370. பழுமரம் உள்ளிய பறவை!
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்.
இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 10-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி ( 370, 378). இவன் பாழி என்னும் ஊரில் நடைபெற்ற போரில் வடுகரை வென்றான். இடையன் சேந்தன் கொற்றனார் என்னும் புலவர் பாழியில் வடுகரை வென்ற சோழனை இளம்பெருஞ்சென்னி என்று அகநானூற்றுப் பாடல் 375-இல் குறிப்பிடுகிறார். இந்த இருமன்னர்களும் ஒருவரே என்று கருதப்படுகிறது. மற்றும், சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, சோழன் பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்று அழைக்கப்பட்ட மன்னர்களும் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியும் ஒருவனே என்றும் கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி ( 370, 378). இவன் பாழி என்னும் ஊரில் நடைபெற்ற போரில் வடுகரை வென்றான். இடையன் சேந்தன் கொற்றனார் என்னும் புலவர் பாழியில் வடுகரை வென்ற சோழனை இளம்பெருஞ்சென்னி என்று அகநானூற்றுப் பாடல் 375-இல் குறிப்பிடுகிறார். இந்த இருமன்னர்களும் ஒருவரே என்று கருதப்படுகிறது. மற்றும், சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, சோழன் பாமுளூர் எறிந்த இளஞ்சேட்சென்னி என்று அழைக்கப்பட்ட மன்னர்களும் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னியும் ஒருவனே என்றும் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி:
’எனக்கு
ஆதரவு அளிப்போர் இல்லாததால், என் சுற்றம் பசியால் வாடியது. நீ போரில் வெற்றி பெற்றதால்,
உன்னிடம் வந்தால் யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று எண்ணி என் சுற்றத்தாருடன், காட்டு
வழியைக் கடந்து உன்னைக் காண வந்தேன்.’ என்று பொருநன் ( அல்லது பாணன்) ஒருவன் கூறுவதுபோல்
ஊன்பொதி பசுங்குடையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று
ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி. அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு
ஒப்பிட்டுக் கூறுதல்.
வள்ளியோர்க் காணாது உய்திறன் உள்ளி,
நாரும் போழும் செய்தூண் பெறாஅது
பசிதினத் திரங்கிய இரும்பேர் ஒக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
வேருழந்து உலறி மருங்குசெத்து ஒழியவந்து 5
அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீளிடை
வரிமரல் திரங்கிய கானம் பிற்படப் 10
பழுமரம் உள்ளிய பறவை போல
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
விளைந்த செழுங்குரல் அரிந்துகால் குவித்துப்
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி 15
எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆளுகு கடாவின்
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெந்திறல் வியன்களம் பொலிகஎன்று ஏத்தி
இருப்புமுகம் செறித்த ஏந்தெழில் மருப்பின் 20
வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும,
வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு 25
செஞ்செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே!
அருஞ்சொற்பொருள்: 1. வள்ளியோர்
= கொடையாளர்; உய்தல் = பிழைத்தல்; திறன் = வழி; உள்ளி = நினைத்து. 2. போழ் = குருத்து.
3. திரங்குதல் = தளர்தல், உலர்தல்; இரு = பெரிய; பேர் = பெரிய; ஒக்கல் = சுற்றம்.
4. ஆர் = நிறைவு; பதம் = உணவு; கண் = நோக்கம்; மாதிரம் = திசை; துழைஇ = துழாவி (தேடி).
5. வேர் = வியர்வை; உழந்து = வருந்தி; மருங்கு = வயிறு. 6. அத்தம் = பாலை நிலம்; குடிஞை
= கோட்டான்; துடி = உடுக்கை; மருள் = போன்ற; தீ = கொடுமை. 7. உழுஞ்சில் = உழிஞ்சில் = ஒரு வகை மரம்; கவடு = மரக்கொம்பு;
அம் – சாரியை (சார்ந்து வரும் இடைச் சொல்). 8. பெடை = பெண் பறவை; பயிர்தல் = அழைத்தல்.
9. கழை = மூங்கில். 10. மரல் = அரலை, கற்றாழை; திரங்குதல் = வாடுதல்; கானம் = காடு.
12. மாரி = மழை. 13. துவைத்தல் = பேரொலி. 14. குரல் = கதிர்; அரிந்து = அறுத்து.15.
வாங்கி = வளைத்து. 17. அதரி திரித்தல் = நெற்பயிரைக் கடாவிட்டு உழக்குதல்; உகுத்தல்
= நிலை குலைதல், சிதறுதல். 18. தடாரி = ஒரு வகைப் பறை; தெளிர்ப்ப = ஒலிக்க; ஒற்றி
= இசைத்து. 19. வெந்திறல் = வெம் + திறல்
= மிகுந்த வலிமை. 20. மருப்பு = கொம்பு. 21. வரை = மலை; மருள் = போன்ற; முகவை = பெறும்
பொருள் (பரிசு). 22. நவில் = கோடரி. 23. தடக்கை = பெரிய கை; வெருவார் = அஞ்சாதவர்கள்;
ஒச்சுதல் = உயர்த்துதல். 24. இனம் = கூட்டம்; விராய = கலந்த (சுற்றிக்கொள்ள); அடைசுதல்
= உடுத்தல். 25. அயர்தல் = விளையாடுதல். 26. எருவை = பருந்து. 27. கிழவோன் = உரிமையுடையவன்.
கொண்டு கூட்டு:
கிழவ,
பெரும, பறவைபோல, ஏத்தி, முகவைக்கு வந்தனன் எனக் கூட்டுக.
உரை: வள்ளன்மை உடையவரைக்
காணாததால், பிழைக்கும் வழியை எண்ணி, பனை நாரையும் குருத்தையும் கையில் வைத்துக் கொண்டு,
உணவு பெறாது, பசியால் வருந்திய என்னுடைய பெரிய சுற்றத்தார்க்கு நிறைய உணவு பெறவேண்டும்
என்ற நோக்கத்தோடு, நாற்றிசையும் தேடி, உடலில் வியர்வை ஒழுக வருந்தி, வயிறு வாடுமாறு
வறண்ட நிலங்களைக் கடந்து வந்த வழியில், கோட்டானின் துடியொலி போன்ற கடிய குரலோசை, உழுஞ்சில்
மரத்தின் கிளைகளிலிருந்த பெண்பருந்தை அழைக்கும் ஆண்பருந்தின் குரலோடு கலந்து ஒலித்தது.
அங்கே, மூங்கில் மரங்கள் காய்ந்து கிடந்தன. வரிகளையுடைய மரல் பழங்கள் வற்றி வாடிக்
கிடந்தன. அந்த வறண்ட காட்டு வழியில் பழமரத்தைத்
தேடிச் செல்லும் பறவைகளைப் போல நான் வந்தேன்.
ஓளி
பொருந்திய படைக் கருவிகள், பெருமழையில் விழும் கனிகள் போல், பகைவரின் தலைகளை வெட்டி
வீழ்த்தியதால், வெள்ளம்போல் ஒலியுடன் குருதி ஒடியது. விளைந்த செழுமையான கதிர்களைப்
போன்ற பகைவரின் கழுத்தை அறுத்து, காலோடு சேர்த்துக் குவித்து, இறந்த பிணங்களாகிய பல
குவியல்கள் அழியும்படி வளைத்து, யானையை எருதாகவும், வாளைத் தார்க்கோலாகவும், கொண்டு
செலுத்தி, போரடிக்கும் நெற்களத்தைப் போலப் பகைவர் வீழந்து கிடக்கும் பெரிய போர்க்களத்திலே,
அகன்ற கண்ணையுடைய தடாரிப் பறையை ஒலித்து, உன்னுடைய வலிமை மிகுந்த, அகன்ற போர்க்களம்
விளங்குவதாக எனப் பாராட்டி, இரும்பினால் செய்யப்பட்ட பூண் அணிந்த, உயர்ந்த, அழகிய கொம்புகளையுடைய,
மலை போன்ற யானைகளைப் பரிசாகப் பெறலாம் என்று நான் வந்தேன். கூர்மையான கோடரியால் வெட்டப்பட்டுத் துண்டாகிய தொடியணிந்த
பெரிய கையைத் தூக்கி, அஞ்சாத வீரர்களின் குடல்கள் தன் காலைச் சுற்றிக்கொள்ள, அவற்றை
எடுத்துப் பேய்ப்பெண் தன் அழுகுரலால் பாடிக் கூத்தாட, கழுகோடு, சிவந்த காதுகளையுடைய
பருந்துகளும் வட்டமிட்டுத் திரியும் அஞ்சத்தக்கப் இடங்களையுடைய போர்க்களத்திற்கு உரிமையுடையவனே!
No comments:
Post a Comment