367. வாழச் செய்த நல்வினை!
பாடியவர்: ஔவையார். இவரைப்
பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடப்பட்டோர்: சேரமான் மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவேந்தர்கள்.
பாடப்பட்டோர்: சேரமான் மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவேந்தர்கள்.
பாடலின் பின்னணி:
ஒருகால்,
சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், இராசசூயம்
வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தனர்.
அதைக் கண்ட ஒளவையார் பெருமகிழ்ச்சியோடு இப்பாடலை இயற்றியுள்ளார். ’வேந்தர்களே!
இவ்வுலகம் வேந்தர்களுக்கு உரியதாயினும், அவர்கள் இறந்தால், இவ்வுலகம் அவர்களோடு செல்வதில்லை.
ஆகவே, அறநெறிகளில் பொருளீட்டி, இரவலர்க்கு வழங்கி, இன்பமாக வாழுங்கள். உங்கள் வாழ்நாட்களில் நீங்கள் செய்த நல்வினையைத்
தவிர நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. எனக்குத் தெரிந்தது இதுதான். ‘ என்று இப்பாடலில் ஒளவையார் மூவேந்தர்களுக்கும் அறிவுரை
கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய
புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
துறை:
வாழ்த்தியல்.
தலைவனை வாழ்த்துதல்.
நாகத்
தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும், தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து 5
தமவே யாயினும், தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து 5
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது 10
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,
யான்அறி அளவையோ இதுவே; வானத்து 15
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநும் நாளே!
அருஞ்சொற்பொருள்:
1. நாகம் = நாகலோகம் = தேவலோகம்; பாகார் = பாகு+ஆர்;
பாகு = பங்கு; ஆர்தல் = பொருந்துதல்; மண்டிலம் = வட்டம், நாடு. 3. நோன்மை = வலி; நோற்றார்
= வலிமையுடையோர். 4. ஏற்றல் = இரத்தல். 6. பாசிழை = பாசு + இழை; பாசு = பசுமை; பொலம்
= பொன். 7. நாரரி = நாரால் வடிக்கப்பட்ட; தேறல் = கள்ளின் தெளிவு; மாந்துதல் = குடித்தல்,
உண்ணுதல். 8. அருகாது = குறையாது; வீசுதல் = குறையாது கொடுத்தல். 9. வைகல் = நாள்.
11. ஆழ்தல் = மூழ்குதல் (இறத்தல்); புணை = தெப்பம். 12. ஒன்று – இங்கு வீடுபேற்றைக்
குறிக்கிறது; புரிதல் = விரும்பல்; இருபிறப்பாளர் = பார்ப்பனர். 13. முத்தீ = வேள்வி
செய்யும் பொழுது அந்தணர்கள் வளர்க்கும் மூன்று வகையான தீ (ஆகவனீயம், தட்சிணாக்கினி,
காருகபத்தியம்); புரைய = போல;
காண் = அழகு; தக= பொருந்த. 16. வயங்குதல் = விளங்குதல்; இம் – ஒலிக் குறிப்பு. 17.
உறை = மழைத்துளி. 18. பொலிதல் = சிறத்தல், செழித்தல்
கொண்டு கூட்டு: வேந்திர்,
மண்டிலம் செல்லா ஒழியும்; சொரிந்து, சிறந்து வீசி, வாழ்தல் வேண்டும்; புணைபிறிது இல்லை, மீனினும் உறையினும் தோன்றிப்
பொலிக எனக் கூட்டுக.
உரை: தேவலோகத்தைப்
போன்ற பகுதிகளையுடைய நாடு, அந்த நாட்டு வேந்தனுடையதாக இருந்தாலும், அவ்வேந்தன் இறக்கும்பொழுது
அது அவனுடன் செல்வதில்லை. அது அவனுக்குப் பின்னர்
வரும் தொடர்பில்லாத வலியோர்க்குப் போய்ச் சேரும். பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு,
அவர்களின் ஈரக்கை நிறைய பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்தும், நல்ல அணிகலன்களை
அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின்
தெளிவை அருந்தியும், மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும், இரவலர்க்கு அரிய அணிகலன்களைக்
குறையாது கொடுத்தும், இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும்
வாழ்க. நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச்
செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப்,
புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக்
குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது
இதுவேயாகும். வானத்தில் விளங்கும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன் பெய்யும் பெரிய
மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக.
சிறப்புக் குறிப்பு:
புறநானூற்றில்
உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது
பாடப்பட்ட பாடல்.
ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை,
அந்தணர்கள் வேள்வி செய்யும் பொழுது வளர்க்கும் மூன்று தீ வகைகளாகும். அவற்றுள் ஆகவனீயம் என்னும் தீ, தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில்
வளர்க்கப்படுவது. தட்சிணாக்கினி
என்னும் தீ, தெற்கில் எட்டாம் பிறைத் திங்கள் போன்ற வடிவமான
குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ. காருகபத்தியம்
என்னும் தீ ஆகவனீயத்தை அடுத்து, வட்ட வடிவமைந்த குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ.
இப்பாடலில், தமிழ் மூவேந்தர்களுக்கு முத்தீ உவமம் ஆகக் கூறப்பட்டுள்ளது.
மூவேந்தர்களும் அவரவர் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, அறம் சார்ந்த
செயல்களைச் செய்து தம்முடைய நாட்டு மக்களைப் பாதுகக்க வேண்டும் என்பது இப்பாடலில் ஒளவையார்
கூறும் கருத்து. ஆனால், தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையின்றித் தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்ததால்,
களப்பிரரும், வடுகரும், மோரியரும், பல்லவரும், துருக்கரும், தெலுங்கரும், வெள்ளையரும்
தமிழ் நாட்டை பலகாலம் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு கூறும் செய்தி.
No comments:
Post a Comment