Monday, March 18, 2013

396. பாடல்சால் வளன்!


396. பாடல்சால் வளன்!

பாடியவர்: மாங்குடி கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 24-இல் காண்க.
பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன். வாட்டாறு என்ற பெயருடைய ஊர் ஒன்று சோழ நாட்டில் உள்ள பட்டுக்கோட்டை அருகே இருந்ததாகவும், அதே பெயருடைய மற்றொரு ஊர் சேர நாட்டில் (தற்போதுள்ள கேரள மாநிலத்தில்) இருந்ததாகவும், வாட்டாற்று எழினியாதன் என்பவன் சேரநாட்டில் இருந்த வாட்டாற்றைச் சார்ந்தவன் என்றும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். எழினியாதன், எழனி என்பவனின் மகன். சங்க காலத்தில் எழினி என்ற பெயருடைய மன்னர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அவர்களுள், எழினி என்ற ஒருவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனோடு போரிட்டுத் தோற்றவன் என்றும் வாட்டாற்று எழினியாதன் என்று அழைக்கப் படுபவன் அந்த எழினி என்பவனின் மகன் என்பதும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்களின் கருத்து.
பாடலின் பின்னணி: ’வாட்டாற்று எழினியாதனின் நாடு மிகுந்த வளமுடையது. அவன் ஊக்கம் இல்லாதவர்க்கு ஊக்கம் அளிப்பவன்; உறவினர் இல்லாதவர்க்கு உறவினன் போன்றவன். அவன் எனக்கு மிகுந்த அளவில் ஊனும், உணவும், கள்ளும், பொருளும் அளித்தான். அவன் புகழ் வாழ்வதாக.’ என்று ஒருபாணன் வாட்டாற்று எழினியாதனைப் புகழ்வதாக எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.


கீழ்நீரால் மீன்வழங்குந்து
மீநீரால் கண்ணன்ன மலர்பூக் குந்து
கழிசுற்றிய விளைகழனி
அரிப்பறையாற் புள்ளோப்புந்து
நெடுநீர்தொகூஉம் மணல்தண்கால்   5

மென்பறையாற் புள்இரியுந்து
நனைக்கள்ளின் மனைக்கோசர்
தீந்தேறல் நறவுமகிழ்ந்து
தீங்குரவைக் கொளைத்தாங்குந்து
உள்ளிலோர்க்கு வலியாகுவன்            10

கேளிலோர்க்குக் கேளாகுவன்
கழுமிய வென்வேல் வேளே
வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
கிணையேம் பெரும
கொழுந்தடிய சூடு என்கோ?               15

வளநனையின் மட்டுஎன்கோ?
குறுமுயலின் நிணம்பெய்தந்த
நறுநெய்ய சோறுஎன்கோ?
திறந்து மறந்து கூட்டுமுதல்
முகந்துகொள்ளும் உணவுஎன்கோ?    20
அன்னவை பலபல . . .                       
. . . . வருந்திய
இரும்பேர் ஒக்கல் அருந்திஎஞ்சிய
அளித்துவப்ப ஈத்தோன் எந்தை
எம்மோர் ஆக்கக் கங்குண்டே;            25

மாரிவானத்து மீன்நாப்பண்
விரிகதிர வெண்திங்களின்
விளங்கித் தோன்றுகவவன் கலங்கா நல்லிசை!
யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
நிரைசால் நன்கலன் நல்கி                            30

உரைசெலச் சுரக்கஅவன் பாடல்சால் வளனே!

அருஞ்சொற்பொருள்: 1. கீழ்நீர் = நீர்க்கீழ் = நீருக்குள்ளே; வழங்கும் = இயங்கும் (திரியும்). 2. மீ = மேல்; கழி = நீர் கழியும் இடம். 3. கழனி = வயல். 4. அரி = மென்மை; ஓப்புதல் = ஓட்டுதல். 5. தொகூஉம் = குவியும்; கால் = காற்று. 6. பறை = இறகு; இரியல் = விட்டுப் போதல். 7. நனை = பூ. 8. நறவு = கள். 9. குரவை = ஒருவகைக் கூத்து; கொளை = இசைப்பாட்டு; 10. உள் = மனவெழுச்சி (ஊக்கம்). 11. கேள் = உறவு. 12. கழுமிய = கலந்த, செறிந்த. 16. நனை = பூ. 25. கங்கு= எல்லை. 26. மாரி = மேகம்; மீன் = விண்மீன்; நாப்பண் = நடுவே. 28. கலங்குதல் = தெளிவில்லாமல் இருந்தல். 31. உரை = புகழ்; சால் = நிரம்பிய.

கொண்டு கூட்டு: வழங்கும், பூக்கும், ஒப்பும், இரியும், தாங்கும் வாட்டாற்று எழினியாதனாகிய வேள்வலியாகுவன், கேளாகுவன், அவன் கிணையேம், பெரும, சூடென்கோ, மட்டென்கோ, சோறென்கோ, உணவென்கோ, அன்னவை பலபல வருந்திய ஒக்கல் ஆர்ந்து எஞ்சிய, அழித்து உவப்ப ஈத்தான் எந்தை; கங்கு இல்லை; நல்லிசை விளங்கித் தோன்றுக; வளன்சிறக்க எனக் கூட்டுக.

உரை: நீரில் மீன்கள் உலாவித் திரியும்; நீரின் மேல் மகளிரின் கண்போன்ற பூக்கள் மலர்ந்திருக்கும்; கழிகளால் சூழப்பட்ட வயல்களில்  உள்ள பறவைகள் மெல்லிய பறையின் ஓசையால் ஓட்டப்படும்;  நீர் மிக்க கடலலைகள் மணலை அள்ளித் தூவும் குளிர்ந்த காற்றால் மெல்லிய இறகுகளையுடைய புள்ளினங்கள் அங்கிருந்து பறந்து செல்லும்; மலர்களிடத்திலிருந்து பெற்ற கள் நிறைந்த மனைகளையுடைய கோசர் என்பவர்கள் இனிய கள்ளின் தெளிவை உண்டு மகிழ்ந்து இனிய குரவை ஆடும் இடத்தில் பாடல்கள் பாடப்படும்; நீர்வளம் மிகுந்த வாட்டாறு என்னும் ஊரின் தலைவனாகிய எழினியாதன் ஊக்கம் இல்லாதவர்க்கு ஊக்கம் அளிப்பவன்; உறவினர் இல்லாதார்க்கு உற்ற உரவினன் ஆவன். அவன் பிறபடையோடு கலந்த வெல்லும் வேற்படையையுடைய வேளிர் தலைவன்.  நாங்கள் அவனுடைய பொருநர். அவன் எமக்கு அளித்த கொழுமை நிறைந்த சூட்டிறைச்சியைச் சொல்வேனா; வளமான மலரினின்று இறக்கிய மதுவைச் சொல்வேனா; குறுமுயலின் தசையோடு கலந்த மணம் கமழும் நெய்ச் சோற்றைச் சொல்வேனா: திறந்து மூட மறந்த நெற் கூட்டிலிருந்து நாங்கள் எடுத்துக்கொண்ட உணவுப் பொருள்களைச் சொல்வேனா; அவை போன்றவை பலபலவாம்; என்னுடைய பெரிய சுற்றத்தார் உண்டதுபோக உணவு எஞ்சுமாறு, அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உணவுப் பொருள்களை அளித்தான். எம்மைப் போன்றவர் அவனிடம் பெற்ற செல்வத்துக்கு அளவே இல்லை. மேகங்கள் தவழும் வானில் விண்மீன்களின் இடையே திகழும் திங்களைப் போல் அவனுடைய நல்ல புகழ் நிலைபெற்றிருக்குமாக. நாள்தோறும் நாங்களும் எம்மைப் போன்றவர்களும் வாழ்த்திப் பாராட்டுமாறு களிற்று நிரைகளையும் நல்ல அணிகலன்களையும் வழங்கி அவன் புகழ் சிறப்பதாக.  புலவர் பாடும் புகழுடைய அவன் பெருஞ்செல்வம் மேலும் பெருகுவதாக.   

No comments: