326. பருத்திப் பெண்டின் சிறு தீ!
பாடியவர்: தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார். தங்கால் என்பது விருதுநகருக்கு அருகிலுள்ள ஓரூர். இவ்வூர், ‘இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக வளநாட்டுக் கருநீலக்குடி நாட்டுத்திருத்தங்கால்’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இப்புலவரின் பெயர் தங்கால் பொற்கொல்லன் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அகநூல்களில் இவர்பெயர் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்று காணப்படுவதால் இவரது இயற்பெயர் வெண்ணாகனார் என்பதாக இருக்கலாம் என்றும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். இவர் புறநானூற்றில் ஒருபாடலும்(326), அகநானூற்றில் மூன்று பாடல்களும் (48, 108, 355), நற்றிணையில் ஒருபாடலும் (313), குறுந்தொகையில் ஒரு பாடலும் (217) இயற்றியதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ஒருகால், புலவர் தங்கால் பொற்கொல்லனார் ஒரு மறக்குடியைச் சார்ந்த தலைவன் ஒருவனின் வீட்டிற்குச் சென்றார். அங்கே, அத்தலைவனின் ஈகையையும், அவன் மனைவியின் விருந்தோம்பலையும் இப்பாடலில் வியந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக் 5
கவிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
வேட்டச் சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் விதவை 10
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்
அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
அண்ணல் யானை அணிந்த
பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. 15
அருஞ்சொற்பொருள்: 1. முதுமை = பழமை; பார்நடை = மெத்தென்ற நடை; வெருகு = காட்டுப் பூனை. 2. வெரு = அச்சம்; நாகு = இளமை; பேடை = பெண்பறவை. 3. புலாவிடல் = தொண்டை கிழியக் கூவுதல். 4. சிறை = குச்சி, கிளை; செற்றை = செத்தை; புடைத்தல் = முறத்தில் இட்டுத் தட்டுதல். 6. கவிர் = முள்முருங்கை; நெற்றி = உச்சி. 7. மிளை = காவற்காடு; இருக்கை = இருக்குமிடம். 8. சேண்புலம் = தொலைவிலுள்ள இடம்; படர்தல் = செல்லுதல். 9. படுதல் = ஒலித்தல்; மடை = வாய்க்கால். 10. விழுக்கு = தசை; விதவை = கூழ். 11. யாணர் = புதுவருவாய். 12. அயர்தல் = செய்தல். 13. சமம் = போர்; ததைதல் = சிதைதல். 15. ஓடை = நெற்றிப்பட்டம்.
கொண்டு கூட்டு: ஊர் இருக்கையது; மனைவியும் விருப்பினள்; கிழவனும் பரிசிலன் எனக் கூட்டுக.
உரை: ஊரிலுள்ள பழைய வேலியடியில் பதுங்கியிருக்கும் மெத்தென்ற நடையுடைய காட்டுப்பூனை, இருளில் வந்து இளம் பெட்டைக் கோழியை வருத்துகிறது. அதனால், அக்கோழி உயிர் நடுக்குற்று தொண்டை கிழியக் கத்துகிறது. குச்சிகளையும், செத்தையையும் அகற்றுவதற்காக எழுந்த நூல் நூற்கும் பெண்ணின் விளக்கொளியில், முருக்கம் பூப்போன்ற கொண்டையையுடைய சேவற்கோழியைக் கண்டு பெட்டைக்கோழி அச்சம் தணியும். இவ்வூர் கடத்தற்கரிய காவற்காடுகள் சூழ்ந்த இடத்தில் உள்ளது. இவ்வூர்த் தலைவனின் மனைவி, வேடர்களின் சிறுவர்கள் நெடுந்தொலைவு செல்லாமல் நீரொலிக்கும் வாய்க்காலில் பிடித்துவந்த குறுகிய காலையுடைய உடும்பின் தசையைத் தயிரோடு சேர்த்துச் சமைத்த கூழ்போன்ற உணவையும், புதிதாக வந்த நல்ல உணவுப் பொருட்களையும் பாணர்களுக்கும் அவர்களோடு வந்த மற்ற விருந்தினர்களுக்கும் கொடுத்து உண்பிக்கும் விருப்பமுடையவள். இவ்வூர்த் தலைவன், அரிய போர் அழியுமாறு தாக்கித், தலைமையையுடைய யானைகள் அணிந்திருந்த பொன்னால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டம் முதலியவற்றை பெரும்பரிசிலாகப் பாணர்களுக்கும் மற்றவர்களுக்கும் வழங்குபவன்.
சிறப்புக் குறிப்பு: ‘பார்த்தல்’ என்ற சொல்லுக்கு ‘கவனித்தல்’ என்று ஒருபொருள் உண்டு. பூனை தன் இரையைப் பிடிப்பதற்காகக் கவனமாக நடப்பதை ‘ பார்நடை’ என்று புலவர் குறிப்பிடுகிறார்.
போர் வந்தால் அஞ்சுவது மகளிரின் இயல்பு. அவ்வாறு அஞ்சினாலும், வீரனாகிய தன் கணவன் போரில் ஈடுபட்டிருப்பதால் வெற்றி பெறுவது உறுதி என்ற எண்ணமும் அவர்களுக்கு எழலாம். காட்டுப் பூனையைக் கண்டு பெட்டைக் கோழி அஞ்சினாலும், தனக்குத் துணையாகிய சேவல் இருப்பதைக் கண்டு அக்கோழியின் அச்சம் தணிகிறது என்று புலவர் கூறுவது, உள்ளுறையாக மகளிரின் மனநிலையைக் காட்டுவதாகத் தோன்றுகிறது.