Saturday, December 15, 2012

368. பாடி வந்தது இதற்கோ?


368. பாடி வந்தது இதற்கோ?

பாடியவர்: கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 62-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்.
பாடலின் பின்னணி: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்றும் அழைக்கப்பட்டான். அவன் கரிகால் வளவனின் மகன் மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பளை மணம் புரிந்து கொண்டதாகச் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். வேற்பஃறடக்கை என்பவன் கரிகால் வளவனின் மற்றொரு மகன் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். என்ன காரணத்தினாலோ, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவன் உறவினனாகிய வேற்பஃறடக்கைக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில் இருமன்னர்களும் இறந்ததாகக் கூறப்படுகிறது.

போரில் வெற்றிபெற்ற மன்னன், போர்க்களத்திற்கு வந்து தன்னைப் புகழந்து பாடிய பாணர்களுக்கும் பொருநர்களுக்கும், தோல்வி அடைந்த மன்னனுடைய யானை, தேர், குதிரை முதலியவற்றைப் பரிசாக அளிப்பது சங்க காலத்தில் மரபாக இருந்தது. அம்மமரபிற்கேற்பப், பொருநன் ஒருவன், ’இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போரில் வெற்றி பெறுவான்; அவனிடம் பரிசாக யானை, தேர், குதிரை முதலியவற்றைப் பெறலாம்.’ என்று எண்ணிப் போர்க்களத்திற்கு வந்தான். ஆனால், போர்க்களத்தில் இரு மன்னர்களும் புண்பட்டு இறக்கும் தருவாயில் இருந்ததால், வெற்றி பெற்றவரும் இல்லை; தோல்வி அடைந்தவரும் இல்லை. அதுமட்டுமல்லாமல், போரில் யனைகள், தேர்கள், குதிரைகள் எல்லாம் அழிந்தன.  ஆகவே, பரிசு பெறலாம் என்று எதிர்பார்த்து வந்த பொருநன் ஏமாற்றம் அடைந்தான். அவனுடைய, ஏமாற்றத்தைக் கண்ட இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், தன் கழுத்தில் இருந்த மணிமாலையைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளுமாறு பொருநனுக்குக் குறிப்பால் உணர்த்தினான். அந்தக் காட்சியைக் கண்ட புலவர் கழாத்தலையார், இமயவரம்பனின் செயலை இப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளார்.


திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மறக்கள வழி. அரசனை உழவுத் தொழில் புரியும் வேளாளனோடு ஒப்பிட்டுக் கூறுதல்.

களிறு முகந்து பெயர்குவம் எனினே,
ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்
கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே,
கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி                      5

நெடும்பீடு அழிந்து நிலம்சேர்ந் தனவே;
கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே,
மெய்ந்நிறை வடுவொடு பெரும்பிறி தாகி
வளிவழக் கறுத்த வங்கம் போலக்
குருதியம் பெரும்புனல் கூர்ந்தொழிந் தனவே, யாங்க   10

முகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து
ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ!
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்                  15

பாடி வந்த தெல்லாம் கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்ததோள்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே.


அருஞ்சொற்பொருள்: 1. முகந்து = நிரம்பப் பெற்று; பெயர்தல் = போதல். 2. ஒளிறுதல் = விளங்குதல்; மழை = நீருள்ள மேகம். 3. கைம்மா = யானை; கணை = அம்பு. 4. கொடுஞ்சி = கொடிஞ்சி = தேரின் முன்பாகத்தில் உள்ள அலங்கார உறுப்பு (தாமரை மொட்டுப் போல் உள்ள தட்டு). 5. கடு= விரைவு; பரிதல் = ஓடுதல்; மான் = குதிரை; வாங்கு = வளைவு; வயின் = இடம்; ஒல்குதல் = தளர்தல், கெடுதல். 6. பீடு = வலிமை. 7. கொய்தல் = அறுத்தல்; சுவல் = குதிரையின் கழுத்திலுள்ள மயிர்; புரவி = குதிரை. 8. பெரும் பிறிது = இறப்பு. 9. அறுத்தல் = இல்லாமற் செய்தல்; வங்கம் = மரக்கலம் (படகு). 10. கூர்தல் = மிகுதல் (நிறைதல்); யாங்க = அவ்வாறாக. 11. முகவை = கொடுக்கும் பொருள் (பரிசு); உகவை = மகிழ்ச்சி. 13. அழி = வைக்கோல்; ஆள் அழி = ஆளாகிய வைக்கோல்; படுத்தல் = சேர்ப்பித்தல். 14. கடா = யானை மதம். 15. தெடாரி = தடாரிப் பறை; தெண்கண் = தெளிந்த இடம்; தெளிர்ப்ப = ஒலிக்க; ஒற்றி = அடித்து (இசைத்து). 16. கோடியர் = கூத்தர். 17. முழவு = முரசு, பறைப்பொது; மருள் = போன்ற; மிடைதல் = செறிதல், கலத்தல். 18. அரவு = பாம்பு; உறழ = போன்ற; ஆரம் = மாலை; முகக்குவம் = பெறுவோம் (பெறலாம்).

கொண்டு கூட்டு: உழவ, களிறு தொலைந்தன; தேர் நிலம் சேர்ந்தன; புரவி கூர்ந்தொழிந்தன; பாடி வந்ததெல்லாம் ஆரம் முகக்குவம் என்று போலும் எனக் கூட்டுக.

உரை: வாளாகிய ஏரையுடைய உழவனே (வாளால் வெற்றிபெறும் வேந்தே)! யானைகளைப் பெறலாம் என்று நினைத்து வந்தால், ஒளியுடன் கூடிய மேகங்களைத் தடுக்கும் மலைபோன்ற யானைகளெல்லாம் அம்புபட்டு இறந்து கிடக்கின்றன. கொடிஞியையுடைய தேர்களைப் பெறலாம் என்று நினைத்து வந்தால், விரைந்து செல்லும் குதிரைகள் வளைவான பாதைகளில் சென்றதால் நெடிய தேர்கள் வலிமை இழந்து, அழிந்து நிலத்தில் கிடக்கின்றன.  அழகாக நறுக்கபட்ட பிடரி மயிருள்ள குதிரைகளைப் பெறலாம் என்று நினைத்து வந்தால், உடலெல்லாம் புண்களோடு இறந்து, அவை காற்றில்லாத கடலில் உள்ள மரக்கலங்கள் போல் குருதி வெள்ளத்தில் கிடக்கின்றன. அவ்வாறு, பெறுவதற்கு எதுவும் இல்லாததால், உள்ளத்தில் மகிழ்ச்சியின்றி, இரப்போர் வருந்தும் போர்க்களத்தில், காலாட்படையைச் சேர்ந்த வீரர்களின் உடல்கள், யானைகளால் ஒதுக்கப்பட்டு, வைக்கோற் போர்போல் குவிந்து கிடக்கின்றன. மதமுள்ள யானையின் கால்தடம் போன்ற தடாரிப் பறையை ஒலித்து இசைத்துப் பாடி வந்ததெல்லாம், கூத்தர்களின் முழவு போன்ற, அழகிய மணிகளால் செய்யப்பட்ட   மணிமாலைகள் செறிந்த உன்னுடைய தோளில் கிடக்கும் பாம்பு போன்ற மாலையைப் பெறுவதற்குத்தான் போலும். 

No comments: