324. உலந்துழி உலக்கும்!
பாடியவர்: ஆலத்தூர் கிழார் (34, 36, 69, 225, 324). ஆலத்தூர் சோழநாட்டில் உள்ள ஓரூர். அவ்வூரைச் சார்ந்தவராகவும் வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன் நலங்கிள்ளியையும் பாடியுள்ளார். இவர் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் இயற்றியது மட்டுமல்லாமல், குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (112, 350) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: ஒருகால், ஒரு சிற்றூரின் தலைவன் ஒருவன் போர்களில் வெற்றிபெற்றுப் புகழுடன் விளங்கினான். அவன் பெரும்புகழுக்குரியவனாக இருந்தாலும் தன்னை நாடிவந்த பாணர்களுடன் மிகவும் எளிமையாகப் பழகுபவன். அவன் வீரத்தையும், பாணர்களோடு பழகும் எளிமையையும், அவன் அரசனுக்கு உறுதுணையாக இருப்பதையும் இப்பாடலில் புலவர் ஆலத்தூர் கிழார் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
வெருக்குவிடை அன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
சிறியிலை உடையின் சுரையுடை வான்முள்
ஊக நுண்கோல் செறித்த அம்பின் 5
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
குமிழ்உண் வெள்ளைப் மறுவாய் பெயர்த்த
வெண்காழ் தாய வன்காற் பந்தர் 10
இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
வலம்படு தானை வேந்தற்கு
உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே.
அருஞ்சொற்பொருள்: 1. வெருகு = காட்டுப் பூனை; விடை = எருது; வெருள் = அச்சம்; கயந்தலை = பெரிய தலை. 2. கயவாய் = பெரிய வாய். 3. வெள்வாய் = வெளுத்த வாய்; வீழ்தல் = விரும்புதல்; மகாஅர் = இளைஞர்கள். 4. சுரை = துளை; வால் = வெண்மை. 5. ஊகம் = ஒருவகைப் புல். 6. வலாஅர் = வளார் (இளங்கொம்பு); குலவு = வளைவு; கோலல் = வளைத்தல். 7. கருப்பை = எலி. 8. புன்புலம் = வலியநிலம்; தழீஇய = தழுவிய; அம் = அழகு. 9. குமிழ் = ஒருவகைச் செடி; வெள்ளை – வெள்ளாட்டைக் குறிக்கிறது; மறுவாய் = பின்வாய் (மலவாய்) . 10. காழ் = விதை, கொட்டை, பிழுக்கை; தாய = பரந்து கிடக்கின்ற; வன்கால் = வலியகால். 11. பொத்துதல் = தீ மூட்டுதல். 13. வலம் = வலி; படுதல் = தோன்றல்; வலம்படு தானை = வலிமையான படை. 14. உலத்தல் = கெடுதல்; உலந்துழி = கேடுவந்த பொழுது.
கொண்டு கூட்டு: சீறூர் நெடுந்தகை, வேந்தற்கு நெஞ்சறிதுணை.
உரை: இவ்வூரிலுள்ள வேட்டுவர்களின் சிறுவர்கள், ஆண் காட்டுப் பூனையின் பார்வை போன்ற அச்சம் தரும் பார்வையையும், பெரிய தலையையும், பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் வீசும் பெரிய, வெளுத்த வாயையும் உடையவர்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் விரும்புபவர்கள். அவர்கள் சிறிய இலையைக்கொண்ட உடைமரத்தின் துளையமைந்த வெண்ணிற முள்ளை, ஊகம் புல்லின் சிறிய தண்டில் செருகி, வளாரால் செய்யப்பட்ட வலியவில்லில் வைத்து வளைத்து, பருத்தி வேலியின் அடியில் தங்கியிருக்கும் எலியைக் குறிபார்த்து அம்பை எய்வர். இவ்வூர்அத்தகைய புன்செய் நிலம் சூழ்ந்த அழகிய குடிகளை உடைய சிறிய ஊர். இவ்வூரின் பெருமைக்குரிய தலைவன், குமிழம் பழத்தை உண்ணும் வெள்ளாடுகள் இட்ட வெண்ணிறமுள்ள பிழுக்கைகள் பரந்து கிடக்கின்ற, வலிய தூண்கள் உள்ள பந்தலின்கீழ், இடையன் கொளுத்திய சிறிய தீயின் வெளிச்சத்தில், பாணர்களுடன் நாணமாகிய நற்பண்போடு பழகுபவன். வெற்றி பயக்கும் படையையுடைய வேந்தன் துன்பப்படும்பொழுது, இவ்வூர்த் தலைவனும் அவனோடு சேர்ந்து துன்பப்படுபவன். அவன் வேந்தனுக்கு உணர்வால் ஒத்த உயிர்த் துணைவன்.
சிறப்புக் குறிப்பு: ’வெள்வாய்’ என்பதற்கு, ஒளிவு மறைவின்றிப் பேசுபவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். புகழும் வீரமும் பொருந்திய குடிகள் வாழ்வதால் அவ்வூரை ‘அங்குடி” என்று புலவர் புகழ்கிறார். ’நாணுடை நெடுந்தகை’ என்பது, அறநெறியிலிருந்து தவறிய செயல்களைக் காண்பதற்கும் செய்வதற்கும் நாணும் பெருந்தன்மை மிக்கவன் என்ற பொருளில் கூறப்பட்டிருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். ‘உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணை’ என்பது அரசனுக்குத் துன்பம் வந்தபொழுது, அதை உணர்ந்து தன் உயிரையும் கொடுக்கும் உண்மை நண்பன் என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment