391. வேலி ஆயிரம் விளைக!
பாடியவர்: கல்லாடனார்.
இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 23-இல் காண்க.
பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான். பொறையாறு என்பது சோழநாட்டில் கடற்கரையில் இருந்த ஓரூர். இவனைப் பாடியவர் கல்லாடனார். இவன் புலவர்களுக்கு பெருமளவில் ஆதரவு அளித்த புரவலன்.
பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான். பொறையாறு என்பது சோழநாட்டில் கடற்கரையில் இருந்த ஓரூர். இவனைப் பாடியவர் கல்லாடனார். இவன் புலவர்களுக்கு பெருமளவில் ஆதரவு அளித்த புரவலன்.
பாடலின் பின்னணி:
கல்லாடனார்
முன்பு ஒருமுறை பொறையாற்றுக் கிழானைக் கண்டு அவனிடம் பரிசு பெற்றவர். அவர் வடவேங்கட
நாட்டைச் சார்ந்தவர். அங்கு வளம் குன்றி வறுமை மிகுந்தது.. அவர் முன்பு ஓருமுறை பொறையாற்றுக்
கிழானைக் கண்டு பரிசு பெற்றதை அறிந்தவர்கள் அவர் நிலையைக் கண்டு வருந்தி, பொறையாற்றுக்
கிழானை மீண்டும் காணுமாறு கூறினார். அவர்கள் கூறியதற்கேற்ப, அவரும் அவனிடம் பரிசு பெறச்
சென்றார். அவனை, ’நீ உன் மனைவியுடன் இனிதாக உறங்குக.’ என்றும் ‘உன் நாட்டில் வேலிக்கு
ஆயிரம் கலம் நெல் விளைந்து வளம் பெருகுக.’ என்றும் வாழ்த்தினார். புலவர் கல்லாடனார்
இப்பாடலைத் தன் கூற்றாக இல்லாமல் ஒருபொருநன் கூற்றாக அமைத்துள்ளார்.
பாடாண் திணை: ஒருவருடைய
புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடைநிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.
தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி 5
அரியல் ஆர்கையர் உண்டுஇனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
நனந்தலை மூதூர் வினவலின்……… 10
முன்னும் வந்தோன்
மருங்கிலன் இன்னும்
அளியன் ஆகலின் பொருநன் இவன்என
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் 15
அளியன் ஆகலின் பொருநன் இவன்என
நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
காண்கு வந்திசிற் பெரும, மாண்தக
இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் 15
துதைந்த தூவியம் புதாஅம் சேக்கும்
ததைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
நெஞ்சமர் காதல் நின்வெய் யோளொடு
இன்துயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
துளிபதன் அறிந்து பொழிய 20
வேலி ஆயிரம் விளைகநின் வயலே!
அருஞ்சொற்பொருள்:
1.
எழிலி = மேகம்; இசைக்கும் = முழங்கும். 2. விண்டு = மலை; பிறங்கல் = சிறுமலை, திரள்.
3. முகடு = உச்சி. 4. பகடு = எருது (யானை, எருமை, பசு இவற்றின் ஆண்). 5. மூரி = திரண்ட
ஊன் தடி; கெண்டி = கிண்டி. 6. அரியல் = கள்; ஆர்கையர் = உண்பவர்; உவத்தல் = மகிழ்தல்.
7. வரைப்பு = எல்லை. 8. இறுத்தல் = தங்குதல்; இரு = பெரிய; ஒக்கல் = சுற்றம். 9. தீர்கை
= நீங்குதல். 10. நனந்தலை = அகன்ற இடம். 11. மருங்கு = செல்வம். 15. இரு = கரிய.
16. துதைந்த = செறிந்த; தூவி = இறகு; புதா = ஒருவகை நாரை அல்லது ஒரு வகைப் பறவை. சேக்கும் = தங்கும். 17. ததைந்த = செறிந்த. 18.
வெய்யோள் = விரும்பப்பட்டவள். 20. துளி = மழை; பதன் = காலம், பருவம். 21. வேலி = ஒரு
நில அளவு ( 1 வேலி = 6.74 ஏக்கர்); ஆயிரம் என்பது ஆயிரம் கலத்தைக் குறிக்கிறது (ஒரு
கலம் = 12 மரக்கால்; ஒரு மரக்கால் = 4 படி).
கொண்டு கூட்டு:
வடபுலம்
பசித்தென, இறுத்த ஒக்கல், வினவின் என, உணர்ந்து கூற, காண்கு வந்திசின், பெரும, வரைப்பின்
வெய்யோளோடு இன்றுயில் பெறுக; துளிபொழிய, வயல் விளைக எனக் கூட்டுக.
உரை: வேங்கட நாடாகிய
வடநாட்டில், குளிர்ந்த மழைத்துளிகளை மிகப் பெய்து மேகங்கள் முழங்கும் மலை போல, எருதுகளின்
உழைப்பால் நெல் விளைந்து குவிந்திருந்தது. அவ்வெருதுகளின் உழைப்பால் பெற்ற பெரும் வளத்தை
மகிழ்ச்சியோடு வாழ்த்தி, ஊன்கறியைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கள்ளோடு உண்டு என்னுடைய
பெரிய சுற்றத்தார் மகிழ்ச்சியோடு அங்கு இருந்தனர். ஆனால், அந்த வேங்கட நாடு வறுமையுற்றது. ஆகவே, என் சுற்றத்தார், இங்கே வந்து தங்கினர். அவர்கள் இந்நாட்டை விட்டு நீங்கும் இயல்புடையவரல்லர்.
பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தையுடைய மூதூரில்
…. ’இவன் முன்பே இங்கு வந்தவன்; பொருளில்லாதவன். ஆதலால், இரங்கத்தக்கவன்.’ என்று உன்னோடு நெருங்கிப் பழகி உன் உள்ளத்தை அறிந்தவர்கள்
கூற, நான் உன்னைக் காண வந்தேன். பெரும! கரிய நீர்மிகுந்த பெரிய கழியில் மீன்களைத் தேடி
உண்ணும், செறிந்த சிறகுகளையுடைய புதா என்னும் பறவைகள் தங்கும் அடர்ந்த புன்னைமரங்களையுடைய
பெரிய அரண்மனையில், உன்மீது காதல் கொண்ட, உன்னால் விரும்பப்பட்ட, உன் மனைவியுடன் நீ
இனிதாக உறங்குக. நெல்வளம் பெருகுமாறு தகுந்த காலத்தில் மழை பொழிந்து உன் நாட்டில் வேலிக்கு
ஆயிரம் கலம் நெல் விளைவதாக.
No comments:
Post a Comment