Tuesday, March 19, 2013

398. துரும்புபடு சிதாஅர்!


398. துரும்புபடு சிதாஅர்!

பாடியவர்: திருத்தாமனார்.
பாடப்பட்டோன்: சேரமான் வஞ்சன்.
பாடலின் பின்னணி: ’ வெள்ளி முளைத்தது; கோழி கூவியது; பொழுது புலர்ந்தது. அந்த விடியற்காலைப் பொழுதில், எம்மிடம் நீங்காத அன்பினன் ஆகுக என்று கூறி, என் தடாரிப்பறையை இசைத்தேன். அதைக் கேட்ட சேரமான் வஞ்சன் எனக்குப் புத்தாடையும், தெளிந்த மதுவும், உண்ணுவதற்கு மான் இறைச்சியும், சோறும் அளித்தான்.’ என்று சேரமான் வஞ்சனின் கொடைச் சிறப்பை ஒரு பாணன் கூற்றாக வைத்துப் புலவர் திருத்தாமனார் இப்பாடலைப் பாடியுள்ளார்.

திணை: பாடாண்.
துறை: கடை நிலை.

மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர
வகைமாண் நல்இல் . . . . .
பொறிமயிர் வாரணம் பொழுதறிந்து இயம்பப்
பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
கைவல் சீறியாழ் கடன்அறிந்து இயக்க                                              5

இரவுப்புறம் பெற்ற ஏம வைகறைப்
பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப்
புலியினம் மடிந்த கல்லளை போலத்                                         10

துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
மதியத் தன்னஎன் அரிக்குரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
தள்ளா நிலையை யாகியர் எமக்கென                                       15

என்வரவு அறீஇச்
சிறிதிற்குப் பெரிதுவந்து
விரும்பிய முகத்த னாகி என்அரைத்
துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்அரைப்
புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ                                             20

அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை
நிழல்காண் தேறல் நிறைய வாக்கி
யான்உண அருளல் அன்றியும் தான்உண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை
கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர                                                      25

வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு
புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்
உரைசெல அருளி யோனே
பறைஇசை அருவிப் பாயல் கோவே.                                         30


அருஞ்சொற்பொருள்: 1. கரப்ப = மறைய; ஏர்தல் = எழுதல். 3. பொறி = புள்ளி; வாரணம் = சேவற் கோழி; இயம்பல் = ஒலித்தல். 4. முகை = மொக்கு. 6. ஏமம் = இரவு. 7. விரை = மணம். 8. இறுத்தல் = செலுத்தல்; வாய்மொழி = வாய்மை. 9. நகைவர் = பாணர், இன்பம் அளிப்பவர்; குறுகல் = அணுகல். 10. அளை = குகை. 11. துன்னல் = நெருங்கல். 13. வட்டித்தல் = இசைத்தல். 15. தள்ளா = நீங்காத. 16. அறீஇ = அறிந்து. 18. அரை = இடுப்பு. 19. சிதார் = கந்தை. 20. பொங்குதல் = விளங்குதல்; துகில் = நல்லாடை. 21. அழல் = நெருப்பு; கான்றல் = கக்கல். மண்டை = (இரப்பவர்களின்) பாத்திரம். 22. தேறல் = கள்ளின் தெளிவு. 24. வறை = வறுவல். கருனை = பொரித்த கறி. 25. உகிர் = நகம்; நிமிரல் = சோறு; ஒக்கல் = சுற்றம்; ஆர்தல் = உண்னுதல். 26. வரை = மலை; உறழ் = போன்ற. 27. விரவுதல் = கலத்தல்; அரவு = பாம்பு; ஆரம் = மாலை. 28. புரையோன் = உயர்ந்தோன்; கலிங்கம் = ஆடை. 30. பாயல் – ஒரு நாடு.

கொண்டு கூட்டு: வைகறையில், வஞ்சன் மூதூர்க்கண் தடாரி அரிப்ப வட்டித்து, என, அறீஇ, உவந்து, முகத்தனாகி, நீக்கி, உடீஇ, வாக்கி, அருளலன்றியும் ஒக்கல் ஆர, ஆரமொடு, பாயற்கோவாகிய அவன் அருளினான் எனக் கூட்டுக.

உரை: திங்களின் நிலவொளி மறைய, வெள்ளியாகிய கோள் எழ, முறையாகக் கட்டப்பட்ட சிறந்த இல்லத்தில்….. புள்ளிகளையுடைய சேவற் கோழி பொழுது விடிந்ததை அறிந்து கூவ, நீர்நிலைகளில் இருந்த பூக்களின் மொட்டுகள் மலர, பாணர்கள் தம்முடைய கைதேர்ந்த சிறிய யாழை இசைக்கும் முறை அறிந்து இசைக்க, இரவுப் பொழுது நீங்கும் விடியற்காலையில், மிகுந்த மணமுள்ள பந்தலில் பரிசிலர்களின் தகுதி அறிந்து அவர்களுக்குப் பரிசளிப்பவன் வஞ்சன். அவன் எப்பொழுதும் வாய்மையே பேசுபவன். அவனை மகிழ்விக்கும் பாணர், பொருநர் முதலியோர் அணுக முடியுமே தவிர, அவனுடைய பகைவர்களால் அணுக முடியாத, புலி உறங்கும் குகை போன்ற, பெரும்புகழ் பெற்ற அவனுடைய ஊருக்குச் சென்றேன். அங்குச் சென்று, என்னுடைய இரத்தல் குறிப்பை உணர்த்துமாறு, முழுமதி போன்ற வடிவும் மெல்லிய ஓசையையுமுடைய என் தடாரிப் பறையை இசைத்து, ‘உன்னை நினைத்து வருவோரின் கலங்கள் நிரம்புமாறு பரிசுப் பொருள்களை வழங்குபவனே! எம்மிடம் நீங்காத அன்புடையவனாகுக’ என்று கூறினேன். என் வருகையை அறிந்து, நான் கூறிய சிறுசொற்களைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து, வஞ்சன் அன்போடு முகம் மலர்ந்தான். என் இடுப்பில் இருந்த அழுக்குப் படிந்த கிழிந்த கந்தைத் துணியை நீக்கி, தன் இடுப்பில், புகைபோல் மெல்லிதாக இருந்த சிறந்த உடையை எனக்கு உடுப்பித்தான். நெருப்பில் காய்ந்தது போல் வறண்டு கிடந்த என்னுடைய உண்கலத்தில், உண்பவர்கள் தமது நிழலைக் காணுமாறு தெளிந்த கள்ளின் தெளிவை நிரம்பக் கொடுத்தான். அது மட்டுமல்லாமல், தான் உண்ணும் கலத்தில் மான் இறைச்சித் துண்டுகளை வறுத்துப் பொரித்த கறியையும், கொக்கின் நகம் போன்ற சோற்றையும் என் சுற்றத்தார் உண்ண அளித்தான். மலை போன்ற தன் மார்பில் அணிந்திருந்த, உலகம் எல்லாம் வியக்கும், பல மணிகள் கோத்து ஒளியுடன் விளங்கும் பாம்பு போல் வளைந்த மாலையையும், பூ வேலைப்பாடுகள் அமைந்த மெல்லிய உடைகளையும், தன் புகழ் எங்கும் பரவுமாறு, பறைபோல் முழங்கும் அருவிகளையுடைய பாயல் என்னும் நாட்டிற்கு உரியவனாகிய உயர்ந்தோன் வஞ்சன் எமக்கு அளித்தான்.  

No comments: