Sunday, November 11, 2012

361. முள் எயிற்று மகளிர்!


361. முள் எயிற்று மகளிர்!

பாடியவர்: கயமனார்.
பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் அந்தணர்களுக்கும், புலவர்களுக்கும், பாணர்களுக்கும், பாடினியர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்பப் பொன்னும் பொருளும் வழங்கி அறச்செயல்களைச் செய்தவன். அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன்; நிலையாமையைப் பற்றி நன்கு உணர்ந்தவன். ஆகவே, அவன் கூற்றுவனுக்கு அஞ்ச மாட்டான் என்று புலவர் கயமனார் கூற்றுவனுக்குக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: காஞ்சி.
துறை: பெருங் காஞ்சி.

கார்எதிர் உருமின் உரறிக் கல்லென
ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்,
நின்வரவு அஞ்சலன் மாதோ; நன்பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்                                5

தாயின் நன்று பலர்க்கு ஈத்துத்
தெருணடை மாகளி றொடுதன்
அருள்பா டுநர்க்கு நன்கருளியும்
உருள்நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்றதன்
தாள்சேருநர்க்கு இனிதுஈத்தும்                                        10

புரிமாலையர் பாடினிக்குப்
பொலந்தாமரைப் பூம்பாணரொடு
கலந் தளைஇய நீள்இருக்கையால்
பொறையொடு மலிந்த கற்பின் மான்நோக்கின்
வில்என விலங்கிய புருவத்து வல்லென                                     15

நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி
அமிழ்தென மடுப்ப மாந்தி இகழ்விலன்
நில்லா உலகத்து நிலையாமைநீ                                               20

சொல்லா வேண்டா தோன்றல் முந்துஅறிந்த
முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .  விரகினானே.

அருஞ்சொற்பொருள்: 1. கார் = கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) ; உரும் = இடி; உரறுதல் = இடி இடித்தல்; கல் – ஒலிக் குறிப்பு. 2. ஆர் = அரிய; அலமருதல் = சுழலுதல்; ஆரா = நிறையாத; கூற்றம் = கூற்றுவன் (இயமன்). 7. தெருள் = தெளிவு. 9. பஃறேர் = பல்+தேர் = பல தேர்கள்; ஒன்னார் = பகைவர். 13. கலந்து அளைஇய = கலந்து அளவளாவிய. 14. பொறை = பொறுமை. 15. விலங்கு = குறுக்கானது; வல் = வலிமை. 18. தேறல் = கள். 19. மடுப்பு = உண்ணுதல்; மாந்துதல் = உண்ணுதல். 21. தோன்றல் = அரசன், தலைவன்; முந்து = முன்பு. 23. விரகு = அறிவு.

கொண்டு கூட்டு: கூற்றம், பெருந்தகை; சிதறி, ஈத்து அருளியும், ஈத்தும், அளைஇய இருக்கையில், மடுப்ப மாந்தி இகழ்விலன்; அதனால் நின் வரவு அஞ்சலன்; தோன்றல் கேள்வியனாகலின் நீ நிலையாமை சொல்ல வேண்டா எனக் கூட்டுக.

உரை: கார் காலத்து இடியைப் போல்  சட்டெனத் தோன்றி, ஆரவாரமாக, அரிய பல உயிர்களைக் கவர்ந்தும், உன் ஆர்வம் குறையாது மீண்டும் உயிர்களைக் கொள்வதற்குச் சுழலும் கூற்றமே, உன் வருகைக்கு எங்கள் தலைவன் அஞ்சமட்டான். அவன், நல்ல பலநூல்களை கேட்டு அறிவு நிரம்பியவன்; வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு அரிய அனிகலன்களை நீர்வார்த்துக் கொடுத்தவன்; பெருந்தன்மையுடைய எம் தலைவன், தாயைவிட அன்பில் சிறந்தவனாக, நல்ல பொருள்கள் பலவற்றையும் இரவலர் பலர்க்கும் அளித்தவன்; நல்ல நடைபயின்ற குதிரைகளையும் யானைகளையும் தன் அருளியியல்புகளைப் பாடுவோர்க்கு அருளியவன்; பகைவரைக் கொன்ற தன் வலிமையைப் பாராட்டித் தன்னைச் சரணடைந்தோர்க்கு  உருண்டோடும் பல தேர்களை மகிழ்ச்சியோடு அளித்தவன்; பொன்னாலான மாலையைப் பாடினிகளுக்கும், பொற்றாமரையைப் பாணர்களுக்கும் கொடுத்தவன். இவ்வாறு பலர்க்கும் பரிசுகள் கொடுத்துக்  கலந்து அளவளாவி நெடிய இருக்கையில் இருக்கும் பொழுது, பொறுமைக் குணங்கள் மிகுந்து, கற்பிற் சிறந்த, மான்போன்ற பார்வையையுடைய, வலிய சொற்களைப் பேசுவதற்கு அஞ்சும் நாவையுடைய, முள் போன்ற பற்களையுடைய மகளிர், தங்கள் மேகலையின் எடை தாங்காமுடியாமல் அசைந்து வரும் இடையையுடையவர்களாகி, கலங்கிய கள்ளின் தெளிவைப் பொற்கலத்தில் எடுத்துவந்து கொடுத்ததை அமிழ்தம் என்று அருந்துபவன்.  அவன் பழியற்றவன். அவன் நிலையாமையை உணராதவன் அல்லன். அதனால், கூற்றமே, நிலையாமையைப் பற்றி நீ அவனுக்குச் சொல்ல வேண்டா. எங்கள் தலைவனாகிய அவன், முன்னரே அறிந்து, முற்றிலும் உணர்ந்த கேள்வி அறிவுடையவன்.

சிறப்புக் குறிப்பு: பகைவர் எத்துணை வலிமையுடையவர்களாக இருந்தாலும், எதிர் நின்று போரிட்டு வெல்லும் பேராண்மையுடையவன் என்பதைக் குறிப்பதற்கு, இடிபோல் ஒலியுடன் எதிர்பாராமல் கூற்றுவன் வந்தாலும் அஞ்சமாட்டான் என்று புலவர் கயமனார் கூறுகிறார். அறச்செயல்கள் பலவும் செய்ததனால், அவன் கூற்றுவனுக்கு அஞ்சமாட்டான் என்றும் அவன் நிலையாமையைப் பற்றி அறிந்தவனாதலால் அவனுக்கு அதைப் பற்றிக் கூற்றுவன் கூறத்தேவையில்லை என்றும் புலவர் நயம்படக் கூறுகிறார்.

No comments: