Sunday, April 1, 2012

307. யாண்டுளன் கொல்லோ!

307. யாண்டுளன் கொல்லோ!

பாடியவர்: தெரியவில்லை.
பாடலின் பின்னணி: போர்க்களத்தில் வீரன் ஒருவன் சிறப்பகப் போர் புரிந்து தன்னைத் தாக்க வந்த களிற்றைக் கொன்று தானும் இறந்தான். அதைக் கண்ட அவனுடைய மன்னன் தானும் அவ்வாறு போர் செய்து இறப்பதே சிறந்தது என்று முடிவு செய்தான். அந்தக் காட்சியை இப்பாடலில் புலவர் கூறுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: களிற்றுடனிலை. தன்னால் கொல்லப்பட்ட யானையோடு ஒருவீரன் தானும் வீழ்ந்து மடிதலைக் கூறுதல்.

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
வேனல் வரி அணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்றுகு முதுவீ 5


அரியல் வான்குழல் சுரியல் தங்க
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு 10


வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்லெனப்
பண்கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே.

அருஞ்சொற்பொருள்: 1. ஆசு = பற்று; யாண்டு = எங்கு, எப்பொழுது. 3. வம்பலன் = புதியவன்; உது = அது (சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்.). 4. வேனல் = வேனிற்காலம்; வாலம் = வால். 5. கானம் = காடு; ஊகம் = ஒருவகைப் புல்; உகுதல் = உதிர்த்தல்; வீ = பூ; 6. அரியல் = அறுத்த வைத்த வரிசை ;வான் = பெருமை; சுரியல் = சுருண்ட தலைமயிர். 8. சிறை = பக்கம்; முடம் = நொண்டி. 9. பகடு = எருது; ஏய்ப்ப = போல; தெறுவர் = பகைவர். 12. எஞ்சல் = இறத்தல். 13. பண் = புலவர் பாடும் பாடல். 14. வ்விழ்தல் = விரும்புதல்; புரைமை = உயர்வு.

கொண்டுகூட்டு: பட்டோன், முதுவீ அரியல் சுரியல் தங்குதலால், உதுக்காண், வம்பலன் போலத் தோன்றும்; வான்பகடு ஏய்ப்பத் தெறுவர் பேருயிர் கொள்ளும்; அது கண்டு வேந்தனும் இல்லெனவும் நோக்கியும் வீழ்ந்த புரைமையோன்; ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ எனக் கூட்டுக.

உரை: வேனிற் காலத்தில் வரிகளையுடைய அணிலின் வாலைப்போல், காட்டு ஊகம் புல்லிலிருந்து உதிர்ந்த பழைய பூக்கள் வரிவரியாகப் பெரிய சுருண்ட தலைமயிரில் தங்குவதால், அவன் அயலான் போலத் தோன்றுகிறான் ( அவனைப் பார்த்தால் அடையாளம் தெரியவில்லை.). அங்கே அவனைப் பார்! மலை போன்ர யானையைக் கொன்று அதனோடு அவனும் இறந்தான். முடமாகியதால் உமணர்களால், நீரும் புல்லும் இல்லாமல் கைவிடப்பட்ட, வாழும் திறனில்லாத எருது தன்னருகே உள்ளதை எல்லாம் தின்று முடிப்பதைப்போல், அவ்வீரன், பகைவர்களின் உயிர்களை எல்லாம் கொன்று அவனும் இறந்தான். அதைக் கண்ட, மிகுந்த சினம் கொண்ட யானையையுடைய வேந்தன், இக்களத்தில் இறப்பதைவிடச் சிறந்த செயல் வேறு யாதும் இல்லை என்று கருதியும், புலவர் பாடும் பாடல் பெறுவதர்குரிய அருமையை நினைத்தும், உயிர்மேல் ஆசையின்றிப், போர் செய்து இறக்க விரும்பினான். எமக்குப் பற்றாகிய எம் தலைவன் எங்கு உளணோ?

No comments: