Saturday, December 15, 2012

369. போர்க்களமும் ஏர்க்களமும்!


369. போர்க்களமும் ஏர்க்களமும்!

பாடியவர்: பரணர். இவரை பற்றிய குறிப்புக்களைப் பாடல் 4-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன். சேர நாட்டைச் சிறப்பாக ஆட்சி புரிந்த சேர மன்னர்களுள் சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனும் ஒருவன். இவனுடைய கடற்படை  பல வெற்றிகளைப் பெற்றதால் இவன் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என்று அழைக்கப்பட்டான். இவன் சேரமான் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்றும் அழைக்கப்பட்டான். இவனும் பதிற்றுப் பத்தின் ஐந்தாம் பத்தில் பரணரால் பாடப்பட்ட, இமயவரம்பன் மகனாகிய, சேரன் செங்குட்டுவனும் ஒருவனே என்பது அறிஞர்களின் கருத்து.

பாடலின் பின்னணி: அரசனின் போர்ச்செயலை உழவனின் செயலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல்கள் ‘மறக்கள வழி’ என்னும் துறையைச் சார்ந்தவை.  புறநானூற்றுப் பாடல்கள் 368, 369, 370, 371, 373 ஆகியவை மறக்கள வழித்துறையைச் சார்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இப்பாடல்களில், புலவர்கள், போரில் பயன்படுத்தப்படும் விலங்குகள் (யானை, குதிரை), பொருள்கள் (தேர், வில், அம்பு, வேல்) மற்றும் போரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் (யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றை  அழித்தல், போர்க்களம் குருதி தோய்ந்து காட்சி அளித்தல்) ஆகியவற்றை முறையே உழவுத் தொழிலில் பயன்படுத்தப்படும் எருது, ஏர் ஆகியவற்றோடும், உழவுத் தொழிலில் நடைபெறும்  நிகழ்ச்சிகளோடும் ஒப்பிடுகிறார்கள். இப்பாடல்கள் உவமையணிக்கு எடுத்துக்காட்டாக விளங்கின்றன.

புலவர் பரணர், ஏர்க்களத்தை உவமையாகக் காட்டும் போர்க்களத்தில், பூதம், பேய், நரி
முதலியன பிணங்களை உண்ணுகின்றன. அங்கே, பாடி வருவோர்க்குப் பரிசில்
வழங்குவதற்காக சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் வீற்றிருக்கிறான். அங்கு வந்த பொருநன் ஒருவன் ’அரசே, நான் என் தடாரியை அறைந்து, நின் புகழ் பாடிவந்தேன். என் வறுமையைக் களைவதற்குக் கன்றுகளோடும், பெண்யானைகளோடும் கூடிய களிறுகளைப் பரிசாகத் தருவாயாக.’ என்று கேட்பதாகப் புலவர் பரணர் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி. அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.

இருப்புமுகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்
கருங்கை யானை கொண்மூ ஆக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் ஆக வயங்குகடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக்கு ஆக,                            5

அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ்விசைப் புரவி வீசுவளி யாக,
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயின் தேர்ஏர் ஆக,                      10

விடியல் புக்கு நெடிய நீட்டிநின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி,
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு         15

கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளம் தழீஇப்,
பாடுநர்க்கு இருந்த பீடுடை  யாள!
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை                   20

அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும பாடுஆன்று
எழிலி தோயும் இமிழிசை அருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு இமயத் தன்ன
ஓடை  நுதல ஒல்குதல் அறியாத்                             25

துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகைவெய் யோயே!

அருஞ்சொற்பொருள்: 1. இருப்பு = இரும்பு; முகம் = கொம்பின் நுனி; செறித்தல் = திணித்த; ஏந்தல் = உயர்ச்சி; எழில் = அழகு; ஏந்தெழில் = மிகுந்த அழகு; மருப்பு = கொம்பு (தந்தம்). 2. கருமை = பெருமை, வலிமை; கொண்மூ = மேகம். 3. நீள்மொழி = வஞ்சினம். 4. வயங்குதல் = விளங்குதல்; கடிப்பு = குறுந்தடி. 6. அரா = பாம்பு; பனிக்கும் = நடுங்கும்; அணங்கு = வருத்தம். 7. வெவ்விது = வெய்து = விரைவு, கொடியது; விசை = விரைவு (செலவு); புரவி = குதிரை; வளி = காற்று. 8. விசை = விரைவு; வீங்குதல் = பருத்தல்; உகைத்தல் = செலுத்துதல். 9. கணை = அம்பு; கிடக்கை = இடம் (போர்க்களம்); கண்ணகன் கிடக்கை = பெரிய போர்க்களம். 10. செறு = வயல். 12. செரு = போர்; மிளிர்தல் = புரளுதல்; திருத்துதல் = மேல்கீழாக்க்குதல். பை = பசுமை; சால் = படைச்சால்; உழவு சால்.13. கணையம் = தடி (தண்டாயுதம்); வித்தி = விதையாகத் தெளித்து.14. விழு = பெரிய; வெரு = அச்சம்; பைங்கூழ் = இளம்பயிர். 15. பிறங்குதல் = உயர்தல்; போர்பு = நெற்போர். 16. கணம் = கூட்டம்; கழுது = பேய்; படுதல் = தங்குதல். 17. தழீஇ = தழுவி. 19. தேய்வை = சந்தனம்; காழ் = குத்துக்கல். 20. வேய்வை = குற்றம்; விருந்து = புதுமை. 21. அரிக்குரல் தடாரி = நுண்ணிய ஓசையையுடைய தடாரிப்பறை; உருப்பம் = வெப்பம்; ஒற்றி = இசைத்து (அறைந்து). 22. பாடு = ஓசை; ஆன்று = நிறைந்து. 23. எழிலி = மேகம்; இமிழ்தல் = ஒலித்தல். 25. ஓடை = நெற்றிப் பட்டம்; ஒல்குதல் = சுருங்குதல். 26. துடி = குறிஞ்சிப் பறை; குழவி = கன்று; பிடி = பெண் யானை. 27. மிடைதல் = நிறைதல்; இடைமிடைந்த = இடைஇடையே நிறைந்த. 28. வேழம் = யானை; முகவை = கொடுக்கும் பொருள் (பரிசு); மதி = மின்ஞிலை அசைச்சொல். 29. தாழா = குறையாத; வெய்யோய் = விரும்புபவன்.

கொண்டு கூட்டு: பீடுடையாள, பெரும, தடாரி ஒற்றிப் பாடி வந்திசின், வெய்யோய், குழவிய பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி எனக் கூட்டுக.

உரை: இரும்பால் செய்யப்பட்ட பூண் அணிவிக்கப்பட்ட, உயர்ந்த, அழகிய கொம்புகளையும், பெரிய துதிக்கையையும் உடைய யானைகள் மேகங்கள் போல் உள்ளன.வஞ்சினம் கூறும் மறவர்கள் பகைவரைத் தாக்குவதற்காக உயர்த்திய வாள்கள் மின்னலைப் போல் உள்ளன. விளங்குகின்ற குறுந்தடியால் அடிக்கப்பட்டு, பலியூட்டப்பட்ட முரசின் முழக்கம் மழையின் இடி முழக்கம் போல் உள்ளது. அந்த இடி முழக்கத்தால் பகையரசராகிய பாம்புகள் நடுங்கி வருந்தும் பொழுதில், மிகுந்த வேகத்துடன் செல்லும் குதிரைகள் காற்றுப் போலவும், விரைவாக அம்புகளைச் செலுத்தும் வலிய வில்லின் பெரிய நாண் செலுத்திய அம்புகளாகிய மழை பொழிந்து, குருதி தோய்ந்து ஈரமாகிய பெரிய போர்க்களத்தில் உள்ள தேர்கள் ஏர்களைப் போல் உள்ளன. விடியற்காலைப் பொழுதில் புகுந்து, நீண்ட படைக்கலங்களைப் பயன்படுத்திப் பகைவர்களின் படைக்கருவிகள் கீழ்மேலாகப் புரட்டப்பட்ட, குருதியில் உண்டாகிய படைச்சாலில், கையில் பிடித்துப் பகைவர் எறியும் ஒளிமிகுந்த வேலும், கணையமரங்களும் விதைகள்போல் நிலத்தில் விதைக்கப்பட்டன. அங்கே, வெட்டி வீழ்த்தப்பட்ட பெரிய தலைகளும், பிணங்களும் காண்போர்க்கு அச்சததை விளைவிக்கின்றன. பிணங்களாகிய இளம்பயிரைப் பேய்மகளிர் பற்றி இழுக்கின்றனர். பிணங்கள் நிரம்பிய பல பிணக்குவில்களில், நரிகளின் கூட்டத்தோடு பேய்களும் மொய்க்கப், பூதம் காவல் புரியும் களத்தைப் பாடுவோரின் பாடல்களைக் கேட்டற் பொருட்டு வீற்றிருந்த பெருமைக்குரியவனே!  கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெண்மையான சந்தனக் கட்டை போன்ற, இழுத்துக் கட்டப்பட்ட, குற்றமில்லாத, புதிதாகப் போர்க்கப்பட்ட, நுண்ணிய ஓசையையுடைய பெரிய தடாரிப் பறையைச் சூடுபடுத்தி அடித்துப் பாடிவந்தேன். பெருமானே! மேகங்கள் தவழும், ஒலிமிகுந்த அருவிகள் நிறைந்த, பொன்னிறமான நெடிய உச்சியையுடைய இமயம் போன்ற, பட்டமணிந்த நெற்றியையும், துடி போன்ற அடிகளையுமுடைய, கன்றுகளைக்கொண்ட பெண்யானைகளின் இடையிடையே நிறைந்துள்ள ஆண்யானைகளைப் பரிசாக அளிப்பாயாக.  குறையாத ஈகைத் தன்மையை விரும்புபவனே! 

No comments: