Tuesday, March 19, 2013

397. தண் நிழலேமே!


397. தண் நிழலேமே!

பாடியவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்.
பாடப்பட்டோன்: கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடலின் பின்னணி: ‘பொழுது புலர்ந்தது; அரசே, துயில் எழுவாயாக என்று கிள்ளிவளவனின் முற்றத்தில் நின்று என் தடாரிப் பறையை ஒலிக்குமாறு கொட்டினேன்.  அதைக் கேட்ட கிள்ளிவளவன், நெய்யில் பொரித்த இறைச்சியும், பூ வேலைப்பாடு அமைந்த மெல்லிய ஆடையும், மதுவும் அளித்தான். என் வறுமைத் துன்பம் நீங்குமாறு அரிய செல்வமும் அளித்தான். இனி, கதிரவன் தெற்கே தோன்றினாலும், ஊழிக்காலமே வந்தாலும் நாங்கள் அஞ்ச மட்டோம்.’ என்று பாணன் கூறுவதாக இப்பாடலை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியுள்ளார்.

திணை: பாடாண். 
துறை: ; பரிசில் விடை; கடைநிலை விடையுமாம்.

வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர்சினைக் குடம்பைக் குரல்தோன் றினவே
பொய்கையும் போதுகண் விழித்தன; பையச்
சுடரும் சுருங்கின்று ஒளியே; பாடெழுந்து
இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப                                          5

இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
வைகறை அரவம் கேளியர் பலகோள்
செய்தார் மார்ப எழுமதி துயில்எனத்
தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி                                                      10

நெடுங்கடைத் தோன்றி யேனே அதுநயந்து
உள்ளி வந்த பரிசிலன் இவன்என
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
பாம்புஉரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு                                        15

மாரி யன்ன வண்மையின் சொரிந்து
வேனில் அன்னஎன் வெப்பு நீங்க
அருங்கலம் நல்கி யோனே, என்றும்
செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
அறுதொழில் அந்தணர் அறம்புரிந் தெடுத்த                                        20

தீயொடு விளங்கும் நாடன் வாய்வாள்
வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
என்னென்று அஞ்சலம் யாமே வென்வேல்                                           25

அருஞ்சமம் கடக்கும் ஆற்றலவன்
திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே!

அருஞ்சொற்பொருள்: 1. வெள்ளி = வெள்ளி என்று அழைக்கப்படும் கோள் (சுக்கிரன்); இரு = பெரிய; விசும்பு = ஆகாயம்; ஏர்தல் = எழுதல்; புள் = பறவை. 2. சினை = கிளை; குடம்பை = கூடு. 3. போது = பூ; பைய = மெல்ல. 4. பாடு = ஒலி. 5. வலம்புரி = வலம்புரிச் சங்கு; ஆர்த்தல் = ஒலித்தல். 7. எஃகுதல் = அவிழ்தல்; எஃகுஇருள் = எஞ்சி இருந்த குறைந்த இருள். 7. ஏமம் = காவல். 8. வைகறை = விடியற் காலை; அரவம் = ஒலி; கேளியர் = கேட்பீராக; பல கோள் செய் தார் = பலவகை வேலைப்பாடுகள் அமைந்த மாலை. 10. தெளிர்ப்ப = ஒலிக்குமாறு; ஒற்றி = அறைந்து. 11. கடை = வாயில்; நயந்து = விரும்பி. 13. குய் = தாளிப்பு; சூடு = சூட்டிறைச்சி. 14. தேறல் = கள்ளின் தெளிவு. 15. வான் = சிறப்பு; கலிங்கம் = ஆடை. 17. வெப்பு = கொடுமை (வறுமையால் தோன்றிய கொடுமை).19. செறு = வயல்; சேய் = சிவப்பு. 20. அறுதொழில் = ஆறுதொழில்கள் (அந்தணர்க்குரிய ஆறுதொழில்கள்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்). 23. எறிதல் = மோதுதல்; இறுதிக்கண் செலினும் = முடிவடையும் ஊழிக்காலமே வந்தாலும். 24. தெறுதல் = காய்ச்சுதல்; கனலி = கதிரவன். 

கொண்டு கூட்டு: ஏர்தரும்; தோன்றின; விழித்தன; சுருங்கின்று; காலை தோன்றி, அகற்றும்; கேளியர்; மார்ப; துயிலெழுமதியென ஒற்றி, தோன்றியேன்; நயந்து, என, சூடும்தேறலும் கலிங்கமும் சொரிந்து, நீங்க, நல்கியோன், நாடன், வளவன், செலினும் தோன்றினும் யாம் அஞ்சலம்; தண்நிழலேம் ஆதலால் எனக் கூட்டுக  

உரை: வெள்ளி என்னும் கோள் வானத்தில் எழுந்தது. மரங்களின் உயர்ந்த கிளைகளில் இருந்த தங்கள் கூடுகளிலிருந்து பறவைகள் குரல் எழுப்பி ஒலித்தன. நீர்நிலைகளில் குவிந்திருந்த தாமரை மொட்டுகள் கண் விழிப்பது போல் மலர்ந்தன. திங்களின் ஒளி குறையத் தொடங்கியது. முரசுகள் முழங்கின. வலம்புரிச் சங்குகள் ஒலித்தன. எஞ்சி இருந்த இரவுப் பொழுது குறைந்து காலைப் பொழுது தோன்றும் நேரத்தில், காவலுள்ள பாசறையில் எழும் ஒலிகளைக் கேட்பாயாக. பலவகையான பூங்கொத்துக்களாலான மாலையை அணிந்த மார்பையுடையவனே, துயிலெழுவாயாக என்று தெளிந்த கண்ணையுடைய பெரிய தடாரிப் பறையை ஒலிக்குமாறு அறைந்து கிள்ளிவளவனின் அரண்மனையின் நெடிய முற்றத்தில் நின்றேன். நான் வந்ததை விரும்பி, ’இவன் என்னை நினைத்து வந்தவன்’ என்று கூறி, நெய்யில் பொரித்ததும் தாளிப்பும் உடையதுமான பெரிய சூட்டிறைச்சித் துண்டுகளையும், மணி பதித்த பாத்திரத்தில் மணம் கமழும் கள்ளின் தெளிவையும் அளித்தான். பாம்பின் தோல் போன்ற மென்மையானதும் சிறந்த பூ வேலைப்பாடு அமைந்ததுமான உடையைக் கொடுத்தான். அவன் மழை போல வாரி வழங்கி என் வறுமைத் துன்பம் நீங்குமாறு அரிய அணிகலன்களை அளித்தான். கிள்ளிவளவனுடைய நாட்டில், வயல்களில் செந்தாமரை மலர்கள் பூத்திருக்கும்; ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்கள் அறத்தை விரும்பி வளர்க்கும் தீ விளங்கும். அவன் குறிதவறாத வாட்படை யோடு சென்று வெற்றி பெற்ற தீவுகளிலிருந்து பெற்ற பொன்னாலான அணிகலன்களை உடையவன். வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி, நன்கு செய்யப்பட்ட கழல்களை காலில் அணிந்து, அரிய போர் செய்யும் ஆற்றல் உடையவனின் குளிர்ந்த நிழலில் இருப்பதால், மோதும் அலைகளையுடைய பெரிய கடல் வறட்சியுறும் முடிவுக் காலமே வந்தாலும், வெப்பத்தைத் தரும் கதிரவன் தெற்கே தோன்றினாலும், ’என்ன செய்வது?’ என்று நாங்கள் அஞ்ச மாட்டோம். 

No comments: