Sunday, February 17, 2013

386. வேண்டியது உணர்ந்தோன்!


386. வேண்டியது உணர்ந்தோன்!

பாடியவர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 31-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.
பாடலின் பின்னணி: கிள்ளி வளவன் தமக்குச் செய்த உதவிகளை இப்பாடலில் கோவூர் கிழார் எடுத்துரைத்து, இனி வெள்ளி என்னும் கோள் எங்குச் சென்றாலும் தமக்குக் கவலை இல்லை என்று கூறி அவனை வாழ்த்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்.

நெடுநீர நிறைகயத்துப்
படுமாரித் துளிபோல
நெய்துள்ளிய வறைமுகக்கவும்
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்
ஊன்கொண்ட வெண்மண்டை            5

ஆன்பயத்தான் முற்றழிப்பவும்
வெய்துஉண்ட வியர்ப்புஅல்லது
செய்தொழிலான் வியர்ப்புஅறியாமை
ஈத்தோன் எந்தை இசைதனது ஆக
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்               10

பாத்திப் பன்மலர்ப் பூத்ததும் பின்று
புறவே,  புல்லருந்து பல்லாயத்தான்
வில்இருந்த வெங்குறும்பின்று
கடலே, கால்தந்த கலன்எண்ணுவோர்
கானற் புன்னைச் சினை யலைக்குந்து           15

கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து
அன்னநன் நாட்டுப் பொருநம் யாமே;
பொராஅப் பொருநரேம்
குணதிசை நின்று குடமுதற் செலினும்          20

குடதிசை நின்று குணமுதற் செலினும்
வடதிசை நின்று தென்வயிற் செலினும்
தென்திசை நின்று குறுகாது நீடினும்
யாண்டும் நிற்க வெள்ளியாம்
வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே.        25

அருஞ்சொற்பொருள்: 1. கயம் = குளம். 2. மாரி = மழை. 3. வறை = வறுவல்; முகத்தல் = மூக்கால் நுகருதல். 4. சூடு = சுடப்பட்ட இறைச்சி; மிசைதல் = உண்ணுதல். 5. மண்டை = இரப்போர் கலம். 8. வியர்ப்பு = வியர்வை. 11. ததும்புதல் = நிறைதல். 12. புறவு = முல்லைக்காடு. 13. குறும்பு = அரண். 15. கானல் = கடற்கரைச் சோலை. 6. கழி = கடல் சார்ந்த பகுதி (உப்பங் கழி); கொள்ளை = விலை; சாற்றுதல் = சொல்லுதல், விற்றல். 17. கல் = மலை; உமணர் = உப்பு விற்பவர்கள். 20. குணதிசை = கிழக்குத் திசை. 21. குடதிசை = மேற்குத் திசை. 24. வெள்ளி = வெள்ளி என்று அழைக்கப்படும் கோள் (சுக்கிரன்).

கொண்டு கூட்டு: முகக்கவும், மிசையவும், முற்றழிப்பவும், ஈத்தோன். எந்தை; வயல் பூத் ததும்பின்று; சினையலைக்குந்து; வெங்குறும்பின்று; உமணொலிக்குந்து; அன்ன நாட்டுப் பொருநம் யாம்; பொராஅப் பொருநரேம்; செலினும், நீடினும், யாண்டும் நிற்க; உணர்ந்தோன் தாள் வாழிய எனக் கூட்டுக.

உரை: மிக்க நீர் நிறைந்த குளத்தில் மழைத்துளி விழும்பொழுது எழும் ஒலியைப் போல் நெய்யில் வறுக்கப்பட்ட பொழுது ஒலி உண்டாக்கிய வறுவலை மூக்கால் நுகர்ந்து உண்டோம்; சூட்டுக்கோலால் குத்திச் சூடுபடுத்தப்பட்ட இறைச்சியைத் தின்றோம்; ஊன் வைத்திருந்த வெண்ணிறமான பாத்திரம் பாலால் நிரம்பி வழிந்தது; இவ்வாறு உண்பவற்றைச் சுடச்சுட உண்பதால் வியர்த்தலை அல்லாமல் வேறு தொழில் செய்வதால் வியர்வை உண்டாகாத வகையில் எங்களுக்கு எந்தை போன்ற கிள்ளிவளவன் உணவளித்துப் புகழுக்கு உரியவனானான். வயல்களுக்கு வேலியாக நடப்பட்டிருக்கும் நீண்ட கரும்புகள் உள்ள பாத்தியில், பலவகையான பூக்கள் பூத்து நிரம்பின; காடு, புல்மேயும் ஆனிரைகள் நிறைந்தாகவும், வில்லேந்திய வீரர்களின் காவலிலிருந்த இடமாகவும் இருந்தது. கடலில் காற்றால் கொண்டுவரப்பட்ட கப்பல்களை எண்ணும் மகளிர் தங்கியிருக்கும் சோலையில் உள்ள புன்னை மரங்களின் கிளைகள் கடலலையால் அலைக்கப்படுகின்றன. கடல் சார்ந்த கழிகளில் உள்ள வெண்ணிறமான உப்பைப் பெரிய மலைகள் பொருந்திய நல்ல நாடுகளுக்குக் கொண்டு சென்று விலை கூறி விற்கும் உமணர்களின் குடிகள் சிறந்து விளங்கும். நாங்கள் அத்தகைய நல்ல நாட்டுப் பொருநர். நாங்கள் போரிடும் பொருநர் அல்லர். வெள்ளி, கிழக்கே இருந்து மேற்கே சென்றாலும், மேற்கே இருந்து கிழக்கே சென்றாலும், வடக்கே இருந்து தெற்கே சென்றாலும் செல்லட்டும். அல்லது, எங்கும் செல்லாமல் தெற்கேயே வெள்ளி நெடுநாள் நின்றாலும்  நிற்கட்டும். எங்கள் குறிப்பை உணர்ந்து எங்களுக்கு வேண்டியதை அளிப்பவன் கிள்ளிவளவன். அவனுடைய திருவடிகள் வாழ்க.

No comments: