387. சிறுமையும் தகவும்!
பாடியவர்: குன்றுகட்
பாலியாதனார் (387). இவரது இயற்பெயர் ஆதன். இவர் குன்றுகட் பாலி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால்
குன்றுகட் பாலியாதனார் என்று அழைக்கப்பட்டார். குன்றுகட் பாலி என்னும் ஊர் இப்பொழுது
பாலிக்குன்னு என்ற பெயருடன் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு அருகில் உள்ளது. குன்றுகட்
பாலியாதனார் என்ற பெயர் குண்டுகட் பாலியாதனார் எனத் திரிந்ததாகக் கருதப்படுகிறது. இப்புலவர்
புறநானூற்றில் உள்ள 387 – ஆம் பாடலையும் நற்றிணையில் உள்ள 220 – ஆம் பாடலையும் இயற்றியவர்.
பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னன் சிக்கற்பள்ளி என்னும் ஊரில் இறந்ததால் சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று அழைக்கப்பட்டான்.
பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற சேரமன்னன் சிக்கற்பள்ளி என்னும் ஊரில் இறந்ததால் சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று அழைக்கப்பட்டான்.
பாடலின் பின்னணி:
ஒருகால்,
புலவர் குன்றுகட் பாலியாதனார் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் காணச் சென்றார்.
அவன் பகைவரை வென்று அவர்களிடமிருந்து திறையாகப் பெற்ற பொருளை நண்பர்களுக்கும் பரிசிலர்களுக்கும்
அளிக்கும் சிறப்பை அவர் கண்டார். அவர் அவனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடினார். அவன்
களிறுகளையும், குதிரைகளையும் மற்ற பொருள்களையும் அவர் கனவிலும் கண்டிராத அளவுக்கு வழங்கினான்.
அவன் கொடைச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்த குன்றுகட் பாலியாதனார், ‘பொருநையாற்று மணலினும்
அதைச் சுற்றியுள்ளள வயல்களில் விளையும் நெல்லினும் பல ஆண்டுகள் வாழ்க.’ என்று செல்வக்
கடுங்கோ வாழியாதனை வாழ்த்தினார். இப்பாடலை ஒருபாணன் கூற்றாகப் புலவர் குன்றுகட் பாலியாதனார்
இயற்றியுள்ளார்.
திணை: பாடாண். ஒருவருடைய
புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல்.
தலைவனை
வாழ்த்துதல்.
வள்உகிர வயல்ஆமை
வெள்அகடு கண்டன்ன
வீங்குவிசிப் புதுப்போர்வைத்
தெண்கண் மாக்கிணை இயக்கி, என்றும்
மாறு கொண்டோர் மதில்இடறி 5
நீறுஆடிய நறுங்கவுள
பூம்பொறிப் பணைஎருத்தின
வேறுவேறு பரந்துஇயங்கி
வேந்துடைமிளை அயல்பரக்கும்
ஏந்துகோட்டு இரும்பிணர்த் தடக்கைத் 10
திருந்துதொழிற் பலபகடு
பகைப்புல மன்னர் பணிதிறை தந்துநின்
நகைப்புல வாணர் நல்குரவு அகற்றி
மிகப்பொலியர்தன் சேவடியத்தையென்று
யாஅன்இசைப்பின் நனிநன்றுஎனாப் 15
பலபிற வாழ்த்த இருந்தோர்தங் கோன்….
மருவஇன்நகர் அகன் கடைத்தலைத்
திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
வென்றிரங்கும் விறன்முரசினோன்
என்சிறுமையின் இழித்து நோக்கான் 20
தன்பெருமையின் தகவுநோக்கிக்
குன்றுறழ்ந்த களிறென்கோ?
கொய்யுளைய மாஎன்கோ?
மன்றுநிறையும் நிரைஎன்கோ?
மனைக்களமரொடு களம்என்கோ? 25
ஆங்கவை, கனவுஎன மருள வல்லே நனவின்
நல்கி யோனே நசைசால் தோன்றல்
ஊழி வாழி பூழியர் பெருமகன்!
பிணர்மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
செல்வக் கடுங்கோ வாழி யாதன் 30
என்னாத் தெவ்வர் உயர்குடை பணித்திவண்
விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
பல்லூர் சுற்றிய கழனி 35
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.
அருஞ்சொற்பொருள்:
1. வள் = கூர்மை; உகிர் = நகம். 2. அகடு = வயிறு.
3. வீங்கு விசி = வரிந்து கட்டப்பட்ட. 5. மாறு கொண்டோர் = பகைவர்; இடறுதல் = ஊறுபடுத்தல்
(இடித்தல்). 6. நீறு = புழுதி; கவுள் = கன்னம். 7. பணை = பருமை; எருத்து = கழுத்து.
9.
மிளை = காவற்காடு. 10. பிணர் = சொரசொரப்பு; தடக்கை = பெரிய கை (துதிக்கை). 11. பகடு
= யானை, பசு, எருமை இவற்ரின் ஆண். 13. நகைப்புலவாணர் = மகிழ்வூட்டும் புலமை மிக்க இரவலர்;
நல்குரவு = வறுமை. 17. மருவல் = நெருங்குதல்; நகர் = அரண்மனை (பெரிய வீடு). 19. விறல்
= வலி. 21. தகவு = தகுதி. 22. உறழ்ந்த = போன்ற. 23. உளை = தலையாட்டம் (குதிரையின் தலையில்
அணியப்படுவது). 27. நசைசால் = விருப்பமிக்க. 28. பூழி = ஒருநாடு. 29. மருப்பு = கொம்பு.
29. செரு = போர். 31. தெவ்வர் = பகைவர். 33. புல்லிலை வஞ்சி = இலையில்லாத வஞ்சி (வஞ்சி
நகரத்தைக் குறிக்கிறது); அலைத்தல் = அடித்தல், அசைத்தல்.
கொண்டு கூட்டு:
கிணை
இயக்கி, தந்து, அகற்றில் பொலியர்தன், சேவடி என்று இசைப்பின் நனிநன்று எனா, வாழ்த்த
இருந்தோர் தங்கோன், குறுகல் வேண்டி, இரங்கும், முரசினோன்; நோக்கான் நல்கியோன் தோன்றல்,
பெருமகன், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னாத் தெவ்வர் குடைபணித்து, நில்லாது விடுவராதலின்,
மணலினும் நெல்லினும் பல வூழி வாழி எனக் கூட்டுக.
உரை: என்னுடைய பெரிய
தடாரிப்பறை, வயலில் வாழ்வதும் கூர்மையான
நகங்களையுடையதுமான ஆமையின் வயிறு போன்ற வெண்ணிறமான புதிய தோலால் இறுக்கிக் கட்டப்பட்ட
தெளிந்த கண்ணையுடையது. அந்தப் பெரிய தடாரிப் பறையை அறைந்து, ‘எப்பொழுதும் பகைவரின்
மதிலை இடித்தலால், புழுதிபடிந்த கன்னங்களையுடைய, பூவேலைப்பாடுடைய பட்டமணிந்த, பெரிய
கழுத்தையுடைய, வேறுவேறாகப் பரவிச் சென்று பகைவேந்தர்களின் காவற்காட்டில் உலவும், உயர்ந்த
கொம்புகளையும் பெரிய சொரசொரப்பான துதிக்கையும், நல்ல தொழில் செய்யும் பல யானைகளையுடைய
பகைநாட்டு வேந்தர் பணிந்துவந்து, உனக்குத் தரவேண்டிய திறையைத் தந்தார்கள். அவர்கள்
தந்த பொருளைக்கொண்டு, உனக்கு இன்பம் அளிக்கும் அறிவிற் சிறந்த இரவலர் நண்பர் முதலியோரது
வறுமையைப் போக்கினாய். உன்னுடைய திருவடிகள் மிகவும் விளங்குக.’ என்று நான் அவனைப் புகழ்ந்து
பாடினால் அது மிகவும் நன்றென்று மற்ற இயல்புகளைச் சொல்லி வாழ்த்த இருந்தவர்க்கு வாழியாதன்
தலைவன். அவன் நெருங்குதற்கு இனிய பெரிய அரண்மனையின்
அகன்ற முற்றத்தில் தன்னுடைய நல்ல கழலணிந்த திருவடிகளை வந்தடையுமாறு போர்க்களத்தில்
பகைவரை வென்று முழக்கும் வலிய முரசுடையவன். அவன் என் சிறுமையைக் கண்டு இகழ்ந்து நோக்காமல்,
தன் பெருமையையும் தகுதியையும் நோக்கி, மலை போன்ற களிறுகளையும், பிடரிமயிர் கொய்யப்பட்டு,
தலையாட்டம் அணிந்த குதிரைகளையும், மன்றம் நிறைந்த ஆநிரைகளையும், மனைப்பணியாளரும் களப்பணியாளரும்
கனவென்று மயங்குமாறு நனவில் அளித்த அன்பு நிறைந்த தலைவன்; பூழி நாட்டார்க்குத் தலைவன்.
சொரசொரப்புடைய துதிக்கையும் கொம்புமுடைய யானைகள் செய்யும் போரில் மேம்பட்ட வலிய முயற்சியுடைய
செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று அவன் பெயரைக்கூறிய அளவில், பகைவர் தம்முடைய உயர்ந்த
குடையைத் தாழ்த்தி வணங்கிக், காலம் தாழ்த்தாமல், செய்ய வேண்டிய சிறப்புக்களைச் செய்து
இங்கே வரவிடுவர். ஆதலால், வஞ்சி மாநகரத்தின் மதிலை அலைக்கும் பொருநையாற்று மணலினும்,
அதைச் சுற்றியுள்ள பல வயல்கள் அனைத்திலும் விளையும் நெல்லையும்விட அவனுடைய வாழ்நாட்கள்
மிகுதியாகுக.
3 comments:
i am interested in knowing the significance of "manaikalamorotu kalamenko". does it mean a household farm with workers attached? in the rest of purananuru, there is no mention of paid workers on land. it is mainly a sort of communal ownership and social labour sharing. could you advise?
puram 387: manaikkalamorotu kalam enko. does that mean a homestead farm with workers residing in the farm available as bonded labor to work on the fields? there seems to be no other mention of wage labor in purananuru. generally lands were held in community and workers shared produce.
could you advise?
Dear Mr. Madhava Menon,
Thank you for your query about the term “மனைக்களமரொடு களம்”. The term “களமர்” means worker or one who ploughs the field. According to dictionary the various meanings of the word “களமர்” are the following:
களமர் = அடியார், உழுநர், வீரர், அடிமை, உழவர், மருதநிலமக்கள், கீழ்க்குடி மக்கள்,
In the context of this poem, the term “மனைக்களமரொடு களம்” means household servants who worked on the land. The poet says that along with other gifts the king also gave him cultivable land and farm workers to work on that land.
In the ancient Tamil society, ownership of private property including land was in vogue. The land was not jointly owned by the community.
Again, thank you for your interest in my blogs.
Anbudan,
Dr. Prabhakaran
Post a Comment