஊட்டும்; வேலோன் ஊர்.

உரை: இவ்வூரில், புலியிடம் சிக்கிக்கொண்டு இறந்த ஒருமானின், தாவும் இயல்புடைய கன்றுக்குச் சினம் இல்லாத முதிய பசு பால் கொடுக்கும். இவ்வூர்த் தலைவன், தனக்கென எதையும் சேமித்து வைத்துக் கொள்ளாமல், பரிசிலர்கள் பெற எண்ணியதை அவர்கள் எண்ணிய வாறு, தன் செல்வத்தைப் பரிசிலர்க்கு அளிக்கும் ஈகைக் குணமுடையவன். அவன் தன் ஒளி பொருந்திய வேலை எடுத்துப் போர் செய்ய வேண்டிய இடத்தில் வேலால் போர் செய்வான். உரல்போன்ற காலடிகளையுடைய யானையை வீழ்த்துவதற்கு மட்டுமே தன் ஒளிறும் வாளை உறையிலிருந்து எடுப்பான்.

சிறப்புக் குறிப்பு: யானை தொலைவில் இருந்தால் வேலாலும், அண்மையில் இருந்தால் வாளாலும் போர் செய்வது மரபு.

’உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை’ என்பது தனக்கெனப் பொருளைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளாமல், பிறர்க்கு அவர்கள் எண்ணியதை எண்ணியவாறு வரையாது வழங்கல். இத்தகைய ஈகை தன்னலம் கருதாத ஈகை.

ஒருபசு மற்றொரு பசுவின் கன்று தன்னிடம் பால் குடிக்க வந்தால் அதைச் சினந்து வெருட்டுவது பசுவின் இயல்பு. ஆனால், ஒரு பசு மான்கன்றுக்குப் பால் கொடுப்பதைக் கண்ட புலவர் அந்தக் காட்சியை வியந்து ’சினம் கழி மூதா’ என்று அதைக் குறிப்பிடுகிறார். பசு தன்னுடைய கன்றுக்காகப் பாலைச் சேமித்து வைத்துக்கொள்ளாமல் மான்கன்றுக்குத் தருவதைப் போல் இவ்வூர்த் தலைவன், தன் செல்வத்தைத் தனக்காகச் சேமித்து வைத்துக்கொள்ளாமல் பரிசிலர்களிடம் பகிர்ந்து கொள்கிறான் என்ற கருத்து இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.

No comments: