Sunday, April 1, 2012

314. மனைக்கு விளக்கு!

314. மனைக்கு விளக்கு!

பாடியவர்: ஐயூர் முடவனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 51-இல் காண்க.
பாடலின் பின்னணி: போரில் பல வெற்றிகளைப் பெற்ற தலைவன் ஒருவனைப் பற்றி அவனுடைய வீரர்கள் உரையாடிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஐயூர் முடவனார் இப்பாடலில் தாம் கேட்ட செய்திகளைத் தொகுத்து வழங்குகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.



மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்
புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
குடியும் மன்னுந் தானே; கொடியெடுத்து 5

நிறையழிந்து எழுதரு தானைக்குச்
சிறையும் தானேதன் இறைவிழு முறினே.

அருஞ்சொற்பொருள்: 1. வாள் = ஒளி; நுதல் = நெற்றி. 2. முனை = போர்க்களம்; வரம்பு = எல்லை, ஒழுங்கு. 3. பிறங்குதல் = நிறைதல்; உவல் = தழை; பறந்தலை = பாழிடம். 4. காழ் = விதை; வன்புலம் = புன்செய் நிலம். மன்னும் – அசைநிலை. 6. நிறை = கட்டு. 7. சிறை = அணை; விழும் = விழுமம் (துன்பம்)

கொண்டு கூட்டு: கணவனும் நெடுந்தகையுமாகிய தலைவன் குடியும் தானே; சிறையும் தானே.

உரை: எம் தலைவன், இல்லத்திற்கு விளக்குபோல் விளங்கும் ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்ணின் கணவன். அவன், போரில் தன் படைக்கு எல்லையாக நின்று காக்கும் வெற்றி பொருந்திய வேலையுடைய நெடுந்தகை. நடுகற்களும் தழைகளும் நிறைந்த பாழிடங்களும், சிறிய கொட்டைகளையுடைய நெல்லி மரங்கள் உள்ள சிறிய ஊரில் வாழும் குடிமக்களில் அவனும் ஒருவன். தனது அரசனுக்குத் துன்பம் வந்தால், தானே கொடியை உயர்த்திக் கட்டுக்கடங்காது வரும் படையை அணைபோலத் தடுத்து நிறுத்துபவனும் அவனே.

No comments: