Monday, March 4, 2013

390. காண்பறியலரே!


390. காண்பறியலரே!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 87-இல் காண்க. 
பாடலின் பின்னணி: ’அதியமானின் அரண்மனையை அவனிடம் அன்புடையவர்கள் அணுக முடியுமே தவிர, அவனுடைய பகைவர்கள் கனவிலும் நெருங்க முடியாது. ஒருநாள் இரவு, நான் அதியமானின் மனைமுற்றத்தில் நின்று, தடாரிப் பறையைக் கொட்டி அவன் புகழைப் பாடினேன். அதைக் கண்ட அதியமான், என்னுடைய அழுக்கேறிய உடையைக் களைந்து, புத்தாடை உடுப்பித்து, கள்ளும் சோறும் அளித்தான்; என் சுற்றத்தாருக்கு நெல்லும் பொன்னும் கொடுத்தான். தங்கள் வறுமையைப் போக்குவதற்கு வானம் மழை பெய்யவில்லை என்று சிலர் வருந்துகிறார்கள், அவர்கள் அதியமானைப் பற்றி அறியாதவர்கள் அல்லது அவனைப் பற்றி அறிந்திருந்தும் அவனை காணாதவர்கள்.’ என்று அதியமானின் கொடைத்தன்மையை பொருநன் ஒருவன் புகழ்வது போல் ஒளவையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: இயன் மொழி. அரசனின் இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆயி லாளர்
அரும்பலர் செருந்தி நெடுங்கால் மலர்கமழ்
விழவணி வியன்களம் அன்ன முற்றத்து
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்              5

கனவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்
மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்பஎன்
அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பன்னாள் அன்றியும்
சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்                10

வந்ததற் கொண்டு நெடுங்கடை நின்ற
புன்தலைப் பொருநன் அளியன் தான்எனத்
தன்உழைக் குறுகல் வேண்டி என்அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ             15

மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்னடை
இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற                20

அகடுநனை வேங்கை வீகண் டன்ன
பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டி பெறுகஎன் றோனே உண்துறை
மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்
கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி….      25

வான்அறியல என்பர் அடுபசி போக்கல்
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ அறியலர் காண்புஅறி யலரே!

அருஞ்சொற்பொருள்: அறவை நெஞ்சம் = அறம் புரியும் நெஞ்சம்; ஆயர் = இடையர்; வளர்தல் = மிகுதல். 2. மறவை நெஞ்சம் = வீரம் பொருந்திய நெஞ்சம்; ஆயில் = ஆய்+இல் ஆய் = சிறுமை; இல் = வீடு; ஆயில் = ஆய்+இல் = சிறிய வீடு. 3, செருந்தி = ஒருவகை மரம். 4. வியன் = பெரிய. 6. கடி = காவல். 7. கணம் = கூட்டம்; சிலம்ப = ஒலிக்க. 8. இரிய = கிழிய; ஒற்றி = அறைந்து. 10. ஞான்று = நாள், பொழுது; படர்தல் = செல்லுதல். 13. உழை = இடம்; அரை = இடை. 15. மடி = ஆடை; கொளீஇ = கொள்ளச் செய்து. 16. மட்டு = கள்.  17. அடிசில் = சோறு. 19. பொதியில் = மன்றம். 20. இரு = பெரிய; ஒக்கல் = சுற்றத்தார்; புலம்பு = தனிமை, வருத்தம். 21. அகடு = உள்ளிடம்; வீ = பூ. 22. பகடு = எருது. 23. கொண்டி = கொள்ளை (பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல்). 26. வான் = மழை.

கொண்டு கூட்டு: வியன்கண் மன்ன முற்றத்து, வியனகர், மாடம் சிலம்ப, தடாரி ஒற்றி, பாடிநின்ற தன்றாக, கொண்டு, என, குறுகல் வேண்டி, களைந்து, கொளீஇ, ஊட்டலன்றியும், ஒக்கல் புலம்பகற்ற, நல்கி, பெறுக என்றோன், நாடன், அறியலரும் காண்பறியலரும் என்பர் எனக் கூட்டுக.

உரை: மலர்ந்த செருந்தி முதலிய மரங்கள் அடர்ந்த பெரிய காட்டில், அறம்புரியும் மனப்பான்மையுடைய இடையர்களும், வீரம் மிகுந்த சிறுகுடியினரும் கூடி எடுக்கும்,  மணம் கமழும் விழாக்களினால் அழகுறும் மன்றத்தைப் போல் அதியமானின் பெரிய அரண்மனை இருந்தது. அந்த அரண்மனையின் முற்றம் அன்புடையவர்கள் மட்டுமே அணுகக் கூடியதாகவும், பகைவர்களால் கனவில்கூட நெருங்க முடியாத அளவுக்குக் காவலுடையதாகவும் இருந்தது.  அந்த அரண்மனையின் முற்றத்தை அடைந்து, மலைகளின் கூட்டம் போன்ற மாடங்களில் எதிரொலி உண்டாகுமாறு தடாரிப் பறை கிழியும்படி அறைந்து, நான் பல நாட்கள் பாடவில்லை.  நான் சென்ற முதல்நாள் இரவுப் பொழுதிலேயே, நான் வந்ததைக் கண்ட அதியமான் தன்னுடைய அரண்மனையின் நெடியவாயிலில் நின்று பாடுபவன் இரங்கத் தக்கவன் என்று எண்ணினான். நான் அவனை அணுகுவதைப் பார்த்து, என் இடுப்பில் பழமையான பாசிபோல் அழுக்குப் படிந்திருந்த கந்தைத் துணியை அகற்றி, அழகிய மலர் போன்ற புத்தாடையைக் கொடுத்து அணியச் செய்தான். அதுமட்டுமல்லாமல், மகிழ்ச்சி அளிக்கும் கள்ளையும், அமிழ்து போன்ற சுவையுடைய ஊன்துவையல் கலந்த சோறும் வெள்ளிக் கலத்தில் கொடுத்து உண்ணச் செய்தான். ஊரின் முன்னிடமாகிய மன்றத்தில் தங்கியிருந்த என் சுற்றத்தார், என்னைப் பிரிந்ததால் அடைந்த தனிமைத் துயரத்தை நீக்க, எருதுகளைக் கொண்டு விளைவித்த, தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கைப் பூவைப் போன்ற நிறமுடைய செந்நெல்லைப் போரோடு அளித்து, இதனைக் கொள்க என்றான். மலையில் பூத்த மலர்களை கொண்டுவந்து நீர்த்துறைகளில் சேர்க்கும் நீர்வளம் பொருந்திய நாட்டுக்கு உரியவன் அதியமான். இரவலர்கள் அவனைக் கண்டால், அவன் அவர்களைத் தன் மனைக்கு அழைத்துச் செல்வான். அவர்கள் அங்குச் சென்று, அவனுடைய திருவடிகளை வாழ்த்தி …… ‘எங்கள் பசித்துயரை அறிந்து அதைப் போக்குதற்காக மழைகூடப் பெய்யவில்லை’ என்பர் சிலர். அவர்கள் பெருமித மிக்க யானைகளையுடைய தலைவன் அதியமானை அறியாதவரும், அறிந்தும் அவனைக் காணாதவரும் ஆவர்.

1 comment:

Unknown said...

ஐயா! வணக்கம், இப்பாடலில் வரும் மட்டு எனும் சொல்லுக்கு கள் எனப் பொருள் கொண்டீர்கள். இதனால் அன்று ஔவையார் கள் அருந்தியுள்ளார், என உணரமுடிகிறது.
அட்டன்னழ காகவரை
தன்மேலர வார்த்து
மட்டுண்டுவண் டாலும்பொழில்
மாதோட்டநன் னகரிற்
பட்டவரி நுதலாளொடு
பாலாவியின் கரைமேற்
சிட்டன்நமை யாள்வான்றிருக்
கேதீச்சரத் தானே. 8 - இத் தேவாரத்தில் மட்டு என்பது தேனைக் குறிக்கிறது. ஔவையார் உண்டது ஏன்? தேனாகாமல் கள்ளானது. சிறு சந்தேகம்.