Monday, October 12, 2009

113. பறம்பு கண்டு புலம்பல்!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.

பாடலின் பின்னணி: பாரி இறந்த பிறகு, பாரி மகளிருக்குத் திருமணம் செய்யும் பொறுப்பைக் கபிலர் ஏற்றார். அவர்களைப் பாதுகாவலாக ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்புவித்து, அவர்களுக்கேற்ற கணவரை தேடுவதற்காக கபிலர் பறம்பு நாட்டைவிட்டு வெளியேறினார். அவர் பாரி மகளிரோடு பறம்பு நாட்டைவிட்டுச் செல்லும் பொழுது பெரும் வருத்தத்திற்கு உள்ளானார். அந்நிலையில் அவருடைய புலம்பலை இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும்,
அட்டுஆன்று ஆனாக் கொழுந்துவை ஊன்சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே; இனியே,
5 பாரி மாய்ந்தெனக், கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே;
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறுஇருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே.

அருஞ்சொற்பொருள்:
1.மட்டு = கள்; வாய் = தாழியின் வாய்; மை = செம்மறியாடு; விடை = கடா; வீழ்ப்ப = வீழ்த்த. 2. அடுதல் = சமைத்தல்; ஆன்று = நீங்கி; ஆனாமை = குறையாமை. 3. பெட்டல் = மிக விரும்பல்; பழுனுதல் = முதிர்தல், முடிவடைதல். 4. நட்டல் = நட்பு செய்தல்;மன்னோ - அசைச்சொல்; இனி = இப்போது. 5. கையற்று = செயலற்று. 6. வார்தல் = வடிதல்; பழிச்சுதல் = வாழ்த்துதல். 7. சேறல் = செல்லல், நடத்தல்; வாழி, ஓ இவை இரண்டும் அசைச் சொற்கள்; பெயர் = புகழ். 8. கோல் = அழகு; திரள் = திரட்சி. 9. நாறுதல் = மணத்தல்; இரு = கரிய; கிழவர் = உரியவர்; படர்தல் = நினைத்தல்.

கொண்டு கூட்டு: பறம்பே! பெருவளம் பழுனி நட்டனை முன்பு; இனி, நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்து சேறும் எனக் கூட்டுக.

உரை: பறம்பு மலையே! முன்பு, உன்னிடத்துக் கள் நிறைந்த தாழியின் வாய் திறந்தே இருந்தது; ஆட்டுக் கிடாவை வெட்டிச் சமைத்த கறியுடன் கூடிய கொழுமையான துவையலும் சோறும் குறையாது விரும்பிய அளவு அளிக்கும் முதிர்ந்த வளமும் இருந்தது. அவை மட்டுமல்லாமல் எம்மோடு நட்பாகவும் இருந்தாய். பெரும் புகழ் பெற்ற பறம்பு மலையே! இப்பொழுது, பாரி இறந்துவிட்டதால் கலங்கிச் செயலற்று நீர் வடியும் கண்ணோடு உன்னைத் தொழுது வாழ்த்தி, அழகிய திரண்ட முன்கைகளில் சிறிய வலையல்களை அணிந்த பாரி மகளிரின் மணமுள்ள கரிய கூந்தலுக்கு உரிமையுடையவரை நினைத்துச் (தேடிச்)செல்கிறோம்.

சிறப்புக் குறிப்பு: ஒரு பெண்ணின் கூந்தலைத் தீண்டும் உரிமை அவள் கணவனுக்கு மட்டுமே உள்ளது என்பது சங்க காலத்து மரபு. ஆகவே, கணவன் அவன் மனைவியின் கூந்தலுக்கு உரியவன் என்று கருதப்பட்டான். இக்கருத்து குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலிலும் காணப்படுகிறது.

………..... மென்சீர்க்
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே. (குறுந்தொகை - 225)

பொருள்: மெல்லிய சிறப்பை உடைய ஆரவாரிக்கும் மயிலினது பீலியைப் போன்ற தழைத்த மெல்லிய கூந்தல் உனக்கே உரிமை உடையதாகும் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இப்பாடலில், கூந்தல் கிழவரைத் தேடிச் செல்கிறோம் என்று கபிலர் கூறுவது பாரி மகளிரை மணப்பதற்கேற்ற கணவரைத் தேடிச் செல்கிறோம் என்பதைக் குறிக்கும்.

No comments: