Monday, October 12, 2009

112. உடையேம் இலமே!

பாடியவர்: பாரி மகளிர். இப்பாடலை இயற்றியவர் வேள் பாரியின் மகளிர் இருவர். சங்க இலக்கியத்தில் அவர்கள் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடலின் பின்னணி: பாரி இறந்த பின்னர், பாரியின் மகளிரைக் கபிலர் பாதுகாவலான இடத்தில் சேர்த்து அவர்களைக் காப்பாற்றி வந்தார். பாரி இறந்து ஒரு மாதம் ஆகிய பிறகு, ஒரு நாள் முழு நிலவில் அவர்களுக்குத் தங்கள் தந்தையின் நினைவும் நாட்டின் நினைவும் வந்து அவர்களை வாட்டியது. அவர்களின் மனவருத்தத்தை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்கள்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவின்
வென்றுஎறி முரசின் வேந்தர்எம்
5 குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!

அருஞ்சொற்பொருள்:
1.அற்றை = அன்று; திங்கள் = மாதம். 4. எறிதல் = அடித்தல். 5. இலம் = இல்லாதவர்கள் ஆனோம்.

உரை: ஒரு மாதத்திற்கு முன் வெண்நிலவு ஓளிவீசிக் கொண்டிருந்த பொழுது நாங்கள் எங்கள் தந்தையை உடையவர்களாக இருந்தோம்; எங்கள் (பறம்பு) மலையையும் பிறர் கொள்ளவில்லை. அதேபோல், இன்று வெண்நிலவு வீசுகிறது. ஆனால், வெற்றி முரசு கொட்டும் வேந்தர்கள் எங்கள் மலையைக் கொண்டனர்; நாங்கள் எங்கள் தந்தையை இழந்தோம்.

சிறப்புக் குறிப்பு: மூவேந்தர்களும் பாரியைப் போரில் வெல்ல முடியவில்லை. ஆனால், அவர்கள் அவனை சூழ்ச்சியால் வென்றனர். “வென்றெறி முரசின் வேந்தர்” என்பது மூவேந்தர்களும் தங்கள் வீரத்தால் பாரியை வெல்லவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் இகழ்ச்சிக் குறிப்பு.

No comments: