பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடலின் பின்னணி: பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்த பிறகு, அவர்களுக்குத் திருமணம் செய்விப்பதற்காகக் கபிலர் பல குறுநிலமன்னர்களை காணச் சென்றார். ஒரு சமயம், அவர் மீண்டும் பாரி மகளிரைப் பார்க்க வந்த்தார். அப்பொழுது அவர்கள் ஒரு குப்பை மேட்டில் ஏறி நின்று அவ்வழியே செல்லும் உப்பு வண்டிகளை எண்ணிப் பொழுது போக்கிக்கொண்டிருந்தனர். அது கண்ட கபிலர், அம்மகளிர் தம் தந்தையொடு இருந்த பொழுது, தந்தையொடு போர் புரிய வந்த வேந்தர்களின் குதிரைகளை எண்ணிப் பொழுதுபோக்கியது நினவு கூர்ந்து, அவர்களின் அவல நிலையை நினைத்து வருந்தித் தன் வாழ்நாள் முடியட்டும் என்று இப்பாடலில் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல்
ஏந்தெழில் மழைக்கண் இன்னகை மகளிர்
புல்மூசு கவலைய முள்மிடை வேலிப்
5 பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரைஇவர் மருங்கின்
ஈத்திலைக் குப்பை ஏறி உமணர்
உப்புஓய் ஒழுகை எண்ணுப மாதோ!
நோகோ யானே! தேய்கமா காலை!
10 பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும்
பயில்இருஞ் சிலம்பிற் கலைபாய்ந்து உகளவும்
கலையுங் கொள்ளா வாகப் பலவும்
காலம் அன்றியும் மரம்பயம் பகரும்
யாணர் அறாஅ வியன்மலை அற்றே
15 அண்ணல் நெடுவரை ஏறித் தந்தை
பெரிய நறவின் கூர்வேற் பாரியது
அருமை அறியார் போர்எதிர்ந்து வந்த
வலம் படுதானை வேந்தர்
பொலம்படைக் கலிமா எண்ணு வோரே.
அருஞ்சொற்பொருள்:
1.தீ = இனிமை; குண்டு = ஆழம்; குவளை = செங்கழுநீர். 2. கூம்பு = அரும்பு; அவிழ்தல் = மலர்தல்; நெறித்தல் = முறித்தல், ஒடித்தல்; அல்குல் = இடை. 3. ஏந்தெழில் = மிகுந்த அழகு; மழை = கருமை. 4. மூசு = மொய்த்தல், சூழ்தல்; கவலை = பிரிவு பட்ட வழி, பல தெருக்கள் கூடும் இடம்; மிடைதல் = நெருங்கல், செறிதல். 5. முன்றில் = முற்றம்; சிற்றில் = சிறிய வீடு.6. நாறுதல் = முளைத்தல்; இவர்தல் = ஏறுதல்; மருங்கு = பக்கம்.7. ஈந்து = ஈச்ச மரம். 8. ஒய்தல் = செலுத்தல், போக்குதல், இழுத்தல்; ஒழுகை = வரிசை, வண்டி. 9. நோகு = நோவேன்; ஓ - அசை; காலை = வாழ் நாள்; மா - அசை. 10. பயில் = பழக்கம்; ஆலல் = ஆடல். 11. சிலம்பு = மலை; கலை = குரங்கு; உகளல் = தாவுதல். 13. பயம் = பயன்; பகர்தல் = கொடுத்தல். 14. யாணர் = புது வருவாய்; வியன் = அகன்ற, பெரிய. 16. நறவு = கள், மது. 18. வலம் = வலி. 19.பொலம் = அழகு; படை = குதிரைச் சேணம்; கலிமா = செருக்குடைய குதிரை.
கொண்டு கூட்டு: இன் நகை மகளிர், நெடுவரை ஏறி முன்பு வேந்தர் கலிமா எண்ணுவர்; (இப்பொழுது) ஈத்திலைக் குப்பை ஏறி உமணர் உப்பொய் எண்ணுவர்; நோகோ யானே, தேய்கமா காலை எனக் கூட்டுக.
உரை: இனிய நீருடைய ஆழமான சுனைகளில் பூத்த, புறவிதழ்கள் ஒடிக்கபடாத முழு செங்கழுநீர் மலர்களால் செய்த ஆடைகள் தங்கள் இடுப்பில் புரளுமாறு, மிகுந்த அழகும், கருமை நிறமுள்ள கண்களும், இனிய சிரித்த முகமும் உடைய பாரி மகளிர் அணிந்திருக்கிறர்கள். அவர்கள் இருக்கும் சிறிய வீடு பல தெருக்கள் கூடுமிடத்தில் புல் முளைத்த பாதைகளுடையதாகவும், முற்றத்தில் பஞ்சு பரந்தும் முள் செறிந்த வேலியால் அடைக்கப் பட்டதாகவும் உள்ளது. அங்கே பீர்க்கங்காய்களும் சுரைக்காய்களும் கொடிகளில் முளைத்திருக்கின்றன. அவற்றிற்குப் பக்கத்தில் ஈச்ச மரத்தின் இலைகள் நிறைந்த குப்பை மேடுகளில் ஏறிப் பாரி மகளிர் அவ்வழியே வரிசையாகச் செல்லும் உப்பு வண்டிகளை எண்ணுகிறார்கள். முன்பு, அவர்கள் வாழ்ந்த பறம்பு மலையில், அவர்களுக்குப் பழக்கமான பூஞ்சோலைகளில் மயில்கள் எழுந்து ஆடின; மற்றும் குரங்குகள் தாவித் திரிந்தன; அக்குரங்களும் தின்னமுடியாத அளவுக்கு அங்குள்ள மரங்கள் பயனுள்ள பழங்களும் காய்களும் பருவமல்லாக் காலத்தும் கொடுத்தன. அத்தகைய வளம் மிகுந்த இடமாகப் பறம்பு மலை இருந்தது. குறையாது புதுவருவாயை அளிக்கும் அகன்ற மலையைப் போன்ற தலைமையுடைய பாரியின் நெடிய மலையின் உச்சியில் ஏறி, மிகுந்த அளவில் கள்ளையும் கூரிய வேலினையும் உடைய தந்தை பாரியின் அருமையை அறியாது அவனை எதிர்த்துப் போர் புரிய வந்த வலிமைமிக்க படையுடைய வேந்தர்களின் அழகிய சேணங்களணிந்த செருக்குடைய குதிரைகளை எண்ணிய பாரி மகளிர் இப்பொழுது குப்பை மேட்டில் ஏறி உப்பு வண்டிகளை எண்ணுகிறார்களே! இதைக் காணும் பொழுது நான் வருந்துகிறேன். என் வாழ்நாள்கள் (இன்றோடு) முடியட்டும்.
Monday, October 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment