Monday, October 12, 2009

109. மூவேந்தர் முன் கபிலர்!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வேள் பாரி. வேள் பாரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் மகளிரை மணக்க விரும்பினர். தன் மகளிரை மூவேந்தரில் எவருக்கும் மணம் செய்விக்கப் பாரி மறுத்தான். ஆகவே, மூவேந்தரும் ஒருவர் ஒருவராகப் பாரியோடு போரிட்டுத் தோல்வியுற்றனர். அது கண்ட கபிலர், “மூவேந்தர்களே! நீங்கள் மூவரும் ஒன்று கூடிப் பறம்பு நாட்டை முற்றுகையிட்டாலும் பாரியை வெல்வது அரிது. பறம்பு நாடு வளமானது. அது உழவர்கள் உழாமலேயே பலவித உணவுப் பொருள்களை அளிக்கும் நாடு. பறம்பு மலையோ வானத்தைப் போல் பெரியது. அதிலுள்ள சுனைகள் வானத்திலுள்ள விண்மீன்கள் போல் காட்சி அளிப்பவை. உங்கள் முயற்சியாலும், படை வலிமையாலும் பறம்பினைக் கொள்வது இயலாத செயல். அதை அடையும் வழி எனக்குத் தெரியும். நீங்கள் பாணர்களைப் போல உங்கள் விறலியரோடு சென்று பாடலும் ஆடலும் செய்தால், பாரி தன் நாட்டையும் மலையையும் உங்களிக்கு அளிப்பான்” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: நொச்சி. மதிலைக் காக்கும் வீரர்கள் போர்ப்பூச் சூடியிருத்தலைப் புகழ்வது.
துறை: மகண் மறுத்தல். ஒரு தலைவன் அவனைவிட எளியவனின் மகளை வேண்ட, அவ்வெளியவன் தன் மகளை அத்தலைவனுக்கு மணம் செய்விக்க மறுத்துக் கூறுதல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே;
நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;
5 இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;
மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து
திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.
வான்கண் அற்றுஅவன் மலையே; வானத்து
10 மீன்கண் அற்றுஅதன் சுனையே; ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர்; வாளிற் றாரலன்;
யான்அறி குவன்அது கொள்ளு மாறே;
15 சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர,
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

அருஞ்சொற்பொருள்:
1.அளி = இரக்கம். 2. நளி = பெருமை. 4. வெதிர் = மூங்கில். 5. ஊழ்த்தல் = முதிர்தல். 6. வீழ்க்கும் = தாழ இருக்கும் (நிலத்துள் ஆழச் சென்றிருக்கும்). 7. அணி =அழகு; ஓரி = குரங்கு; மீது = மேல். 9. கண் = இடம்; அற்று = அத்தன்மைத்து.10. கண் - அசை நிலை. 12. புலம் = இடம். 13. தாள் = முயற்சி. 15. சுகிர்தல் = வடித்தல்; புரி = முறுக்கு; சுகிர்புரி = தொய்வற்ற இறுக்கமான நரம்பு.16. விரை = மணம்; ஒலித்தல் = தழைத்தல்

உரை: பாரியின் பறம்பு மலை இரங்கத் தக்கது. பெருமையுடைய முரசுடன் நீங்கள் மூவரும் சேர்ந்து முற்றுகை இட்டாலும், உழவர் உழாமல் விளையும் பயனுள்ள நான்கு பொருள்கள் பறம்பு நாட்டில் உள்ளன. ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலில் நெல் விளையும். இரண்டு, இனிய சுளைகள் உள்ள பலாவில் பழுத்த பழங்கள் இருக்கும். மூன்று, வளமான வள்ளிக் கொடியிலிருந்து கிழங்குகள் கீழே தாழ்ந்து இருக்கும். நான்கு, அழகிய நிறமுள்ள குரங்குகள் தாவுவதால் தேனடைகள் மிகவும் அழிந்து, கனத்த நெடிய மலையிலிருந்து தேன் சொரியும்.

பாரியின் பறம்பு மலை அகல, நீள, உயரத்தில் வானத்தைப் போன்றது. அதிலுள்ள நீர்ச்சுனைகள் விண்மீன்கள் போன்றன. அந்த மலையில், நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டினாலும், இடமெல்லாம் தேர்களை நிறுத்தினாலும் உங்கள் முயற்சியால் பறம்பு நாட்டைப் பெற முடியாது. நீங்கள் வாளால் போரிட்டாலும் அவன் தன் நாட்டை உங்களுக்குத் தரமாட்டன். அதை அடையும் வழியை நான் அறிவேன். தொய்வற்றதாகவும் இறுக்கமாகவும் முறுக்கப் பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைச் செய்து, அதை மீட்டி, மணமிக்க தழைத்த கூந்தலையுடைய உங்கள் விறலியர் பின் வர ஆடியும் பாடியும் சென்றால், பாரி பறம்பு நாட்டையும் பறம்பு மலையையும் ஒருங்கே உங்களுக்கு அளிப்பான்.

சிறப்புக் குறிப்பு: இங்கு “அளிதோ” என்பது வியப்பின் காரணத்தால் கூறப்பட்டது.

ஒரு நாட்டிற்கு அரண் எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

கொளற்கரியதாய் கொண்ட கூழ்த்தாகி, அகத்தார்
நிலைக்கெளிதாம் நீர தரண். (குறள் - 745)

என்ற குறளில் கூறுகிறார். அதாவது, அரண் என்பது பகைவரால் பற்றுதற்கு அரியதாய் உள்ளிருப்போர்க்கு வேண்டிய அளவு உணவு உடையதாய் உள்ளிருப்பவர்கள் தங்கிப் போர்செய்வதற்கு எளியதாய் இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் கருத்தும் இப்பாடலில் கபிலர் கூறும் கருத்தும் ஒத்திருப்பது சிந்திக்கத் தக்கது.

No comments: