Saturday, April 7, 2012

321. வன்புல வைப்பினது!

321. வன்புல வைப்பினது!

பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 60-இல் காண்க.

பாடலின் பின்னணி: தலைவன் ஒருவனின் புன்செய் நிலவளம் மிக்க ஊர் ஒன்றை இப்பாடலில் புலவர் உறையூர் மருத்துவன் தாமோதரனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.


பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டுஉடன்
வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக் 5


கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்,

வன்புல வைப்பி னதுவே சென்று
தின்பழம் பசீஇ.. .. .. ..ன்னோ, பாண!
வாள்வடு விளங்கிய சென்னிச்
செருவெங் குருசில் ஓம்பும் ஊரே. 10

அருஞ்சொற்பொருள்: 1. பொறி = புள்ளி; பூழ் = ஒருவகைக் கோழி; சேவல் = ஆண்கோழி. 2. தீ = இனிமை. 3. சுளகு = முறம்; உணங்கல் = உலர்தல்; செவ்வி = தக்க சமயம்; உடன் = உடனே. 4. கோங்கு = ஒரு மரம்; பொகுட்டு = கொட்டை. 5. குடந்தை = வளைவு; அம் = அழகு; கோடு = வரம்பு; ஆட்டல் = அலைத்தல். 6. கலித்தல் = தழைத்தல்; ஆர் = நிறைவு; பிறங்குதல் = விளங்குதல்; பீள் = கதிர்; ஓளிக்கும் = மறையும். 7. வன்புலம் = வலிய நிலம் (குறிஞ்சி நிலம், முல்லை நிலம்); வைப்பு = ஊர். 9. சென்னி = தலை. 10. வெம்பல் = விரும்புதல்; குருசில் = தலைவன்; ஓம்பும் = பாதுகாக்கும்.

கொண்டு கூட்டு: ஊர், சேவல் உணங்கல்கொண்டு கோட்டெலி ஆட்ட, பீள் ஒளிக்கும் வன்புல வைப்பினது எனக் கூட்டுக.

உரை: புறத்தே புள்ளிகளையுடைய பெண்பறவையின் சேவல் சிறப்பாகப் போர்புரியும் ஆற்றலுடையது. அச்சேவல், முறத்தில் வைத்து உலர்த்தப்பட்ட, மேலுள்ள தோல் நீக்கிய, இனிமை பொருந்திய வெண்ணிறமான எள்ளைத் தக்க சமயம் பார்த்துக் கவர்ந்து உண்டு, வேனிற்காலத்தில் பூத்த கோங்குப் பூவின் கொட்டை போன்ற வளைந்த காதுகளையுடைய, வரப்பில் வாழும் எலியை அலைப்பதால், அவ்வெலி தழைத்து விளங்கும் வரகின் கதிர்களில் மறைந்துகொள்கிறது. பாணனே! அத்தகைய புன்செய் வளமுடைய இவ்வூர், வாளால் வெட்டப்பட்டு வடுவுடன் விளங்கும் தலையையுடைய, போரை விரும்பும் தலைவனால் பாதுகாக்கப்படுகிறது.

சிறப்புக் குறிப்பு: ‘போர்வல் சேவல்’ என்பது போரில் வெற்றிபெறும் வல்லமை பெற்ற சேவல் என்ற பொருளில் கூறப்பட்டிருக்கிறது. இக்காலத்தில், சேவற்கோழிகளுக்குப் போர்ப்பயிற்சி அளித்து, அவை போர் செய்வதைக் கண்டு களிக்கும் வழக்கம் இருப்பதுபோல், சங்க காலத்திலும் சேவல், காடை, கெளதாரி (குறும்பூழ்) ஆகிய பறவைகளுக்குப் போர்ப்பயிற்சி அளித்து அவற்றைப் போரில் ஈடுபடுத்துவது வழக்கில் இருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

No comments: