பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: வேள் பாரி. வேள் பாரியைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: தன்னைப் பாடி வந்த இரவலர்க்குப் பறம்பு நாட்டிலுள்ள முந்நூறு ஊர்களையும் பாரி பரிசாக அளித்துவிட்டான். இனி வருவோர், தன்னையே பரிசாகக் கேட்டாலும், பாரி தயங்காமல் தன்னை அவர்களுக்குப் பரிசாக அளிக்கும் கொடைத்தன்மையுடையவன் என்று கபிலர் பாரியின் கொடைத்தன்மையை இப்பாடலில் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம்புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினர் அதுவே; அறம்பூண்டு
5 பாரியும் பரிசிலர் இரப்பின்
‘வாரேன்’ என்னான் அவர்வரை யன்னே.
அருஞ்சொற்பொருள்:
1.குறத்தி = குறிஞ்சிப்பெண்; மாட்டுதல் = செருகுதல்; வறல் = வற்றல்; வறக்கடை= வறண்ட காலம்; கொள்ளி = கொள்ளிக் கட்டை. 2. ஆரம் = சந்தனமரம்; அயல் = அருகில்.3.சாரல் = மலைச் சரிவு; வேங்கை = வேங்கை மரம்; சினை = கிளை. 6. வாரேன் = வரமாட்டேன்; வரை = எல்லை.
உரை: குறிஞ்சிப்பெண் ஒருத்தி அடுப்பில் செருகிய வற்றிய கொள்ளிக்கட்டை சந்தனமாகையால், அதன் அழகிய புகை அருகில் உள்ள மலைச்சரிவில் இருக்கும் வேங்கை மரத்தின் பூக்களுடைய கிளைகளுக்கெல்லாம் பரவுகிறது. அத்தகையது பறம்பு நாடு. தன்னைப் பாடி வந்த பரிசிலர்க்குப் பாரி பறம்பு நாட்டையே பரிசாக அளித்ததால் அது இப்பொழுது அவர்க்கு உரியதாயிற்று. பரிசிலர் பாடி வந்து, “உன்னையே பரிசாக எமக்குத் தர வேண்டுமென்று” கேட்டால், அறத்தை மேற்கொண்டு, பாரி அவரிடம் வரமாட்டேன் என்று கூற மாட்டான்.
சிறப்புக் குறிப்பு: சந்தன மரக்கட்டை எரிக்கப்படுவதால் எழும் புகையைத் தவிர பறம்பு நாட்டில் பகைவர் மூட்டிய தீயினால் எழும் புகை இல்லை என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது.
அன்புடைமை என்னும் அதிகாரத்தில், “அன்பில்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உரியதாகக் கொள்வர். ஆனால், அன்புடையவர் தன் எலும்பையும் (தன்னையே) வேண்டுமானாலும் பிறர்க்கு அளிப்பர்” என்பதை
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் - 72)
என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் கருத்துக்கும் இப்பாடலில் கபிலர் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை குறிப்பிடத் தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment