Sunday, April 1, 2012

316. சீறியாழ் பணையம்!

316. சீறியாழ் பணையம்!

பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார். இவர் இயற்பெயர் வெண்ணாகனார். கள்ளில் என்பது தொண்டை நாட்டில் உள்ள ஓரூர். அவ்வூரைச் சார்ந்த கடையத்தன் என்பவரின் மகனாகையால் இவர் கள்ளில் கடையத்தன் வெண்ணாகனார் என்று அழைக்கப்பட்டார். இவர் மதுரையில் வாழ்ந்ததால் மதுரைக் கள்ளில் கடையத்தன் வெண்ணாகனார் என்று அழைக்கப்பட்டதாக ஒளவை துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.
பாடலின் பின்னணி: ஒருகால், ஓரூரில் ஒருஅரசன் மற்றொரு அரசனுடன் போரிட்டான். போரில் பகையரசன் இறந்தான். வெற்றிபெற்ற அரசன் விடியற்காலைவரை கள்ளுண்டு மயங்கிக் கிடந்தான். அவனிடம் பரிசில் பெற்றுவரும் பாணர்களின் தலைவன், அவன் வரும்வழியில் வேறு சில பாணர்களைக் கண்டான். அப்பாணர் தலைவன் வழியில் வந்த பாணர்களைக் கள்ளுண்டு மயங்கிக் கிடக்கும் அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே!
அவன்எம் இறைவன்; யாம்அவன் பாணர்;
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் 5

இரும்புடைப் பழவாள் வைத்தனன்; இன்றுஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்; இதுகொண்டு
ஈவது இலாளன் என்னாது நீயும்
வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச் 10

சென்றுவாய் சிவந்துமேல் வருக
சிறுகண் யானை வேந்து விழுமுறவே.


அருஞ்சொற்பொருள்: 2. காட்டு = செத்தை, சருகு; மிடைதல் = செறிதல், கலத்தல்; சீத்தல் = தூய்மை ஆக்குதல்; சீயா = தூய்மை செய்யப்படாத; முன்றில் = முற்றம். 3. செருக்கு = மயக்கம்; அனந்தர் = மயங்கிய நிலை; துஞ்சுதல் = தூங்குதல். 5. நெருநை = நெருநல் = நேற்று. 6. இரு = பெரிய; புடை = பக்கம். 7. பணையம் = பந்தயப் பொருள் (பணயம்). 9. வள்ளி = ஒரு கொடி; மருங்குல் = இடை; வயங்கல் = ஒளி செய்தல்; இழை = அணிகலன். 12. விழுமுறுதல் = துன்புறுதல்

கொண்டுகூட்டு: வேந்து விழுமுறவே கள்ளின் வாழ்த்தித் துஞ்சுவோனாகிய அவன் இறைவன்; யாம்அவன் பாணர்; நெருனை இரும்புடைப் பழவாள் வைத்தனன்; சீறியாழ் பணையம்; இதுகொண்டு ஈவதுஇலாளன் என்னாது, நீயும், அணிய, தூங்கச் சென்று வாய் சிவந்து மேல் வருக எனக் கூட்டுக.
உரை: சிறிய கண்களையுடைய யானையையுடைய பகைவேந்தன் போரில் விழுந்து இறந்தான். அதனால், கள்ளை வாழ்த்தி, செத்தைகள் நிறைந்த , தூய்மை செய்யப்படாத முற்றத்தில் விடியற் காலத்தில் உண்ட கள்ளின் மயக்கத்தால் உறங்குகின்றானே அவன் எம் இறைவன் (அரசன்). நாங்கள் அவனுடைய பாணர்கள். நேற்று, தன்னிடம் வந்த விருந்தினரைப் பேணுதற்குத் தன் பெரிய பழமையன வாளை ஈடு வைத்தான். இது உண்மை என்பதற்காக , நாங்கள் எங்களுடைய கரிய தண்டையுடைய சிறிய யாழைப் பணையமாகக் வைக்கின்றோம். அவன் ஒன்றும் இல்லாதவன் என்று எண்ணாமல், நீயும் கொடிபோன்ற இடையையுடைய உன் பாடினியும் அவனிடம் சென்று அவன் அளிக்கும் விளங்கும் அணிகலன்களை அணிந்து வாய் சிவக்குமாறு விருந்து உண்டு வருக. கள்ளையுடைய கலங்களையுடைய நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம்.

No comments: