Monday, October 26, 2009

115. இன்னான் ஆகிய இனியோன் குன்று

பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடலின் பின்னணி: முந்திய பாடலில் கூறியதைப் போல் இப்பாடலிலும், கபிலர் பாரி உயிரோடு இருந்த பொழுது பறம்பு மலையின் சிறப்பை நினைத்து வருந்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

ஒருசார் அருவி ஆர்ப்ப, ஒருசார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக்கள் தேறல்
கல்அலைத்து ஒழுகும் மன்னே; பல்வேல்
5 அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!

அருஞ்சொற்பொருள்:
1.சார் = பக்கம்; ஆர்த்தல் = ஒலித்தல். 2. மண்டை = இரப்போர் கலம்; ஆர் = நிறைவு. 3. வாக்க = வார்க்க (வடிக்க); உக்க = அழிந்த (சிந்திய); தேக்கள் = இனிய கள்; தேறல் = கள், தேன். 4. மன் - அசைச் சொல் ( கழிவைக் குறிக்கும் அசைச் சொல்). கொண்டு கூட்டு: இனியோன் குன்று ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் தேறல் கல் அலைத்து ஒழுகும்.

உரை: பல வேற்படைகளுக்குத் தலைமையும் யானைகளையுமுடைய வேந்தர்களுக்குக் கொடியவனாகவும் பரிசிலர்க்கு இனியவனாகவும் இருந்த பாரியின் குன்றில் ஒரு பக்கம் ஒலிக்கும் அருவி முழங்கும்; மற்றொரு பக்கம் இரப்போர் கலங்களில் வார்த்த இனிய கள் அவர்களின் கலங்கள் நிரம்பி வழிந்து ஒழுகி அருவி போல் மலையிலுள்ள கற்களை உருட்டிக்கொண்டு ஒழுகும்.

சிறப்புக் குறிப்பு: இரப்போர் கலங்களில் இட்ட கள் நிரம்பி வழிந்து அருவி போல் ஓடியது என்று கபிலர் கூறுவது பாரியின் வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையையும் பறம்பு நாட்டின் வளத்தையும் குறிக்கிறது.

No comments: