Sunday, December 2, 2012


362. உடம்பொடுஞ் சென்மார்!


பாடியவர்: சிறுவெண்டேரையார். இவரைப் பற்றி ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

பாடலின் பின்னணி: இப்பாட்டுடைத் தலைவன் அந்தணர்களுக்கும், இரவலர்களுக்கும் வரையாது கொடுத்துப் பெரும்புகழ் பெற்றவன். அவன் சுற்றத்தாருடன் கூடித் தன் இல்லத்தில் வாழ்ந்தாலும், அவன் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. இவ்வாறு மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலும், அவன் நிலையாமையை உணர்ந்தவன். அதனால், இவ்வுலக வாழ்க்கையைவிட மேலுலக வாழ்வில் அவன் பற்றுடையவனாக உள்ளான்.  இவ்வுலகில் செய்யும் ஈகை மேலுலகில் பயனளிக்கும் என்பதை அவன் உணர்ந்தவன். இவ்வுலகில்  ஈகை செய்வதற்குத் தேவையான பொருளைப் பெறுவதற்காக அவன் போர் செய்கிறான். போர் முழக்கம் ஊரெங்கும் கேட்கிறது. அதைக் கேட்ட அந்தணர்கள் வியப்படைகிறார்கள். அந்தணர்களுடைய வியப்பைக் கண்ட புலவர் சிறுவெண்டேரையார், ’தலைவன் போரில் பெறும் பொருளைப் பிறர்க்கு அளித்துப் புகழுடம்புடன் மேலுலகிற்குச் செல்வதற்காகப் போர் புரிகிறான். இந்தப் போரைப் பற்றிய குறிப்புக்கள்  உங்கள் வேதத்திலும் அறநூல்களிலும் இல்லை’ என்று இப்பாடலில் கூறுகிறார்.


திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.


ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த
மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்
பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி           5


அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை
கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்
தாக்குரல் கேண்மின் அந்த ணாளிர்
நான்மறை குறித்தன்று அருள்ஆ காமையின்;
அறம்குறித் தன்று பொருளா குதலின்;                    10


மருள்தீர்ந்து மயக்குஒரீஇக்
கைபெய்தநீர் கடற்பரப்ப
ஆம்இருந்த அடைநல்கிச்
சோறு கொடுத்து மிகப்பெரிதும்
வீறுசால் நன்கலம் வீசிநன்றும்                               15


சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
வாய்வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல்என்று இல்வயின் பெயர  மெல்ல                    20

இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

 

அருஞ்சொற்பொருள்: 1. ஆய் = நுணுகியறிதல்; மிடைதல் = நிறைதல், கலத்தல். 2. உறழ்தல் = ஒத்தல்; ஆரம் = மாலை. 3. சிலைப்ப = ஒலிக்க. 4. பொழில் = சோலை, நாடு. 5. செரு = போர்; புகலுதல் = விரும்புதல்; விசயம் = வெற்றி. 6. அணங்கு = வருத்தும் பெண் தெய்வம்; உருத்தல் = கடுஞ்சினம் கொள்ளுதல்; கணம் = கூட்டம். 7. முன்பு = வலிமை. 8. தாக்குரல் = தாக்கும் குரல். 11. மயக்கொரீஇ = மயக்கு+ஒரீஇ = மயக்கத்தினின்று நீக்கி. 13. ஆம் = நீர்; அடை = வயல்; ஆம் இருந்த அடை = மருத நிலம்; நல்குதல் = ஈதல். 15. வீறு = பெருமை; சால் = நிறைவு; வீசுதல் = வரையாது கொடுத்தல்.16. களர் = களர் நிலம். 17. கூகை = கோட்டான். 18. அகலுள் = அகலம். 19. கல் – ஒலிக் குறிப்பு. 20. வயின் = இடம். 21. ஒதுங்கல் = விலகுதல்.

 

கொண்டு கூட்டு: அந்தணாளிர், தானை தாக்குரல் கேண்மின்; நான்மறைக் குறித்தன்று; தீர்ந்து, ஒரீஇ, நல்கி, கொடுத்து, வீசி, அஞ்சி, உயர்ந்தோர் நாட்டு உடம்பொடும் சென்மார் என்பதோடு, பொருகின்றனர் என சேர்த்துக் கூட்டுக.

 

உரை: கதிரவனைப்போல் ஒளியுடன் திகழும் ஆராய்ந்தெடுத்த மணிகள் பதித்த, பிறைமதி போன்ற வளைந்த மாலை எம் தலைவனின் மார்பில் தவழ்கிறது.  பலியூட்டப்பட்ட முரசு பாசறையில் ஒலிக்கின்றது, நாடு முழுதும் பரந்து நின்று, பெரிய வீரச் செயல்களைச் செய்யும் ஆடவர், போரை விரும்பி, வெற்றியையுடைய வெண்மையான கொடியை ஏந்தி வருவது, வருத்தும் தெய்வம் வருவதைப் போல் காட்சி அளிக்கிறது. அவ்வீரர்களின் கூட்டத்திலிருந்து, கூற்றுவனைப்போல் எவராலும் எதிர்த்தற்கு அரிய வலிமையுடன், பகைவரைத் தாக்குதற்கு அவர்கள் எழுப்பும்  ஒலியைக் கேட்பீராக. அந்தணர்களே! இப்போர் அருளின் அடிப்படையில் செய்யப்படாததால், நான்கு வேதங்களில் இதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.  இது பொருள்பற்றிய செயலாகையால், இது அறநூல்களிலும் கூறப்படவில்லை. நிலையாமையைப் பற்றிய தெளிவின்மை நீங்கி, தெளிவு பிறந்த பிறகு, நீர்வளம் அமைந்த ஊர்களை எம் தலைவன் அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் பொழுது அவர்கள் கையில் வார்த்த நீர், கடல்வரை ஓடியது. அவன்  இரவலர்களுக்குச் சோறு வழங்கினான்; பரிசிலர்களுக்குப் பெருமைக்குரிய நல்ல அணிகலன்களைப் பெருமளவில் கொடுத்தான்.  சிறிய வெண்ணிற எலும்புகள் கிடக்கும் நெடிய வெண்மையான களர் நிலத்தில் வலிய வாயையுடைய காக்கையும் கூகையும் கூடிப் பகற்பொழுதில் கூவும் அகன்ற இடத்தில் உள்ள சுடுகாடுதான்  அனைவரும் முடிவில் அடையும் இடம். இந்த உண்மை  புலப்படாதவாறு, தன் இல்லத்தில் சுற்றத்தார் நிறைதலால்,  இனி அங்குத் தனக்கு இடமில்லை என்று அங்கிருந்து மெல்ல நீங்கக் கருதியும், உலகம் சிறிதாதலால் இங்கு இனி இயங்குவதற்கு அஞ்சியும், விண்ணுலகுக்குத் தன் புகழுடம்புடன் செல்வதற்காக அவன் போரிடுகின்றான்.

1 comment:

Unknown said...

Author Name Is சிறுவெண்தேரையார்.