Tuesday, March 19, 2013

400. உலகு காக்கும் உயர் கொள்கை!


400. உலகு காக்கும் உயர் கொள்கை!

பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
பாடலின் பின்னணி: ’விடியற்காலைப் பொழுதில் என் தடாரிப் பறையை இசைத்துச் சோழன் நலங்கிள்ளியின் புகழைப் பாடினேன். அவன் அதைக் கேட்டவுடன், என்னை அணுகி, எனக்குப் புத்தாடையும் மதுவும் சிறந்த பொருள்கள் பலவும் அளித்தான். அவனுடைய அரண்மனையிலே நான் பலநாட்கள் இருந்தேன். அவன் பகைவரை அழிப்பவன் மட்டுமல்லாமல் அவனை நாடி வந்தோரின் பசிப்பகையையும் அழிக்க வல்லவன். அவன் போர்க்களங்களில் வெற்றி பெற்றவன்; சிறப்பாகப் பல வேள்வித் தூண்களை நிறுவியவன். அவன் கடல்வழியே அயல்நாடுகளுக்குச் சென்று பொருளீட்டிப் புகழ் பெற்றவன். அவன் நாடு வளமும் வாழ்வதற்கேற்ற இனிமையும் உடைய நாடு.’ என்று பாணன் ஒருவன் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்வதாக இப்பாடலை கோவூர் கிழார் இயற்றியுள்ளார்.

திணை: பாடாண்.
துறை: இயன் மொழி.

மாகவிசும்பின் வெண்திங்கள்
மூவைந்தான் முறைமுற்றக்
கடல்நடுவண் கண்டன்னஎன்
இயம்இசையா மரபுஏத்திக்
கடைத்தோன்றிய கடைக்கங்குலால்                                         5

பலர்துஞ்சவும் தான்துஞ்சான்
உலகுகாக்கும் உயர்கொள்கைக்
கேட்டோன் எந்தைஎன் தெண்கிணைக் குரலே
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி                                          10

மிகப்பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
. . . . . . . . . . லவான
கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி
நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து
போதறியேன் பதிப்பழகவும்                                                     15

தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
மறவர் மலிந்ததன் . . . . .
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்                                         20

தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்
துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
உறைவின் யாணர்  நாடுகிழ வோனே!

அருஞ்சொற்பொருள்: 1. மாகம் = மேலிடம். 2. முறைமுற்றல் = பிறை வளர்ந்து முழுமதி ஆதல். 3. இயம் = இசைக்கருவி (தடாரிப்பறை). 5. கங்குல் = இரவு. 9. வேட்கை = விருப்பம்; தண்டாது = குறையாது. 10. சிதார் = கந்தை; மருங்கு = விலாப்பக்கம் (இடை). 11. வீறு = ஒளி. 14. நார்அரி = நாரால் வடிகட்டப்பட்ட; நறவு = கள். 15. போது = பொழுது. 16. கடிதல் = அழித்தல், ஓட்டுதல். 20. இரு = கரிய; கழி = உப்பங்கழி; ஆர்கலி = கடல்; வங்கம் = ஓடம். 21. தேறுதல் = தெளிதல்; சீத்து = செம்மை செய்து; உய்த்தல் = செலுத்தல். 22. துறை = நீர்த்துறை; 23. யாணர் = வருவாய் (புது வருவாய்); கிழவோன் = உரியவன்.

கொண்டு கூட்டு: கடைக் கங்குலில், இசையா, ஏத்தி, தோன்றிய, குரல்கேட்டோன்; கேட்டதற்கொண்டும், தண்டாது, நீக்கி, அளித்திட்டு, நோக்கி, அறியேன், வல்லன், கிழான் எனக் கூட்டுக.

உரை: உயர்ந்த ஆகாயத்தில் இருக்கும், பதினைந்து நாட்கள் முறையே முற்றிய முழுமதியைக் கடலின் நடுவே கண்டாற் போன்ற எனது இசைக்கருவியாகிய தடாரிப்பறையை அறைந்து சோழன் நலங்கிள்ளியின் வாயிலில் தோன்றி அவன் புகழை முறையாகப் பாடினேன். இரவின் கடைப் பகுதியாகிய விடியற்காலையில் உலகத்து மக்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்க சோழன் நலங்கிள்ளி மட்டும் உலகைக் காக்கும் உயர்ந்த கொள்கை உடையவனாய், உறங்காமல் என் தடாரிப்பறையின் இசையைக் கேட்டான். என் இசையைக் கேட்டதனால், என் மீதுள்ள அன்பு குறையாமல், என் இடுப்பிலிருந்த பழைய கந்தைத் துணியை நீக்கி, புத்தாடை உடுப்பித்து, அதன் அழகைக் கண்டு மகிழ்ந்து, மிகப்பெரிய சிறப்புடைய நல்ல ஒளி மிகுந்த அணிகலன்களை…. நாரால் வடிகட்டப்பட்ட கள்ளை உண்டு நாள்தோறும் மகிழ்ச்சி மிகுந்து அவன் ஊரில் இருந்தேன். நாட்கள் கழிந்ததையே நான் அறியேன். சோழன் நலங்கிள்ளி தன் பகைவரை அழிப்பது மட்டுமல்லாமல் அவனை அடைந்தோரின் பசிப்பகையையும் அழிக்க வல்லவன். வீரர்கள் மிகுந்த தன்…. அவன் கேள்வி அறிவிற் சிறந்த மறையோர்கள் நிறைந்த வேள்விச் சாலையில் தூண்களை நிலைநாட்டியவன்.  தெளிந்த நீர்பரந்த கடலுக்குச் செல்லும் ஆற்றின் வழிகளைச் செம்மை செய்து, கரிய கழி வழியாக வந்து இறங்கும் ஒடங்களை அவ்வாறுகளில் செலுத்தி நீர்த்துறைகள் தோறும் அவற்றைப் பிடித்துக் கட்டும் நல்ல ஊர்களையும், வளமாக வாழ்தற்குரிய புது வருவாயையும் உடைய நாட்டுக்கு உரியவன் சோழன் நலங்கிள்ளி.    

No comments: