310. உரவோர் மகனே!
பாடியவர்: பொன்முடியார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 299-இல் காண்க.
பாடலின் பின்னணி: இரு வேந்தர்களிடையே போர் மூண்டது. அப்போரில், முன்னாள் கடுமையாகப் போர்புரிந்து இறந்த வீரன் ஒருவனுடய மகன் பகைவர்களின் யானைகள் பலவற்றைக் கொன்றான். அப்போது, பகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி இறந்தான். அதைக் கண்ட அவன் தாய், அவன் சிறுவனாக இருந்த போது பால் குடிக்க மறுத்ததையும் அதற்காக அவள் ஒரு கோலை எடுத்து அவனை வெருட்டியதற்கு அவன் அஞ்சியதையும் இப்போது நெஞ்சில் அம்பு தைத்தாலும் அஞ்சாமல் போர் புரிந்ததையும் எண்ணிப் பார்த்து வியப்பதை பொன்முடியார் இப்பாடலில் கூறுகிறார்.
திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.
துறை: நூழிலாட்டு. ஒருவீரன் பகைவர் படை அழியுமாறு தன் மார்பில் பட்ட வேலைப் பறித்து எறிதல்.
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே; 5
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
அருஞ்சொற்பொருள்: 1. மடுத்தல் = ஊட்டல். 2. செறுதல் = சினத்தல்; ஓச்சுதல் = ஓங்குதல்; அஞ்சி = அஞ்சியவன். 3. உயவு = கவலை; மனனே = மனமே. 4. புகர் = புள்ளி; நிறம் = தோல்; ஆனான் = அமையான். 6. உன்னிலென் = அறியேன், நினையேன். 7. மான் = குதிரை; உளை = பிடரிமயிர்;. 8. தோல் = கேடகம்; அணல் = தாடி.
கொண்டுகூட்டு: மனனே, உரவோர் மகன், களிறட்டானன் கிடந்த புல்லணலோன், அம்பு உன்னிலென் என்னும் எனக் கூட்டுக.
உரை: இளையோனாக இருந்தபொழுது பாலை ஊட்டினால் இவன் உண்ணமாட்டன். அதனால், சினம் கொள்ளாமல் சினம் கொண்டதுபோல் நடித்து ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சிப் பால் உண்டவன் பொருட்டு வருந்தும் மனமே! இவன் முன்னாள் போரில் இறந்த வீரனின் மகன் என்பதற்கேற்ப, புள்ளிகள் பொருந்திய நெற்றியையுடைய யானைகளைக் கொன்றும் அவ்வளவில் நில்லாதவனாக, மார்பில் புண்படுத்தி ஊன்றி நிற்கும் அம்பைச் சுட்டிக் காட்டியபொழுது, ‘அதை நான் அறியேன்’ என்று கூறினான். அவன் இப்பொழுது குதிரையின் பிடரிமயிர் போன்ற குடுமியுடன், குறுந்தாடியுடன் கேடயத்தின்மேல் விழுந்து கிடக்கிறான்.
No comments:
Post a Comment