Saturday, April 7, 2012

318. பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே!

318. பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே!

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 147-இல் காண்க.

பாடலின் பின்னணி: குடக்கோ இளஞ்சேரல், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆகியோரைப் பாடிப் பெருஞ்செல்வம் பெற்ற சிறப்பிற்குரியவர் புலவர் பெருங்குன்றூர் கிழார். வையாவிக் கோப்பெரும் பேகன் அவன் மனைவியைத் துறந்து மற்றொருத்தியோடு வாழ்ந்த பொழுது, இவர்அவனை அவன் மனைவியுடன் வாழுமாறு அறிவுரை கூறியவர். ஒருநாள், தன் வேந்தன் பொருட்டுப் பெரும்போர் புரிந்து அதில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவனை இவர் கண்டார். ’அவ்வேந்தன், போரில் துன்புற்றிருப்பானாயின், இத்தலைவனுக்கு வேந்தனிடம் இருந்து செல்வம் கிடைத்திருக்காது. இத்தலைவனுடைய ஊர் பசியால் வாடும்.’ என்ற கருத்தை இப்பாடலில் புலவர் பெருங்குன்றூர் கிழார் குறிப்பிடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


கொய்யடகு வாடத், தருவிறகு உணங்க
மயில் அஞ்சாயல் மாஅ யோளொடு
பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே;

மனையுறை குரீஇக் கறையணற் சேவல்
பாணர் நரம்பின் சுகிரொடு வயமான் 5


குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்துதன்
புன்புறப் பெடையடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே.

அருஞ்சொற்பொருள்: 1. கொய்தல் = பறித்தல்; அடகு = கீரை; உணங்கல் = காய்தல் . 2. சாயல் = அழகு; மாயோள் = மாமை நிறமுடையவள் (கரிய நிறமுடையவள்). 3. பசித்தன்று = பசித்தது; அம்ம – அசைச் சொல். 4. உறைதல் = வசித்தல்; குரீஇ = குருவி; கறை = கறுப்பு நிறம்; அணல் = கழுத்து; கறைஅணல் = கரிய கழுத்து. 5. சுகிர்தல் = கிழித்தல், வடித்தல், வகிர்தல்; வயமான் = சிங்கம். 6. குரல் செய்தல் = இறுமாத்தல்; பீலி = மயிர்; குடம்பை = கூடு. 7. செய் = வயல்; ஆர்தல் = உண்ணுதல். 8. பெடை = பெண்பறவை; வதித்தல் = தங்குதல், வாழ்தல். 9. யாணர் = புதுவருவாய், செல்வம்; விழுமுறுதல் = துன்புறுதல்.

கொண்டு கூட்டு: வேந்து விழுமுறின், மயிலஞ் சாயல் மாஅயோளொடு ஊர் பசித்தன்று; யாணர்த்தாகும் பெருந்தகை ஊரே எனக் கூட்டுக.

உரை: வேந்தனுக்குத் துன்பம் வந்தால், இவ்வூர்த் தலைவனின் வீட்டில், பறித்த கீரை சமைக்கப் படாமல் வாடி வதங்கும்; கொண்டு வந்த விறகு உலர்ந்து கெடும்; அவனுடைய மயில் போன்ற சாயலும், கரிய நிறமும் உடைய மனைவி பசியால் வாடுவாள். அவள் மட்டுமல்லாமல், இப்பெருந்தகையின் ஊரே பசியால் வாடும். வேந்தனுக்குத் துன்பம் இல்லையானால், இவ்வூர் புதுவருவாய்உடையதாக இருக்கும். இந்த வளமான ஊரில், வீடுகளின் இறைப்பில் உள்ள பெண்குருவியின் துணையாகிய கரிய கழுத்தையுடைய ஆண்குருவி, பாணர்களுடைய யாழ் நரம்பின் துண்டுகளுடன், வலிமிக்க, இறுமாப்புடைய சிங்கத்தின் உதிர்ந்த பிடரி மயிரும் சேர்த்துச் செய்த கூட்டில், பெரிய வயலில் விளைந்த நெல்லின் அரிசியைக் கொண்டுவந்து தின்று தன் சிறிய முதுகுடைய பெட்டையோடு வாழும்.

சிறப்புக் குறிப்பு: சிங்கம் காட்டில் வாழும் விலங்காகையால், முல்லை நில வளம் குறிப்பிடப்பட்டது. நெல்விளையும் பெரிய வயல்கள் உள்ளதால் அவ்வூரின் மருதநில வளம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்குருவி பாணர்களின் யாழின் நரம்புத் துண்டுகளோடு சிங்கத்தின் பிடரி மயிரையும் சேர்த்துக் கூடுகட்டி, அருகில் உள்ள பெரிய வயலில் விளைந்த நெல்லைத் தின்று தன் பெட்டையோடு வாழும் என்பதிலிருந்து, அவ்வூர் முல்லை நில வளமும், மருதநில வளமும் நிறைந்த ஊர் என்பது புலனாகிறது. வேத்தனுக்குத் துன்பம் இல்லையென்றால், இந்த வளமான ஊரில் ஆண்குருவியும் பெண்குருவியும் இன்பமாக வழ்வது போல் தலைவனும், அவன் மனைவியும், மற்றவர்களும் இனிது வாழ்வார்கள் என்ற கருத்து இப்பாடலில் தொக்கி நிற்கிறது.

No comments: