Sunday, December 2, 2012

366. மாயமோ அன்றே!


366. மாயமோ அன்றே!


பாடியவர்: கோதமனார். பல்யானை செல்குழு குட்டுவனைப் பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தில் பாடிய புலவரின் பெயரும் கோதமனார் என்பதுதான். ஆனால் இப்பாடலை இயற்றியவர் அவர் அல்லர் என்பது அறிஞர் கருத்து. இப்பாடலைப் பாடிய கோதமனாரைப் பற்றிய செய்திகள் ஒன்றும் தெரியவில்லை.  இவர் கெளதமனார் என்றும் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாடப்பட்டோன்: தருமபுத்திரன். இப்பாடலில், ‘அறவோன் மகனே’ என்ற சொற்றொடர் காணப்படுவதால், மகாபாரதத்தில் காணப்படும் பாண்டவர்களின் தலைவனான தருமன் இப்பாட்டுக்குரிய தலைவன் என்று கூறுவாரும் உளர். ஆனால், அதற்கேற்ற சான்றுகள் இல்லை.  
பாடலின் பின்னணி: ’உலகம் முழுதும் தம் ஆணைக்குக்கீழ் ஆட்சி செய்த பெருவேந்தர்களும் இவ்வுலகில் நிலையாக வாழவில்லை. அவர்கள் தம் புகழை நிறுவித் தாம் இறந்தனர். ஆகவே, உன் வலிமையைப் பாதுகாத்து, பிறர் கூறுவதின் உண்மையை அறிந்து, பகற்பொழுதில் பணியாளர்க்கு உதவி, மறுநாள் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி இரவில் ஆராய்ந்து உன் செயல்களைச் செய்க. ஆட்டிறைச்சியையும் சோற்றையும் வேண்டுவோர்க்கு அளித்து உண்பாயாக. மகளிர் தரும் மதுவை உண்டு மகிழ்க. அவர்களோடு ஊடியும் கூடியும் இனிதே வாழ்க. ஆற்றங்கரையில் உள்ள சோலைகளில், வெறியாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது பலி கொடுப்பதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் ஆடுகளைப் போல் நாம் அனைவரும் இறப்பது உண்மை. அது பொய்யன்று’ என்று கோதமனார் இப்பாட்டுடைத் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறார்.


திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.




விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
ஒருதா மாகிய பெருமை யோரும்
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே                  5


அதனால், அறவோன் மகனே! மறவோர் செம்மால்!
நின்னொன்று உரைப்பக் கேண்மதி
நின்ஊற்றம் பிறர்அறியாது
பிறர்கூறிய மொழிதெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி                10


இரவின் எல்லை வருவது நாடி
உரைத்திசின் பெருமநன்றும்;
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்
செங்கண் மகளிரொடு சிறுதுனி அளைஇ
அங்கள் தேறல் ஆய்கலத்து உகுப்ப              15


கெடலருந் திருவ உண்மோ. . . . . . .
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப

 மடைவேண்டுநர்க்கு அடைஅருகாது
அவிழ்வேண்டுநர்க்கு  இடைஅருளி
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்  20


காவு தோறிழைத்த வெறியயர் களத்தின்

இடங்கெடத் தொகுத்த விடையின்
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.

 

அருஞ்சொற்பொருள்: 1. விழு = சிறந்த; கடிப்பு = குறுந்தடி; முழுமை = பருமை. 2. ஒழுக்கு = ஒழுக்கம்; மருங்கு = இடம்; ஒருமொழி = அரசனின் ஆணை, வஞ்சினம். 3. அரவு = பாம்பு; உருமுதல் = இடிபோல் முழக்கம் செய்தல்; உரறுதல் =இடித்தல்; சிலைப்ப = ஒலிக்க. நிறீஇ = நிறுவி. 8. ஊற்றம் = வலிமை. 10. எல்லை = பொழுது. 13. பகடு = காளை மாடு; அழி = வைக்கோல். 14. துனி = ஊடல்; அளைஇ = கலந்து. 15. உகுத்தல் = சொரிதல். 17. விடை = ஆட்டுக்கடா.18. மடை = உணவு; அடை = இலை; அருகாது = குறையாது. 19. அவிழ் = சோறு; இடை = இடம். 20. வார்மை = ஒழுக்கம்; அடைகரை = கரைப்பக்கம். 21. கா = காடு; இழைத்த = அமைக்கப்பட்ட; அயர்தல் = செய்தல், விளையாடுதல். 22. விடை = ஆட்டுக்கடா. 23. மடங்கல் = சாதல்.

 

கொண்டு கூட்டு: அறவோன் மகனே, செம்மல், பெரும, திருவ, பெருமையோரும் மாய்ந்தனர்; கேண்மதி; உரைத்திசின்; கிழிப்ப, அருகாது, அருளி, உண்மோ, மடங்கல் உண்மை மாயமோ அன்று எனக் கூட்டுக.

 

உரை: சிறந்த குறுந்தடியால் அடிக்கப்பட்டுப் பெரும் ஒலியெழுப்பும் முரசின் முழக்கம், பாம்பை நடுங்கச் செய்யும் இடிமுழக்கம்போல், போர் ஒழுக்கங்களில் (முறைகளில்) சிறந்த வீரரிடத்தே சென்று, தம் ஆணையைக் குறிப்பிடும் பெருமையுடைய வேந்தரும் தங்கள் புகழை நிறுவித் தாம் இறந்தனர்.  அதனால், அறவோன் மகனே! நான் உனக்கு ஒன்று சொல்கிறேன். நீ அதைக் கேட்பாயாக. ’உன்னுடைய வலிமையை பிறர் அறியாமல் இருப்பார்களாக;  பிறர் சொல்லும் சொல்லின் உட்கருத்தை நீ அறிந்து கொள்க; ஞாயிற்றின் ஒளிபொருந்திய பகற்பொழுதில் பணிபுரிவோர்க்கு உதவி செய்வாயாக;  மறுநாள் செய்ய வேண்டிய  பணிகளை இரவுப் பொழுதில் ஆராய்ந்து பணியாளர்களுக்கு உரைப்பாயாக. குறைவில்லாத செல்வத்தை உடையவனே! நாட்பொழுதில் உழவுத் தொழிலைs செய்து முடித்த எருது மாலையில் வைக்கோலைத் தின்பதுபோலச், சிவந்த கண்களையுடைய மகளிரோடு சிறிது ஊடிக் கலந்து, அழகிய கள்ளின் தெளிவை அவர்கள் தேர்ந்தெடுத்து நல்ல பாத்திரங்களில்  தர, நீ அருந்துவாயாக.  ஆட்டுக் கடாவை அறுத்துச் சூட்டுக் கோலில் கோத்துச் சுட்ட இறைச்சியைச் சமைத்து, அதனை வேண்டுவோர்க்கு இலையில் வைத்துக் குறையாது கொடுத்து, சோறு வேண்டுவோர்க்கு  இடமளித்து உண்பித்து, நீயும் உண்பாயாக.  நீர்நிலைகள் மிக்க மணல் பரந்த கரையில் இருக்கும் காடுகளில் அமைக்கப்பட்ட வெறியாடல் களங்களில் இனி இடமில்லை என்னுமாறு  நிறுத்தப்பட்ட ஆடுகளைப் போல், சாதல் உண்டு என்பது உண்மை; அது பொய்யன்று.’

 

சிறப்புக் குறிப்பு: வெறியாடல் களங்களில் நிறுத்தப்பட்ட ஆடுகள் கொலை செய்யப்படுவது உறுதி. அதுபோல் மக்கள் இறப்பதும் உறுதி என்ற கருத்தைப் புலவர் கோதமனார் வலியுறுத்துகிறார்.

No comments: