388. நூற்கையும் நா மருப்பும்!
பாடியவர்: மதுரை அளக்கர்
ஞாழலார் மகனார் மள்ளனார் (388). இவர் இயற்பெயர் மள்ளனார். இவர் மதுரையைச் சார்ந்த அளக்கர்
ஞாழலார் என்பவரின் மகனாகையால் மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்று அழைக்கப்பட்டதாகக்
கருதப்படுகிறது. இவர் பாடியனவாக அகநாநூற்றில்
ஏழு பாடல்களும் (33, 144, 174, 244, 314, 344, 353), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும்
(188, 215), நற்றிணையில் இரண்டு பாடல்களும் (297, 321), புறநானூற்றில் ஒருபாடலும் காணப்படுகின்றன.
அம்மள்ளனார் என்ற பெயருடைய புலவர் ஒருவர் நற்றிணையில் உள்ள 82-ஆம் பாடலை இயற்றியுள்ளார். அம்மள்ளனார்
என்பவரும் இப்பாடலை இயற்றிய மள்ளனார் என்பவரும் ஒருவர் அல்லர் என்று கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: சிறுகுடிகிழான்
பண்ணன். இவனைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 173-இல் காண்க.
பாடலின் பின்னணி:
இப்பாடலில்
பாடப்பட்டிருக்கும் பண்ணன் என்பவன் கொடையிற் சிறந்தவன். பொருநன் ஒருவன் பண்ணனிடம் சென்று,
தன் வறுமையைக் கூறியவுடன், பண்ணன் அவனுக்குப் பெருமளவில் பொருள் கொடுத்து உதவியதைப்
பாணன் கூற்றாக புலவர் இப்பாடலில் கூறுகிறார்.
’நாள் தோறும் பண்ணனின் புகழை நான் பாடாவிட்டால் அவன் என் பெருஞ்சுற்றத்தாரைப்
பேணாது ஒழிவானாக.’ என்றும் அப்பாணன் கூறுவதாக இப்பாடலில் புலவர் மள்ளனார் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி.
அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
பள்ளம் வாடிய பயன்இல் காலை
இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன்நிலை அறியுநன் ஆக அந்நிலை 5
இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடைமேந் தோன்றல்
நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரவன் …… 10
வினைப்பகடு ஏற்றம் எழீஇக் கிணைத்தொடா
நாடொறும் பாடேன் ஆயின், ஆனா
மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்
பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
அண்ணல் யானை வழுதி 15
கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே!
அருஞ்சொற்பொருள்:
1. வெள்ளி = வெள்ளி என்று அழைக்கப்படும் கோள்
(சுக்கிரன்); உறைதல் = தங்குதல்; விளைவயல்
பள்ளம் = விளைவயல்களும் நீர்நிலைகளும். 2. காலை = காலம், பொழுது. 5. அறியுநன் = அறிவித்தான்.
6. இரியல் = விட்டுப் போதல். 7. தோன்றல் = அரசன், தலைவன். 8. நுண்ணூல் = நுண்ணிய நூல்
(நுண்ணிய நூலறிவு); தடக்கை = பெரிய கை (இங்கு துதிக்கையைக் குறிக்கிறது); மருப்பு
= கொம்பு (தந்தம்). 11. ஏற்றம் = உயர்வு; புகழ்.
13. மருகன் = வழித்தோன்றல். 14. இரங்கல் = ஒலித்தல்; பீடு = பெருமை; தானை = படை.
15. வழுதி = பாண்டியன். 16. கண்மாறலீயர் = கண்மாறுக; கண்மாறல் = புறக்கணித்தல்.
உரை: வெள்ளியாகிய
கோள் தெற்கே இருந்தது; விளைவயல்களும் நீர்நிலைகளும் வாடிய பயனற்ற நிலையில் இருந்தன.
அத்தகைய வறுமைக் காலத்தில் பெரிய பறையாகிய தடாரிப் பறையை இசைக்கும் பொருநன் ஒருவன்
பெரும்புகழுடைய சிறுகுடிப் பண்ணனிடம் சென்று தன் வறுமையை அறிவித்தான். அப்பொழுதே, அப்பொருநனின்
வறுமைத் துன்பம் நீங்குமாறு, தன்னிடம் இருந்த பொருள்களைச் சிறுகுடிப் பண்ணன் அவனுக்குக்
கொடுத்தான். எங்கள் தந்தை போன்ற சிறுகுடிப்
பண்ணன் கொடையால் மேம்பட்ட தலைவன். நுண்ணிய நூல்களைத் துதிக்கையாகவும், நாவைக் கொம்பாகவும்
உடைய யானைகளாகிய வெல்லும் பாடல்களை இயற்றும் புலவர்களுக்கு, நெல் விளையும் நிலங்களை
அவன் பரிசாக அளிப்பதை நான் கூறக் கேட்பீராக…. அவனுடைய உழவுத் தொழிலுக்குரிய எருதுகளின்
புகழை யாழோடு இசைத்து கிணைப்பறையை அறைந்து நாள்தோறும் நான் பாடேனாயின், மணிகட்டிய முற்றத்தையும்,
வாரால் கட்டப்பட்ட முரசு முழங்கும் பெருமை பொருந்திய சிறந்த யானைப்படையையுமுடைய பாண்டியன்
வழித்தோன்றலான சிறுகுடிப் பண்ணன் என் பெரிய சுற்றத்தாரைப் பாதுகாக்கும் அருட்செயலை
செய்யாது ஒழிவானாக.
சிறப்புக் குறிப்பு:
பண்ணன்
உழவுத்தொழிலால் பெருவளம் பெற்றுக் கொடையில் சிறந்து விளங்கியதனால் அவனுடைய எருதுகள்
புகழுக்குரியவை என்று புலவர் மள்ளனார் கருதுவதாகத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment