Monday, October 26, 2009

114. நெடியோன் குன்று



பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: நீண்ட தூரம் சென்ற பிறகும் பறம்பு மலை கண்ணுக்குத் தெரிவதைக் கண்டு பாரி மகளிர் வியப்படைந்தனர். அது கண்ட கபிலர், பாரி உயிரோடிருந்த பொழுது அம்மலையின் நிலையையும் பாரியின் வள்ளல் தன்மையையும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்; சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற;
களிறுமென்று இட்ட கவளம் போல
நறவுப்பிழிந்து இட்ட கோதுஉடைச் சிதறல்
5 வார்அசும்பு ஒழுகு முன்றில்
தேர்வீசு இருக்கை நெடியோன் குன்றே.

அருஞ்சொற்பொருள்:
1.ஈண்டு = இங்கு; வரை = அளவு. 2. மன்ற - அசைச் சொல் (தெளிவாக என்றும் பொருள் கொள்ளலாம்). 4. நறவு = கள், தேன்; கோது = சக்கை. 5. வார்த்தல் = ஊற்றுதல்; அசும்பு = சேறு; முன்றில் = முற்றம். 6. வீசுதல் = வரையாது கொடுத்தல்.

கொண்டு கூட்டு: நெடியோன் குன்று ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்.

உரை: யானை மென்று துப்பிய கவளம் சிதறிக் கிடப்பதைப் போல், மதுவடித்த பிறகு ஒதுக்கப்பட்டுச் சிதறிக் கிடக்கும் சக்கையிலிருந்து மதுச் சேறு ஒழுகும் முற்றத்திலிருந்து தேர்களை வரையாது வழங்கும் இயல்புடைய உயர்ந்தோனாகிய பாரியின் குன்று இங்கு நின்றோர்க்கும் தெரியும்; இன்னும் சிறிதளவு தூரம் சென்று நின்றவர்களுக்கும் அது தெளிவாகத் தெரியும்.

சிறப்புக் குறிப்பு: பாரி உயிரோடு இருந்த பொழுது பறம்பு மலை புகழ் மிக்கதாய் எங்கும் விளங்கிற்று. அதைக் கண்டிராதவர்களும் அதன் புகழை அறிந்திருந்தார்கள். அவன் இறந்த பிறகு, மற்ற மலைகளைப் போல் கண்ணுக்குப் புலப்படும் சாதரண மலையாகவே பறம்பு மலையும் உள்ளது என்ற குறிப்பும் இப்பாடலில் காணப்படுகிறது.

No comments: