Monday, March 18, 2013

392. அமிழ்தம் அன்ன கரும்பு!


392. அமிழ்தம் அன்ன கரும்பு!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 96-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் பொகுட்டெழினியின் வெற்றிகளையும், விருந்தோம்பலையும், கொடைத்தன்மையையும், அவன் முன்னோருள் ஒருவன் கரும்பைத் தன் நாட்டிற்குக் கொண்டு வந்ததையும் ஒரு பாணன் கூற்றாக வைத்து இப்பாடலை ஒளவையார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
கொடும்பூண் எழினி நெடுங்கடை நின்றியான்
பசலை நிலவின் பனிபடு விடியல்
பொருகளிற்று அடிவழி யன்ன என்கை
ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ                  5

உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து
நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்           10

வைகல் உழவ, வாழிய பெரிதுஎனச்
சென்றுயான் நின்றனெ னாக; அன்றே
ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
வேர்புரை சிதாஅர் நீக்கி, நேர்கரை
நுண்ணூற் கலிங்கம் உடீஇ உண்ம்எனத்                15

தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோண்முறை
விருந்திறை நல்கி யோனே; அந்தரத்து
அரும்பெறல் அமிழ்தம் அன்ன                     20

கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.

அருஞ்சொற்பொருள்: 1. ஏர் = ஒப்பு. 2. கொடு = வளைவு; பூண் = அணி; கொடும்பூண் = வளைந்த அணிகலம். 3. பசலை நிலவு = ஒளி மழுங்கிய நிலவு. 5. ஒற்றுபு = ஒற்றி; கொடாஅ = (திறை) கொடுக்காத. 6. உரு = அச்சம்; ஆர் = அரிய; எயில் = மதில்; கடந்து = அழித்து. 7. பாடு = கேடு. 8. அணங்கு = பேய் மகள். 11. வைகல் = நாள் தோறும். 13. பகடு = பெருமை; பகட்டிலை = பெரிய இலை. 14. புரை = உவமையுருபு (ஒத்த); சிதார் = கந்தை. 15. கலிங்கம் = உடை; உடீஇ = உடுப்பித்து.16. தேறல் = கள்ளின் தெளிவு.17. கோள்மீன் = கோள்; அளைஇ = கலந்து. 19. அந்தரம் = அப்பால் உள்ள நாடு; அயல் நாடு, தேவலோகம். 21. பிறங்கடை = வழித்தோன்றல்.

கொண்டு கூட்டு: எழினி நெடுங்கடை நின்று, யான் மாக்கிணை ஒற்றுபு, வாழிய பெரிதெனச் சென்று நின்றனெனாக, அன்றே, கரும்பிவண் தந்தோன் பிறங்கடையாகிய அவன், சிதாஅர் நீக்கி, கலிங்கம் உடீஇ, தேறல் அளைஇ, விருந்திறை நல்கினானெனக் கூட்டுக.

உரை: முழுமதி போன்ற வெண்கொற்றக் குடையையுடைய அதியர் வேந்தனாகிய, வளைந்த அணிகலன் அணிந்த எழினியின் அரண்மனையின் முற்றத்தில் நின்று, நான் பெரிய யானையின் காலடி போன்ற ஒருகண் தடாரிப் பறையை, ஒளி மழுங்கிய நிலவில் பனிபொழியும் விடியற்காலை நேரத்தில் அறைந்தேன். ’திறை கொடாத, அஞ்சத்தக்கப் பகைவேந்தரின் அரிய மதில்களை அழித்துத் தசையும் குருதியும் தோய்ந்ததால் ஈரமடைந்த, துன்பந்தரும் பேய்மகள் உறையும் பெரிய போர்க்களமெல்லாம், வெளுத்த வாயுள்ள கழுதையை ஏரில் பூட்டி உழுது, வெண்ணிற வரகும், கொள்ளும் விதைத்து, இடைவிடாமல் போராகிய உழவைச் செய்யும் வேந்தே, நீ நீடு வாழ்க.’ என்று வாழ்த்தினேன்.   என்னைக் கண்டவுடன், ஊரில் உள்ளவர்கள் நீருண்ணும் கிணற்றில் படர்ந்துள்ள பெரிய இலைகளையுடைய பாசியின் வேர்களைப் போல் கிழிந்திருந்த என் உடையைக் களைந்து, நுண்ணிய நூலாலான உடையை உடுப்பித்து, தேள் கொட்டினால் நெறியேறுவதைப் போல நாள்பட்டு நன்கு புளித்த கள்ளை வானத்தில் மின்னும் கோள்போல் ஒளிறும் பொற்கலங்களில் அளித்தது மட்டுமல்லாமல், முறைப்படி என்னை விருந்தினனாக இருத்தி உண்பித்தான்.   அவன், அயல்நாட்டில் இருந்து பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டிற்குக் கொண்டுவந்தவனுடைய பெரிய வழித்தோன்றல்.    

No comments: