Monday, March 18, 2013

394. என்றும் செல்லேன்!


394. என்றும் செல்லேன்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 54-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன் (394). இவன் சேரநாட்டின் ஒருபகுதியாகிய குட்டநாட்டு அரசர் குடியில் தோன்றியவன். இவன் சோழ அரசன் ஒருவனுக்குப் படைத்தலைவனாக இருந்ததால் சோழிய ஏனாதி என்ற பட்டம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவனைப் பாடியவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
 பாடலின் பின்னணி: ’நான் காலைவேளையில் என் தடாரிப்பறையை அறைந்து, சோழன் ஏனாதி திருக்குட்டுவனின் தந்தையின் புகழை வஞ்சித்துறைப் பாடலாகப் பாடினேன். என் பாட்டைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த திருக்குட்டுவன், பெரிய யானை ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தான். அந்த யானையைக் கண்டு அஞ்சி, நான் அதை திருக்குட்டுவனிடம் திருப்பி அனுப்பிவிட்டேன். தான் அளித்த யானை என் தகுதிக்குத் ஏற்ற பரிசில் இல்லை என்று நினைத்து முன்னர் அளித்த யானையைவிடப் பெரிய யானையைப் பரிசாக அனுப்பினான். இனிமேல், நான் எவ்வளவு வறுமையால் வாடினாலும் திருக்குட்டுவனிடம் பரிசு பெறச் செல்ல மாட்டேன். புலவர்களே, நீங்களும் அவனிடம் பரிசு பெறும் எண்ணத்தைக் கைவிட்டுவிடுங்கள்.’ என்று ஒருபாணன் கூறுவதாக, வஞ்சப் புகழ்ச்சியாகப் புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் இப்பாடலில் திருக்குட்டுவனைப் புகழ்கிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை: கடை நிலை. அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்.

சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
ஒலிகதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்
வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்
வள்ளிய னாதல் வையகம் புகழினும்
உள்ளல் ஓம்புமின் உயர்மொழிப் புலவீர்!              5

யானும், இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை
ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினென்; ஆக
அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக்  10

கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
வெஞ்சின வேழம் நல்கினன்; அஞ்சி
யான்அது பெயர்த்தனென் ஆகத் தான்அது
சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும்ஓர்
பெருங்களிறு நல்கி யோனே; அதற்கொண்டு         15

இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்
துன்னரும் பரிசில் தரும்என
என்றும்செல் லேனவன் குன்றுகெழு நாட்டே!



அருஞ்சொற்பொருள்: 1. சிலை = வில்; உலாய் = வளைத்து, இயங்கி; சாந்து = சந்தனம். 2. வெண்குடை = சோழிய ஏனாதியின் ஊர். 3. தடக்கை = பெரிய கை; வாய்வாள் = குறி தவறாத வாள். 5. ஒம்புதல் = விலக்கல் (கைவிடுதல்). 6. வைகறை = விடியற்காலம். 7. தெளிர்ப்ப = ஒலிக்க; ஒற்றி = அறைந்து. 8. பாடு = ஓசை; இமிழல் = ஒலித்தல். 9. வாடா வஞ்சி = வஞ்சித் துறைப் பாடல். 11. மருப்பு = கொம்பு.  16. ஒக்கல் = சுற்றம்; புலம்பு = தனிமை, வருத்தம்.

கொண்டு கூட்டு: கிழவனான குட்டுவன், வள்ளியானாதல், புகழினும், புலவீர், உள்ளல் ஓம்புமின்; யானும், ஒற்றி, பாடினேனாக; வேண்டி நல்கினன்; அஞ்சி, பெயர்த்தனெனாக, நாணி பெருங்களிறு நல்கினன்; அதற்கொண்டு, புலம்புறினும், தருமென, நாட்டுக்குச் செல்லேன் எனக் கூட்டுக.

உரை: சோழிய ஏனாதி திருக்குட்டுவன் விற்பயிற்சியால் உயர்ந்து, அகன்று சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடையவன். அவன் தழைத்த கதிர்களுடன் கூடிய வயல்களையுடைய வெண்குடை என்னும் ஊருக்கு உரியவன்.  அவன் வலிமை மிக்க பெரிய கைகளையும், குறிதவறாத வாளையும் உடையவன். அவன் வள்ளன்மையை உலகம் புகழ்ந்தாலும், உயர்ந்த மொழியறிவும் புலமையும் உடைய புலவர்களே, அவனிடம் சென்று பரிசு பெறலாம் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். நான் இருளும் நிலவும் அகன்று பகற்பொழுது வருவதற்காக வந்த விடியற் காலைப் பொழுதில் என்னுடைய ஒருகண் தடாரிப் பறையை ஒலிக்குமாறு அறைந்து, ஒலிமுழக்கம் செய்யும் முரசையும் நன்கு செய்யப்பட்ட தேரையுமுடைய அவன் தந்தையின் புகழை வஞ்சித்துறைப் பாடலாகப் பாடினேன்.  உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு, நான் அவனைவிட்டுப் பிரியாமல் இருக்கவேண்டும் என்று விரும்பி, பகைவரைக் கொன்ற பின்பும் சினம் தணியாத, புலால் நாறும் கொம்பினையுடைய யானை ஒன்றை எனக்குத் திருக்குட்டுவன் அளித்தான்.  நான் அந்த யானையைக் கண்டு அஞ்சி, அதைத் திருப்பி அவனிடம் அனுப்பிவிட்டேன்.  அவன் என் தகுதி அறியாமல் சிறிய யானையை எனக்குப் பரிசாக அளித்ததால் நான் அதைத் திருப்பி அனுப்பினேன் என்று எண்ணித் தன் அறியாமையைக் கருதி நாணினான். பின்னர், அதைவிடப் பெரிய யானை ஒன்றைப் பரிசாக அளித்தான். ஆகவே, என் பெரிய சுற்றம் வறுமையால் வாடினாலும் திருக்குட்டுவனுடைய குன்றுகள் பொருந்திய நாட்டுக்குப் பரிசிலை விரும்பி நான் இனி எப்போதும் செல்ல மாட்டேன்.      

No comments: