Friday, April 27, 2012

322. கண்படை ஈயான்!

322. கண்படை ஈயான்!

பாடியவர்: ஆவூர்கிழார் (322). இவரது இயற்பெயர் தெரியவில்லை. ஆவூர் என்னும் ஊரைச் சார்ந்த வேளாண் மரபினராக இருந்ததால், இவர் ஆவூர் கிழார் என்று அழைக்கப்பட்டார். ஆவூர் என்ற பெயருடைய ஊர்கள் தஞ்சை மாவட்டத்திலும், வட ஆர்க்காடு மாவட்டத்திலும் இருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். புறநானூற்றில் உள்ள 322- ஆம் பாடலைத் தவிர, சங்க இலக்கியத்தில் இவருடைய பாடல்கள் வேறு எதுவும் காணப்படவில்லை.


பாடலின் பின்னணி: வீரன் ஒருவன் போர்புரிவதில் மிகவும் ஆற்றலுடையவனாக இருக்கிறான். அவனை நினைக்குந் தோறும், பகைவேந்தர்கள் அச்சம் மிகுந்து உறக்கமின்றி உள்ளனர். அவ்வீரன் வாழும் ஊர் முல்லை நிலத்தில் உள்ள ஒருசிற்றூர். அவ்வூரில் நடைபெறும் ஒருநிகழ்வை இப்பாடலில் புலவர் ஆவூர் கிழார் குறிப்பிடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய 5


மன்றிற் பாயும் வன்புலத் ததுவே;
கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
தண்பணை ஆளும் வேந்தர்க்குக்
கண்படை ஈயா வேலோன் ஊரே. 10

அருஞ்சொற்பொருள்: 1. ஊர்தல் = ஓய்ந்து நடத்தல்; ஊழ்த்தல் = தோன்றுதல் (மலர்தல்); கோடு = கொம்பு. 2. கவை = பிளவு; பொரித்தல் = தீய்தல், வெடித்தல்; அரை = அடிப்பாகம். 3. அரிகால் = அரிந்துவிட்ட தாள்; கருப்பை = எலி. 4. புன்தலை = இளந்தலை; ஆர்ப்பு = ஆரவாரம். 5. கலன் = பாத்திரம். 6. மன்று = வாயில் முற்றம்; வன்புலம் = வலிய நிலம். 7. எந்திரம் = கரும்பு ஆலை; சிலைத்தல் = ஒலித்தல்; அயல் = அருகிலுள்ள இடம். 8. இரு = பெரிய; சுவல் = பிடர் (கழுத்து); வாளை = ஒரு வகை மீன்; பிறழ்தல் = துள்ளுதல். 9. தண்பணை = மருத நிலம். 10. கண்படை = உறக்கம், மனிதர்களின் படுக்கை.

கொண்டு கூட்டு: வேலோன் ஊர் வன்புலத்ததுவே; ஆர்ப்பின், முயல் மன்றில் பாயும்; சிலைப்பின் வாளை பிறழும் வேந்தர்க்குக் கண்படை ஈயான் எனக் கூட்டுக.

உரை: நிலத்தை உழுது களைப்படைந்து ஓய்ந்த நடையோடு செல்லும் காளையின் தலையில் முளைத்த கொம்பு போல், பிளவுபட்டு, முட்களும் வெடிப்புகளும் உடைய கள்ளிச் செடியின் பொரிந்த அடிப்பகுதியில் இருந்துகொண்டு, புதிதாக அறுத்த வரகின் அடித்தாளில் மேயும் எலியைப் பிடிப்பதற்குத் தக்க சமயம் பார்க்கும் சிறுவர்கள் தங்கள் கையில் வில்லை எடுத்துக்கொண்டு ஆரவாரம் செய்வர். அந்த ஒலியைக் கேட்ட, பெரிய கண்களையுடைய சிறிய முயல், அடுப்பில் ஏற்றிக் கரிபிடித்த பாத்திரங்கள் உடையுமாறு உருட்டித் தள்ளிவிட்டு வீட்டு முற்றத்தில் பாயும். எங்கள் தலைவனுடைய ஊர் அத்தகைய வலிய நிலம். இவ்வூரில் உள்ள எங்கள் தலைவன், கரும்பை ஆட்டும் ஆலைகளின் ஒலியால் அருகே உள்ள நீர்நிலைகளில், பெரிய கழுத்தையுடைய வாளைமீன்கள் துள்ளிப் பாயும் வளமான மருதநிலத்து ஊர்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்குக் கண்ணுறக்கம் இல்லாமல் செய்யும் வேலை உடையவன்.

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் கூறப்படும் தலைவன் வாழும் ஊர் வலிய நிலத்தில் உள்ள ஒருசிற்றூர் என்ற கருத்தும், அவன் வலிய நிலத்திலுள்ள சிற்றூருக்குத் தலைவனாக இருந்தாலும் வளமான மருதநிலங்களையுடைய வேந்தர்கள் அவனுடைய போர்புரியும் ஆற்றலை எண்ணி அஞ்சி உறக்கமின்றி வருந்துகின்றனர் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.

No comments: