Monday, October 12, 2009

110. யாமும் பாரியும் உளமே!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வேள் பாரி. வேள் பாரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தம் பெரும் படையுடன் பறம்பு மலையை முற்றுகை இட்டனர். அச்சமயம், “நீங்கள் உங்கள் பெரும்படையுடன் எதிர்த்து நின்று போரிட்டாலும் பறம்பு நாட்டைப் பெற முடியாது. பறம்பு நாட்டில் உள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றனர். இனி என்னைப் போன்ற புலவர்களும் பாரியும் மட்டுமே உள்ளோம்; நீங்களும் பரிசிலரைப் போல் வந்து பாடினால் எஞ்சி யுள்ள எங்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.” என்று இப்பாடலில் கூறுகிறார்.

திணை: நொச்சி. மதிலைக் காக்கும் வீரர்கள் போர்ப்பூச் சூடியிருத்தலைப் புகழ்வது.
துறை: மகண் மறுத்தல். ஒரு தலைவன் அவனைவிட எளியவனின் மகளை வேண்ட, அவ்வெளியவன் தன் மகளை அத்தலைவனுக்கு மணம் செய்விக்க மறுத்துக் கூறுதல்.

கடந்துஅடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
5 யாமும் பாரியும் உளமே;
குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே.

அருஞ்சொற்பொருள்:
1.கடந்து அடுதல் = வஞ்சியாது எதிர் நின்று போரிடுதல்; தானை = படை, 2, உடன்றல் = போரிடுதல். 3. தண் = குளிர்ந்த

உரை: வஞ்சியாது எதிர்த்து நின்று போரிடும் படைகளையுடைய நீங்கள் மூவரும் ஒன்று கூடிப் போரிட்டாலும் பறம்பு நாடு பெறுதற்கு அரிது. குளிர்ந்த பறம்பு நன்னாடு முந்நூறு ஊர்களை உடையது. அங்குள்ள முந்நூறு ஊர்களையும் பரிசிலர் முன்னரே பெற்றனர். எஞ்சியிருப்பது, பாரியும் எம் போன்ற புலவர்களும்தான். நீங்கள் பரிசிலரைப் போல் பாடி வந்தால் பாரியையும், எம் போன்ற புலவர்களையும் பறம்பு மலையையும் பெறலாம்.

No comments: