364. மகிழகம் வம்மோ!
பாடியவர்: கூகைக்கோழியார்.
பேராந்தையைக் கூகைக்கோழி என்று இவர் இப்பாடலில்
குறிப்பிட்டதால் இவர் கூகைக்கோழியார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி:
’பாடினிகளுக்கும்,
பாணர்களுக்கும் பொன்னும் பொருளும் அளிப்பதும், இரவலர்க்கு உனவு அளிப்பதும், மகிழ்ச்சியோடு
இருப்பதும் உயிரோடு இருக்கும் பொழுதுதான் செய்யக்கூடிய செயல்கள். அத்தகைய செயல்களைச்
செய்து மகிழ்ச்சியாக இருப்பாயாக. இறந்தபின் இதுபோன்ற செயல்களைச் செய்ய இயலாது.‘ என்று புலவர் கூகைக்கோழியார் இப்பாடலில் அறிவுரை கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.
வாடா மாலை பாடினி அணியப்
பாணன் சென்னிக் கேணி பூவா
எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க
மைவிடை இரும்போத்துச் செந்தீச் சேர்த்திக்
காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை 5
நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும்
மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே!
அரிய வாகலும் உரிய பெரும!
நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் 10
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்கா டெய்திய ஞான்றே.
அருஞ்சொற்பொருள்:
2.
சென்னி = தலை; கேணி = நீர்நிலை (சிறுகுளம்). 3. எரிமருள் = தீப் போன்ற; தயங்கல் = ஒளிசெய்தல்.
4. மை = கருமை; விடை = ஆட்டுக்கடா; இரு = பெரிய; போத்து = விலங்குகளின் ஆண். 5. காயம்
= உறைப்பு; கனித்தல் = இளகச் செய்தல்; குறை = தசை. 6. நறவு = கள்; திறம் = பக்கம்.
10. பக = பிளக்க; வீழ்தல் = விழுதல்; அலங்கல் = அசைதல். 11. பொத்து = பொந்து; கதும்
= விரைவுக் குறிப்பு; 12. ஆனா = நீங்காத. 13. ஞான்று = பொழுது.
கொண்டு கூட்டு: மறப்போராய், பெரும மகிழ்கம் வம்மோ; பெருங்
காடெய்திய ஞான்று, அரிய ஆகலும் உரிய எனக் கூட்டுக.
உரை: பாடினிக்கு
பொன்னாலான மாலை அணிவிப்போம்; நீர்நிலையில்
பூவாத பொற்றாமரையைப் பாணன் தலையில் சூட்டுவோம்; கரிய, பெரிய ஆட்டுக் கடாவின் ஊனைத்
தீயிலிட்டுக் காரம் சேர்த்துச் சமைத்த பெரிய தசையை, மது உண்ணும் சிவந்த வாயிலிட்டு
நாவால் அசைத்து உண்டும் தின்றும், இரப்போர்க்குக் கொடுத்தும் மகிழ்வோம். வீரத்தோடு
போர் புரிபவனே! வருக! நிலைத்தைப் பிளந்து ஊடுருவிச் செல்லும் வேர்களையுடைய முதிய மரத்தின்
பொந்துகளிலிருந்து ஓயாது கூவும் பேராந்தைகள் நீங்காத, தாழிகளையுடைய சுடுகாட்டை அடையும்பொழுது
இவையெல்லாம் செய்தற்கரிய செயல்களாகும்.
No comments:
Post a Comment