Monday, October 26, 2009

119. இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடலின் பின்னணி: பறம்பு நாட்டின் அழிவு கண்டு கலங்கும் கபிலர், முன்பு அந்நாடு வளமாக இருந்ததையும் பாரியின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் நினைவு கொள்கிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;
5 நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

அருஞ்சொற்பொருள்:
1.கார் = கார்காலம் (ஆவணி, புரட்டாசி); பெயல் = மழை; தலைஇய = பெய்த; காண்பு = காட்சி; காலை = காலம், பொழுது. 2. வரி = புள்ளி; தெறுழ் = ஒரு கொடி; வீ = பூ. 3. ஈயல் = ஈசல்; அளை = மோர். 4. யாணர் = புதுவருவாய்; நந்துதல் = கெடுதல். 6. பணை = முரசு; கெழு = பொருந்திய(உடைய); இறத்தல் = மிகுதல்.

கொண்டு கூட்டு: வள்ளியோன் நாடு இன் அளைப் புளித்து; மென்தினை யாணர்த்து; அது நந்துங் கொல்லோ எனக் கூட்டுக.

உரை: பாரி இருந்த பொழுது, கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த காட்சிக்கினிய நேரத்து, யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயையும் உடையதாக இருந்தது பறம்பு நாடு. நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல், முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?

சிறப்புக் குறிப்பு: இப்பாடலில் கபிலர் கூறியுள்ளதைப் போல், ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்பது பண்டைக்காலத்தில் மரபாக இருந்தது என்பது பற்றிய குறிப்பு அகநானூற்றிலும் காணப்படுகிறது.

சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்
இதைப்புன வரகின் அவைப்புமாண் அரிசியொடு
கார்வாய்த்து ஒழிந்த ஈர்வாய்ப் புற்றத்து
ஈயல்பெய்து அட்ட இன்புளி வெஞ்சோறு
சேதான் வெண்ணெய் வெம்புறத்து உருக
இளையர் அருந்த … (அகநானூறு - 394: 1- 7)

பொருள்: சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் அமைய முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குத்துதலாலே மாட்சியுற்ற அரிசியொடு, கார் காலத்து மழைபெய்து நீங்கிய ஈரமான வாயிலையுடைய புற்றினிடத்திருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் பெய்து சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைச், செவலைப் பசுவின் வெண்ணெயானது அதன் வெப்பமான புறத்தே இட்டுக் கிடந்து உருகிக்கொண்டிருக்க, நின் ஏவலாளர் அருந்துவர்.

No comments: