Sunday, April 1, 2012

315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!

315. இல்லிறைச் செரீஇய ஞெலிகோல்!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. இவனைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சியின் அவைக்களப் புலவராகிய ஒளவையார், இப்பாடலில் அதியமானின் குண நலன்களை எடுத்துரைக்கிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்;
மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி;
இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் 5

கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றுங் காலே.


அருஞ்சொற்பொருள்: 2. கடவர் = தரக் கடன்பட்டவர். 3. மடவர் = அறிவு முற்றாத இளைஞர். 4. செரீஇய= செருகிய; ஞெலிகோல் = தீக்கடை கோல். 6. கான்றல் = வெளிப்படுத்துதல்; சுனை = நீரூற்று; சுனைஎரி = பற்றி எரியும் தீ.

கொண்டுகூட்டு: அஞ்சி, வல்லன், ஈயும், மகிழ்துணை, தோன்றாது இருக்கவும் வல்லன், தோன்றவும் வல்லன்.

உரை: அதியமான் நெடுமான் அஞ்சி மிகுதியாக உண்வு உடையவனாயின் பரிசிலர்க்குக் கொடுத்து எஞ்சியதை உண்ணுபவன். (உணவு குறைவாக இருப்பின் உள்ளதைப் பரிசிலர்க்கு அளித்துத் தான் உண்ணாமலும் இருப்பான்.) தான் யாருக்கெல்லாம் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறனோ அவர்களுக்குக் கொடுப்பதைவிட இரவலர்க்கு அதிகமாகக் கொடுப்பான். அறியாச் சிறுவரோடும் மகிழ்ந்து அவர்களுக்குத் துணையாக இருப்பான். அவன் வீட்டு இறைப்பில் செருகப்பட்ட தீக்கடை கோல் போல் தன் ஆற்றல் வெளியே தோன்றாது ஒடுங்கி இருப்பான்; தன் ஆற்றல் வெளிப்படத் தோன்ற வேண்டுமிடத்து, தீக்கடை கோலால் கடையப்பட்ட சுடர்த்தீப் போல வெளிப்படத் தோன்றவும் செய்வான்.

No comments: