Monday, October 26, 2009

117. தந்தை நாடு!

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடலின் பின்னணி: பாரி இருந்த பொழுது வளமாக இருந்த பறம்பு நாடு அவன் இறந்த பிறகு வளம் குன்றியதைக் கண்டு மனம் கலங்கிய கபிலர் தன் வருத்தத்தை இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
5 ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
10 ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே.

அருஞ்சொற்பொருள்:
1.மை = கருநிறம்; மைம்மீன் = சனி; புகைதல் = மாறுபடுதல், சினங்கொள்ளுதல்; தூமம் = புகை (வால் நட்சத்திரம்). 2. மருங்கு = பக்கம்; வெள்ளி = சுக்கிரன். 4. அமர் = அமைதி, விருப்பம். 5. ஆமா = பால் கொடுக்கும் பசு; ஆர்தல் = புசித்தல். 6. பல்குதல் = மிகுதல். 7. பெயல் = மழை; புன்புலம் = புன்செய் நிலம். 8.வெருகு = பூனை; எயிறு = பல்; புரைய = போன்ற. 9. முகை = மலரும் பருவத்தில் உள்ள அரும்பு. 10. ஆய் = அழகு.

உரை: சனி சில இராசிகளிலிருந்தாலும், வால் நட்சத்திரம் தோன்றினாலும், சுக்கிரன் தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலத்திலும், பறம்பு நாட்டில் வயல்களில் விளைவு மிகுந்திருக்கும்; புதர்களில் பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும்; வீடுகளில் கன்றுகளை ஈன்ற பசுக்கள் தங்கள் கன்றுகளை விருப்பத்துடன் நோக்கும் கண்களோடு நல்ல புல்லை நிரம்பத் தின்னும்; செம்மையான ஆட்சி நடைபெறுவதால் சான்றோர்கள் மிகுதியாக இருப்பர்; புன்செய் நிலங்களில்கூட மழை தவறாமல் பெய்யும். பூனைக்குட்டியின் முள்போன்ற பற்களை போன்றதும், பசுமையான முல்லை அரும்பு போன்றதும் ஆகிய பற்களை உடைய, அழகிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் தந்தையின் நாடு அவன் ஆட்சிக் காலத்தில் வளம் குன்றாமல் இருந்தது. ஆனால், இன்று வளம் குன்றியது.

சிறப்புக் குறிப்பு: சனி இடபம் (ரிஷபம்), சிம்மம், மீனம் ஆகிய மூன்று இராசிகளில் இருக்கும் பொழுது உலகில் வறட்சியும் வறுமையும் தீய செயல்களும் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. மற்றும், வானில் வால் வெள்ளி (வால் நட்சத்திரம்) தோன்றினாலும் சுக்கிரன் தெற்குத் திசையில் சென்றாலும் உலகுக்கு நல்லதல்ல என்ற கருத்தும் சோதிட நூல்களில் கூறப்படுகின்றன. இப்பாடலில் கபிலர் கூறும் கருத்துகள் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன.
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் (சிலப்பதிகாரம் 10: 102-103)
என்ற வரிகளுக்கு உரை கூறிய அடியார்க்கு நல்லார் “ கோள்களிற் சனிக்கோள் இடபம், சிம்மம் மீனமென்னும் இவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோள் எழினும், விரிந்த கதிருடய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும்” என்று கூறுவது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றாலும் காவிரி நீர்வளம் குன்றாது என்ற கருத்து சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது.

இப்பாடலில், பாரி செங்கோல் செலுத்தியதால் சான்றோர் பெருகி இருந்தனர்; மழை பொய்யாது பெய்தது என்று கபிலர் கூறுவதைப் போல், வள்ளுவரும் மன்னவன் செங்கோல் செலுத்தினால் மழை தவறாது பெய்யும் என்று கூறியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. (குறள் - 545)

பொருள்: முறைப்படி செங்கோலாட்சி செய்யும் அரசனது நாட்டில் பருவ மழையும் குன்றாத விளையுளும் ஒருங்கு திரண்டு இருக்கும்.

இதே கருத்தை மற்றொரு குறளில் சற்று வேறு விதமாக வள்ளுவர் கூறுகிறார்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். (குறள் - 559)

பொருள்: மன்னவன் முறைதவறி ஆட்சி செய்வானயின் அவன் நாட்டிற் பருவமழை தவறுவதால் வானம் பொழியாது.

No comments: