365. நிலமகள் அழுத காஞ்சி!
பாடியவர்: மார்க்கண்டேயனார்.
இவரை பற்றிய செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. என்றும் பதினாறு வயதினராக இருந்த சிவபக்தர்
மார்க்கண்டேயரும் இப்புலவரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். ஆனால், அதற்கு ஏற்ற சான்றுகள்
எதுவும் காணப்படவில்லை. இப்பாடலை இயற்றியவர் மாக்கடையனார் என்றும் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ’இவ்வுலகில்
பெருமையுடன் வாழ்ந்த வேந்தர் பலரும் இறந்தும், நான் மட்டும் இறவாமல் இருக்கின்றேனே
என்று நிலமகள் வருந்துவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: பெருங் காஞ்சி. நிலையாமையைக் கூறுதல்.
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப் 5
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும் 10
உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே.
அருஞ்சொற்பொருள்:
1.
மயங்கல் = கலங்குதல்; இரு = கரிய; கருவி = மேகம்; விசும்பு = ஆகாயம்; முகன் = முகம்.
3. வளி = காற்று; நீத்தம் = பரப்பு, மிகுதி. 4. குறடு = அச்சுக்கோக்கும் இடம்; வயங்குதல்
= விளங்குதல்; ஆரம் = ஆரக்கால். 5. திகிரி = ஆழிப்படை; சமத்து = ஆற்றல். 6. முன்பு
= வலிமை. 8. விலைநலப் பெண்டிர் = விலை மகளிர்; மீக்கூறல் = புகழ்தல், வியத்தல்.
10. காஞ்சி = நிலையாமை.
கொண்டு
கூட்டு: விசும்பு முகனாக, சுடர் கண்ணாகக் கொண்ட நிலமகள் முன்னோர் செல்லவும் செல்லாது, விலைநலப்
பெண்டிரின் பலர் மீக்கூற யான் உள்ளேன் வாழியர் என அழுத காஞ்சியும் உண்டென உணர்ந்திசினோர்
உரைப்பர் எனக் கூட்டுக.
உரை: ’இடம் விட்டு
இடம் பெயரும் இயல்புடைய காற்றும் செல்லாத இடமாகிய, எவ்வுயிரும் செல்லுதற்கரிய ஆகாயத்தைக்
கடந்து, வயிரம் வைத்து இழைத்த சக்கரத்தின் குடத்தில் விளங்கும் மணிகள் பொருந்திய ஆரக்கால்களையுடைய
பொன்னாலான ஆழிப்படையை போரின் முன்னே ஆற்றலுடன் செலுத்திப் பகைவரை அழித்து, மேலே பகைவர்
வாராததால், போரில் மிகுந்த வலிமையையுடைய முன்னோர்களாகிய வேந்தர்கள் விண்ணுலகுக்குச்
செல்லக் கண்டும், உடன் செல்லாது, தன் நலத்தைப் பிறர்க்கு விற்கும் விலைமகளிரைப் போல,
பலர் என் நலத்தைப் பாராட்டிப் புகழ, நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேனே’ என்று
கரிய மேகங்கள் கலந்த ஆகாயத்தை முகமாகவும், ஞாயிறும் திங்களும் இரு கண்களாகவும் கொண்டு,
பலவகையிலும் மாட்சிமை அடைந்த நிலமகள் தன் நிலைமையை நினைத்து வருந்திக் காஞ்சிப் பண்
பாடி அழுததாக அறிவுடையோர் கூறுவர்.
சிறப்புக் குறிப்பு:
விலைமகளிர்
செல்வந்தருடன் சேர்வதைப்போல் நிலமகள் வலிமை மிக்க வேந்தர்களுக்கு உரியவளாக இருப்பதால்
நிலமகள் விலைமகளிருக்கு ஒப்பிடப்பட்டாள்.
No comments:
Post a Comment