Saturday, April 7, 2012

320. இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்!

320. இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்!

பாடியவர்: வீரை வெளியனார் (320). இவரது இயற்பெயர் வெளியன். இவர் வீரை என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் வீரை வெளியனார் என்று அழைக்கப்பட்டார். வீரை என்னும் ஊர் பெண்ணையாற்றின் வடகரையில், புதுச்சேரிக்கு அருகில் இருப்பதாகவும், அவ்வூர் இக்காலத்தில் வீராம்பட்டினம் என்று அழைக்கப்படுவதாகவும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் உள்ள 320-ஆம் பாடல் ஒன்று மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: இப்பாடலில், ஒரு வேட்டுவனின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றையும், அவ்வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பும் திறத்தையும் புலவர் வீரை வெளியனார் வெகு அழகாகச் சித்திரிக்கிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
பந்தர் வேண்டாப் பலாத்தூங்கு நீழல்
கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட 5


இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்
இல்வழங் காமையின் கல்லென ஒலித்து
மான்அதள் பெய்த உணங்குதினை வல்சி 10


கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்து இட்ட முழுவள் ளூரம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
தங்கினை சென்மோ, பாண! தங்காது 15


வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.

அருஞ்சொற்பொருள்: 1. முன்றில் = முற்றம்; முஞ்ஞை = முன்னைக் கொடி; முசுண்டை = ஒருவகைக் கொடி; பம்புதல் = செறிதல் (அடர்த்தியாக இருத்தல்). 2. பந்தர் = பந்தல்; தூங்கல் = தாழ்தல், தணிதல். 3. கைம்மான் = யானை; கனை = மிகுதி; மடிதல் = தலைசாய்தல், வாடுதல். 4. பார்வை = கவனம், மயக்கு; மடம் = இளமை; பிணை = பெண்மான்; மடப்பிணை = இளம் பெண்மான்; தழீஇ = தழுவி. 5. தீர்தல் = ஒழிதல், நீங்கல்; கலை = ஆண்மான்; திளைத்தல் = மகிழ்தல், அனுபவித்தல். 8. தீர்தல் = விலகி ஓடிவிடல். 9. கல் – ஒலிக் குறிப்பு. 10. அதள் = தோல்; உணங்க = உலர்ந்த; வல்சி = அரிசி.11. கானம் = காடு; இதல் = காடை, கெளதாரி. 12. ஆரம் = சந்தன மரம்; ஆரல் = ஒருவகை மீன். 13. தடி = வெட்டு; வள்ளூரம் = தசை. 14. இரு = பெரிய; ஒக்கல் = சுற்றம். 15. தங்காது = குறையாது. 16. விழு = சிறந்த; கூழ் = பொன். 17. அருகாது = குறையாது. 18. உரை = புகழ்; சால் = நிறைவு; ஓம்புதல் = பாதுகாத்தல்.

கொண்டு கூட்டு: ஊர் தங்கினை; சென்மோ, பாண எனக் கூட்டுக.

உரை: யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடியும் முசுண்டைக் கொடியும் அடர்த்தியாகப் படர்ந்து இருந்ததால் அங்குப் பந்தல் தேவையில்லாமல் நிழல் மிகுதியாக இருந்தது. பலாமரத்திலிருந்து பலாப்பழங்கள் அங்கே தொங்கிக்கொண்டிருந்தன. அந்த முற்றத்தில், அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். மான்களைப் பிடிப்பதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட இளம்பெண்மான் (பார்வை மான்) ஒன்றை, வேறு தொழில் எதுவும் இல்லாத ஆண்மான் ஒன்று தழுவிப் புணர்ந்து மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருந்தது. கணவனைக் காண வந்த வேட்டுவனின் மனைவி, மான்கள் புணர்ச்சி இன்பத்தைஅனுபவிப்பதையும், கணவன் மெய்மறந்து உறங்குவதையும் கண்டாள். தான் ஏதாவது ஒலியெழுப்பினால், கணவன் விழித்துக்கொள்வான் என்றும் மான்களின் புனர்ச்சி இன்பம் தடைப்பட்டு ஆண்மான் பெண்மானை விட்டு விலகி ஓடிவிடும் என்றும் எண்ணி அஞ்சி, வீட்டில் நடமாடாமல் ஒரு பக்கமாக, ஒலி யாதும் எழுப்பாமல் ஒதுங்கி இருந்தாள்.

அங்கு, பாணன் ஒருவன் தன் சுற்றத்துடன் வந்தான். முற்றத்தில் மான்தோலில் உலர்ந்துகொண்டிருந்த தினை அரிசியைக் காட்டுக் கோழி, காடை, கெளதாரி போன்ற பறவைகள் ஆரவாரத்துடன், கவர்ந்து தின்று கொண்டிருந்தன. அவ்வேட்டுவனின் மனைவி, அவற்றைப் பிடித்து, சந்தனக் கட்டையால் மூட்டிய தீயில் சுட்டுத், துண்டு துண்டாக்கி, அறுத்த இறைச்சியை ஆரல் மீனின் மணம் கமழச் சமைத்தாள். பின்னர், பாணனை நோக்கி, “இவ்வூரைப் பாதுக்காக்கும் எம் தலைவன், வேந்தன் தனக்குத் தரும் சிறப்பான பெருஞ்செல்வத்தை என்றும் தன்பால் வரும் பரிசிலர்க்குக் குறையாமல் கொடுக்கும் வள்ளல் தன்மையையும் புகழையும் உடையவன். பாணனே! தாங்கள் இங்கே உங்கள் பெரிய சுற்றத்துடன் நான் சமைத்த உணவை இனிதே உண்டு, தங்கிச் செல்க” என்று கூறுகிறாள்.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், வேட்டுவனின் மனைவியின் விருந்தோம்பலையும், வேந்தனின் வள்ளல் தன்மையையும், அவ்வூர்த் தலைவனின் வள்ளல் தன்மையையும் மிகவும் நயம்படப் புலவர் வீரை வெளியனார் கூறியிருப்பது பாராட்டுக்குரியது.

No comments: