Sunday, April 1, 2012

309. என்னைகண் அதுவே!

309. என்னைகண் அதுவே!

பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கோசிகனார். இவரது இயற் பெயர் கோசிகன். இவர் மதுரையைச் சார்ந்த இளங்கண்னி என்பவரின் மகன் என்று கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ஒருவீரன் போரில் பகைவர் பலரையும், களிறுகள் பலவற்றையும் கொன்று குவிப்பது ஒரு அரிய செயல் அன்று. அது வீரர் பலருக்கும் பொதுவான செயலே. தன் பெயரைக் கேட்டவுடன் பகைவர்கள் உள்ளத்தில் அச்சத்தை உண்டாக்குபவன்தான் சிறந்த வீரன் என்ற கருத்தைப் புலவர் கோசிகனார் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: நூழிலாட்டு. ஒருவீரன் பகைவர் படை அழியுமாறு தன் மார்பில் பட்ட வேலைப் பறித்து எறிதல்.


இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை 5


உளன்என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே.


அருஞ்சொற்பொருள்: 1. இரும்பு = படைக்கலம்; முகம் = நுனி; நூறி = அழித்து; ஒன்னார் = பகைவர். 2. இரு = பெரிய; சமம் = போர்; கடத்தல் = வெல்லுதல்; ஏனோர் = மற்றவர். 3. அரா = பாம்பு. 5. மாற்று = ஒழிக்கை; மாற்றுதல் = அழித்தல்; துப்பு = வலிமை; மாற்றார் = பகைவர். 6. வெருஉ = வெருவு = அச்சம்; ஓர் = ஒப்பற்ற; ஒளி = புகழ். 7. வலன் = வெற்றி; என்னை = என்ன்+ஐ = என் தலைவன்; கண் = இடம்.

கொண்டுகூட்டு: கடத்தல் ஏனோர்க்கும் எளிது; ஒளி என்னை கண்ணதே எனக் கூட்டுக.

உரை: இரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா வீரர்களுக்கும் எளிதாகும். நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும், கண்டாரைக் கொல்லும் காளை திரியும் பொதுவிடம் போலவும், வெல்லுதற்கு அரிய வலிமையுடைய பகைவர், இவன் பாசறையில் உள்ளான் எனக் கேட்டு நெஞ்சம் நடுங்கும்படியான சிறந்த புகழ், வெற்றி மிக்க நெடிய வேலினையுடைய நம் தலைவனிடம் மட்டுமே உள்ளது.

சிறப்புக் குறிப்பு: இரும்பு என்றது ஆகுபெயராகி, இரும்பால் செய்யப்பட்ட வேல், வாள் முதலிய படைக்கருவிகளைக் குறிக்கின்றது.

No comments: