399. கடவுட்கும் தொடேன்!
பாடியவர்: ஐயூர் முடவனார்.
பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன்.
பாடலின் பின்னணி:
ஐயூர்
முடவனார் கிள்ளிவளவனைப் பாடிப் பரிசு பெற்றவர். அவர் அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று
பரிசில் பெறும் நோக்கம் இல்லாதவர். அவர் ஊனமுற்றவராகையால், காளைமாடுகள் பூட்டிய வண்டியில்
செல்லும் வழக்கம் உடையவர். ஒருகால், அவர் வண்டியில் சென்றுகொண்டிருந்த பொழுது, வண்டியை
இழுத்துச் சென்ற காளை ஒன்று சோர்வடைந்து வண்டியை இழுக்க முடியாத நிலையை அடைந்தது. அவர்
செய்வது அறியாமல் ஒருபக்கம் தங்கியிருந்தார். அவ்வழியே வந்தவர்கள், ’தாமான் தோன்றிக்கோன்
அறத்திலும் வீரத்திலும் சிறந்தவன். அவனிடம் சென்றால் நீங்கள் விரும்பியதைப் பெறலாம்.’
என்று கூறினார்கள். ஐயூர் முடவனார் தாமான் தோன்றிக்கோனின் மனையை அடைந்து, ‘என் வண்டியை
இழுத்துச் செல்வதற்கு ஒரு காளை வேண்டும். அதை விரும்பித்தான் நான் இங்கு வந்தேன்.’
என்று கூறுவதற்கு முன்பே தாமான் தோன்றிக்கோன் ஐயூர் முடவனாருக்கு பல ஆனிரைகளைப் பரிசாக
அளித்தான். இந்த நிகழ்ச்சியை, ஒரு பாணன் கூற்றாக இப்பாடலில் புலவர் ஐயூர் முடவனார்
சித்திரிக்கிறார்.
திணை: பாடாண்.
துறை: பரிசில் விடை.
அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற்று அரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
மோட்டிரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை 5
செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
பாதிரி ஊழ்முகை அவிழ்விடுத் தன்ன
மெய்களைந்து இனனொடு விரைஇ. . .
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
அழிகளிற் படுநர் களியட வைகின் 10
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக் 15
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
அறவர் அறவன் மறவர் மறவன்
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் 20
இசையிற் கொண்டான் நசையமுது உண்கென
மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
அலகில் மாலை ஆர்ப்ப வட்டித்துக் 25
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தையான் வேண்டிவந் ததுவென
ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் 30
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள
இழுமென இழிதரும் அருவி
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.
அருஞ்சொற்பொருள்:
1.
அடுதல் = சமைத்தல்; முகத்தல் = மொள்ளல்; அளவா = அளக்காமல். 2. தொடி = பூண்; பரூஉ =
பருமை. 3. காடி = புளிப்பு; கொளீஇ = கொண்டு; நீழல் = நிழல். 4. சினை = கிளை. 5. மோட்டு
= பெரிய; இரு = கரிய; கோடு = கொம்பு; குறை = தசைத்துண்டு. 6. செறு = வயல்; வள்ளை =
ஒரு கொடி; பாகல் = பாகற்காய். 7. பாதிரி = ஒருமரம்; ஊழ் = முதிர்; முகை = மொட்டு.
8. விரைஇ = கலந்து. 9. மூழ்த்தல் = மூடுதல். 10. அழி = வைக்கோல்; படுநர் = உழைப்போர்;
அட= வருத்த; வைகுதல் = இருத்தல். 11. அயிலும் = உண்ணும்; படப்பை = தோட்டம். 12. மாயா
= அழியாத. 15. கழை = மூங்கில்; நொடுத்தல் = விலைக்கு விற்றல். 16. பாவல் = பரவுதல்,
நீராளம் (நீர் அதிகமானதல் பரவுதல்). 18. சிறை = பக்கம். 20. மள்ளன் = படைத் தலைவன்;
மருகன் = வழித்தோன்றல். 22. மீ = மேல்; படர்தல் = நினைத்தல்; வன்கோல் = வலிய கோல்
(கிணைக்கோல்); மண்ணி = கழுவி. 23. வள்பரிந்து = தோல் கழன்று. 24. விசிப்பு = கட்டு;
காழ் = வலிமை. 25. அலகு = அளவு; ஆர்ப்ப = ஒலிக்க; வட்டித்து = இயக்கி. 26. கடிதல்
= சினத்தல்; தொடுதல் = தீண்டல் . 27. அசாவா = தளராத; நோன்மை = வலி; சுவல் = கழுத்தின்
மேல்பக்கம். 28. பகடு = காளை; அத்தை – அசை நிலை. 29. பெட்டல் = மிக விரும்பல். 30.
ஆன்று விட்டனன் = வழங்கினான்; அத்தை – அசை நிலை. 31. பன்னிரை = பல ஆனிரை. 33. இழும்
= ஒரு ஓசைக் குறிப்பு. 34. சிமை = உச்சி.
கொண்டு கூட்டு:
அரிசி
உலைக் கொளீஇ, நறும்புளியும் கொழுங்குறையும் வள்ளையும் பாகலும் இன்னொடு விரைஇ, புழுக்கலும்,
படுநர் வைகின் அயிலும், காவிரிக் கிழவன், வளவன், அவற்படர்தும், செல்லேன், செல்லேன்,
நோக்கேன், உண்டியேன், இருந்தனென் ஆக என, இறந்து, மண்ணி, விசிப்புறுத்து, வட்டித்து,
தொடேன், எனப் பெட்டா அளவை அன்றே, ஆன்று விட்டனன், தோன்றிக்கோ நல்கினான் எனக் கூட்டுக.
உரை: கிள்ளிவளவனின்
சோழ நாட்டில், சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக்கொண்டு
வந்த வெண்ணெல்லை பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப்பட்ட அரிசியால் ஆக்கிய
சோற்றை, புளித்த நீருள்ள உலையில் பெய்து, மிகுந்த நிழல் தரும் கிளைகளையுடைய மாமரத்தின்
இனிய மாம்பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளிக்குழம்பும், பெரிய கரிய வரால் இறைச்சியும்,
கொம்புகளையுடைய சுறாமீனின் துண்டுகளும், வயலில் விளைந்த வள்ளைக் கீரையும், சிறிய கொடியில்
முளைத்த பாகற் காயும், பாதிரி அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற தோலை நீக்கி, கலக்க
வேண்டிய பொருள்களைக் கலந்து மூடிவைத்து அவித்த சோறும் உண்பர். வைக்கோல் உள்ள இடங்களில்
உழைக்கும் உழவர்கள் தாம் உண்ட கள்ளால் களிப்படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின், விடியற்
காலையில் பழஞ்சோற்றை உண்பர். முழங்கும் நீரையுடைய தோட்டங்களையுடைய காவிரி பாயும் நாட்டுக்கு
உரியவனாகிய, அழியாத நல்ல புகழையுடைய கிள்ளிவளவனை நினைத்து அவனை நோக்கிச் செல்கின்றேன்.
உதவியை நாடி, நான் பிறரை நோக்கிச் செல்ல மாட்டேன்; பிறர் முகத்தையும் பார்க்க மாட்டேன்.
நெடிய மூங்கிற் கழிகளாலான தூண்டிலால் பிடித்த மீனை விற்ற கிணைமகள் சமைத்த நீருடன் கூடிய
புளிங்கூழை காலம் தவறி உண்டு மனம் சோர்ந்து ஒருபக்கம் இருந்தேன். அறவோர்களில் சிறந்த
அறவோனும், வீரர்களில் சிறந்த வீரனும், படைத்தலைவர்களில் சிறந்த படைத்தலைவனும், பெருமைக்குரிய
முன்னோர்களின் வழித்தோன்றலுமாகிய தாமான் தோன்றிக்கோன் ’உன்புகழால் உன்மேல் அன்புகொண்டான்;
ஆகவே, நீ விரும்பும் செல்வத்தைப் பெறலாம்’ என்று பலரும் கூறினர். மேலே செய்யவேண்டியவற்றை
நினைத்து, வலிய கிணைக்கோலைக் கழுவி, கட்டுக்
குலைந்திருந்த என் கிணைப்பறையை இறுகக்கட்டி, புதிய வலிய போர்வையைப் போர்த்தி,
அளவில்லாத மாலை போன்ற நெடிய வார்களை ஒலித்து இயக்கி, கடவுளை வணங்கினால் நேரமாகிவிடும்
என்று கருதிக் கடவுளை வழிபடாமல், ’வலிய தேராகிய வண்டி சேற்றில் சிக்கிக் கொண்டால்,
தளராமல் இழுத்துச் செல்லும் வலிய கழுத்தையுடைய காளை ஒன்றுதான் நான் விரும்பி வந்தது.’
என்று நான் கூறுவதற்கு முன்பே வானில் பூத்த விண்மீன்கள் போல் அழகிய நிறமுள்ள பல ஆனிரைகளை,
ஊர்ந்து செல்வதற்கேற்ற காளைகளுடன், இசையோடு
ஒழுகும் அருவிகளையுடைய, வானளாவ உயர்ந்த உச்சியையுடைய தோன்றிமலைக்குத் தலைவனாகிய தாமான்
தோன்றிக்கோன் அளித்தான்.
No comments:
Post a Comment