Sunday, December 2, 2012


363. உடம்பொடு நின்ற உயிரும் இல்லை!


பாடியவர்: ஐயாதிச் சிறுவெண்டேரையார்(363). ஐயாதி என்பது இவருடைய ஊராக இருந்திருக்கலாம். முந்தைய பாடல் இயற்றிய புலவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் ஐயாதிச் சிறுவெண்டேரையார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.  இவர் இயற்றியதாக புறநானூற்றில் உள்ள ஒருபாடல் (363) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடப்பட்டோன்: தெரியவில்லை.

பாடலின் பின்னணி: ’உலகைத் தமதாக்கிக்கொண்டு ஆட்சி செய்த வேந்தர்களும் முடிவில் இறந்தார்கள்.  அவர்களுடைய நாட்டைப் பிறர் பெற்றுக்கொண்டனர். சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று.  ஆகவே, இறப்பதற்குமுன் நீ செய்ய விரும்பியதைச் செய்க.’ என்று புலவர் ஐயாதிச் சிறுவெண்டேரையார் ஒரு மன்னனுக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.


இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலினும் பலரே; சுடுபிணக்
காடுபதி யாகப் போகித் தத்தம்                   5


நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே;
அதனால் நீயும் கேண்மதி அத்தை; வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை;
மடங்கல் உண்மை மாயமோ அன்றே;
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு  10


வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
உப்பிலாஅ அவிப்புழுக்கல்
கைக்கொண்டு பிறக்கு நோக்காது
இழிபிறப்பினோன் ஈயப்பெற்று
நிலங்கல னாக விலங்குபலி மிசையும் 15


இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே.

 

அருஞ்சொற்பொருள்: 1. இரு = கரிய; உடுத்த = சூழ்ந்த. 2. உடை = ஒருவகை மரம்; இடை = இடம். 3. ஏமம் = பாதுகாப்பு. 5. பதி = இடம். 7. அத்தை – அசைச் சொல்; வீதல் = கெடுதல், சாதல். 9. மடங்கல் = முடிவு (சாவு); மாயம் = பொய் 10. ஏய்ந்த = பொருந்திய; புறங்காடு = சுடுகாடு, இடுகாடு. 11. வெள்ளில் =வெளியிடம்; வியல் = அகலம். 15. விலங்கு பலி = வேண்டாத உணவு; மிசைதல் = உண்ணுதல். 16. வைகல் = நாள். 17. முன்னுதல் = கருதுதல்.

 

கொண்டு கூட்டு: காவலர் பலர் மாய்ந்தனர்; அதனால் கேண்மதி; உயிரும் இல்லை; உண்மை, மாயமன்று; வாராமுன்னே துறந்து நீ முன்னிய வினையைச் செய்க எனக் கூட்டுக.

 

உரை: கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் இலை அளவுகூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையைவிட  அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள, சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர். அதனால், நான் சொல்வதை நீ கேட்பாயாக. அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று.  கள்ளி பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற வெளியிடத்தில், உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும் கொடிய நாள் (இறக்கும் நாள்) வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் துறந்து நீ கருதியதைச் செய்க.

 
சிறப்புக் குறிப்பு: உடைமரத்தின் இலை மிகவும் சிறியதாகையால் அது கடல் சூழ்ந்த பெரிய உலகத்திற்கு எதிர்மறையாகக் கூறப்பட்டது. ’சுடுகாட்டில் ஈமத்தில் இடுமுன், புலையன் உப்பில்லாச் சோறட்டு  நிலத்தில் வைத்துப் படைத்தலும்  அதனை அவன் கையிலேந்திப் படைக்குங்கால் பின்புறம் பாராமல் படைக்கும் முறைமையும் ஈமத்திற் பண்டையோர் செய்த சடங்குகள்.’ என்று ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

No comments: