Monday, October 26, 2009

118. தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடலின் பின்னணி: பாரியால் பாதுகாக்கப்பட்ட பறம்பு நாடு, அவன் இறந்ததால் பாதுகாவலின்றி அழிவதைக் கண்டு கபிலர் வருந்துகிறார். ஒரு சிறு குளம் அதன் கரை உடைந்து அழிவதைக் கண்டவர் பறம்பு நாடும் இப்பாடித்தான் அழியுமோ என்று இப்பாடலில் தன் வருத்தத்தைக் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

அறையும் பொறையும் மணந்த தலைய
எண்நாள் திங்கள் அனைய கொடுங்கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர்வேல் குவைஇய மொய்ம்பின்
5 தேர்வண் பாரி தண்பறம்பு நாடே!

அருஞ்சொற்பொருள்:
1.அறை = பாறை; பொறை = சிறுமலை; மணந்த = கூடிய. 3. கீளுதல் = உடைதல், கிழிதல்; மாதோ - அசை. 4. குவை = திரட்சி; மொய்ம்பு = தோள் வலிமை.

உரை: பாறைகளும் சிறு குன்றுகளும் கூடிய இடத்தில் எட்டாம் பிறைத் திங்கள் போல் வளைந்த கரையைக்கொண்ட தெளிந்த நீருடைய சிறிய குளம் உடைந்திருப்பது போல், கூரிய வேலும் திரண்ட வலிய தோள்களும் தேர் வழங்கும் வள்ளல் தன்மையும் உடைய பாரியின் குளிர்ந்த பறம்பு நாடு அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு: பாறைகளயும் சிறுகுன்றுகளையும் கரைகளாகக் கொண்டு குளங்கள் அமைப்பது சங்க காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிய வருகிறது. மற்றும் இது போன்ற குளங்களை நீர் நிரம்பும் காலத்துப் பாதுகாப்பது மரபு என்ற கருத்து அகநாநூற்றில் காணப்படுகிறது.

………….சிறுக்கோட்டுப்
பெருங்குளம் காவலன் போல
அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. (அகநானூறு - 252)

பொருள்: சிறிய கரையையுடைய பெரிய குளத்தைக் காவல் காப்பவனைப் போல் தன் உறக்கத்தையும் மறந்து என் தாய் என்னைக் காவல் காத்து வருகின்றனள் என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

இப்பாடலில், சிறுகுளம் பாழாகியதாகக் கபிலர் கூறுகிறார். அச் சிறுகுளம் பாதுகாவல் இல்லாத காரணத்தால் கரைகள் உடைந்து பாழாகியதைக் கண்ட கபிலர், அக்குளம் போல், பாரியின் பாதுகாவல் இல்லாததால் பறம்பு நாடும் பாழாகியது என்று குறிப்பிடுவதாகத் தோன்றுகிறது.

4 comments:

Admin said...

Thanks your sir good explaination

முனைவர். பிரபாகரன் said...

Dear Admin,
Thanks.
Prabhakaran

electrokavin said...

மிக தெளிவான விளக்கஉரை ஐயா. 👌👌👌

முனைவர். பிரபாகரன் said...

Dear electrokavain,
Thanks.
Prabhakaran