317. யாதுண்டாயினும் கொடுமின்!
பாடியவர்: வேம்பற்றூர்க் குமரனார் (317). இவரது இயற் பெயர் குமரன். இவர் வேம்பற்றூர் என்னும் ஊரைச் சார்ந்தவராகையால் வேம்பற்றூர்க் குமரனார் என்று அழைக்கப்பட்டார். வேம்பற்றூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் உள்ளன. இவர் அகநானூற்றில் ஒரு பாடலும் ( 268) புறநானூற்றில் ஒரு பாடலும் (317) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவனின் வள்ளல் தன்மையை இப்பாடலில் புலவர் வேம்பற்றுர்க் குமரனார் குறிப்பிடுகிறார். இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
வென்வேல் .. .. .. .. .. .. நது
முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே;
வேட்கை மீளப .. .. .. .. .. .. 5
.. .. .. .. கும், எமக்கும், பிறர்க்கும்,
யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே.
அருஞ்சொற்பொருள்: 1. வென்வேல் = வெற்றி பயக்கும் வேல். 2. முன்றில் = முற்றம்; களியாளன் = களிப்பேறியவன். 3. அதள் = தோல்; பாய் = ஓலையால் செய்யப்பட்ட பாய். 4. வல் = விரைவு. 7. துயில் = தூக்கம்.
உரை: வெற்றி பயக்கும் வேலோடு வந்து, முற்றத்தில் மிகுந்த களிப்புடன் கிடக்கும் இவனுக்கு, படுப்பதற்குத் தோல், பாய் அல்லது வேறு எது இருந்தாலும் விரைந்து கொடுப்பீர்களாக. இவன் எங்களுக்கும், மற்றவர்களுக்கும், யாவருக்கும் கொடை புரிந்த பின்னர் உறக்கத்தை மேற்கொள்பவன். இவன் வெறுந்தரையில் கிடக்கிறானே!
சிறப்புக் குறிப்பு: தலைவன் பாணர்களுக்கும், இரவலர்களுக்கும், மற்றவர்களுக்கும் பொருளும் உணவும் பெருமளவில் அளித்து அவர்களை மகிழ்வித்து, அவர்கள் உறங்கிய பின்னர் உறங்கும் குணமுடையவன் என்பதையும் அத்தகையவன் முற்றத்தில் வெறுந்தரையில் மயங்கிக் கிடப்பதைக் கண்ட பாணர் (அல்லது இரவலர்கள்) வருந்துவதையும் இப்பாடலில் காண்கிறோம்.
No comments:
Post a Comment